மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு எத்தனை மனைவிகள் தெரியுமா? | How many wives did Arjuna had in the Mahabharata? | mahabharata Episode 22

                மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு எத்தனை மனைவிகள் தெரியுமா? 

How many wives did Arjuna had in the Mahabharata?

            பாண்டவர்கள் தங்களுக்குள் ஏற்ற சபதத்தை மீறி யுதிஷ்டிரனும், திரௌபதியும் தனிமையில் இருந்த அறையில் நுழைந்து தனது ஆயுதத்தை அர்ஜுனன் எடுத்துக் கொண்டு வந்ததை (The Pandavas vow not to cause trouble between the Pandavas and Draupadi ) பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது அர்ஜுனன் வனவாசத்தின்போது மணந்த மனைவிகள் பற்றி பார்ப்போம்.

 

வனவாசம் செல்லும் அர்ஜுனன் (Arjuna going into exile) :

            அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அந்த மாடு மேய்ப்பவருடன்  தனது ரதத்தில் ஏறி, திருடர்கள் சென்ற திசை நோக்கி சென்றான். பிறகு தனது கணைகள் கொண்டு அவர்களைக் கடுமையாகத் தாக்கி அவர்கள் திருடிச்சென்று ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டு நகரம் திரும்பினான். அவன் திருடர்கள் அனைவரையும் அடக்கிவிட்டு வெற்றியோடு திரும்பியதைக் கண்ட பிரஜைகள் அனைவரும் அவனை போற்றினர். அரண்மனையை அடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு நாம் அனைவரும் முன்பு எடுத்த சபதத்தை மீறி நீங்கள் தனிமையில் இருக்கும் அறைக்குள் நான் வந்தேன்! ஆகையால் அந்த சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு நான் இப்போது கானகம் செல்ல தயாராகிறேன்! என்றான்.

            அதற்கு யுதிஷ்டிரர், "நீ அப்படி ஒன்றும் பெரிய தவறை இழைக்கவில்லை அர்ஜுனா! நானும் திரௌபதியும் பேசிக்கொண்டிருக்கையில் தானே நீ வந்தாய்! இதில் பெரிய தவறு எதுவும் இல்லை! அண்ணனும் அவனது மனைவியும் இருக்கும் அறைக்கு ஒரு தம்பி எப்போது வேண்டுமானாலும் வரலாம்! அது தவறு கிடையாது" என்றான். அதற்கு அர்ஜுனன், "நாம் சபதம் மேற்கையில் இது பற்றியெல்லாம் பேசவில்லை! ஆகையால் நாம் மேற்கொண்ட சபதத்தின்படி நான் 12 ஆண்டுகள் கானகம் செல்கிறேன்! எனக்கு விடை கொடுங்கள்! என்றான்". அங்கிருந்த சகோதரர்களிடமும், திரௌபதியிடமும் கனத்த மனதோடு விடைபெற்று கானகம் செல்லத் துவங்கினான் அர்ஜுனன். 

அர்ஜுனன் மேல் காதல் கொண்ட உலுப்பி (Uluppi in love with Arjuna) :

அர்ஜுனன் தனது பயணத்தை வெகுதூரம் தொடர்ந்தான். கங்கை உற்பத்தியாகும் இடம் வரை அவன் பயணித்து அங்கேயே சிலகாலம் தங்கினான். அந்த சமயம் ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக் கொண்டிருக்கையில் அவன் மேல் தீராத காதல் கொண்ட மன்னனின் மகளான உலுப்பி என்பவள் அவனைக் நீருக்கு அடியில் இழுத்துக் கொண்டு தனது தந்தையின் மாளிகைக்குச் சென்றாள். அந்த மாளிகையை அடைந்த உடன் அவளைப் பற்றிய விபரங்களை அவரிடமே கேட்டறிந்தான் அர்ஜுனன். அதோடு தன்னை எதற்காக இங்கு இழுத்து வந்தாய் என்றும் அவன் அவளிடம் கேட்டான். அதற்கு பதிலளித்த உலுப்பி, இளவரசே நீங்கள் நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கையில் உங்களின் அழகைக் கண்டு, நான் மயங்கி, உங்கள் மீது காதல் கொண்டு, இப்போதே உங்களோடு இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்காகவே நான் இங்கு வந்தேன்! என்றாள்.

அர்ஜுனனுக்கு உலுப்பி கொடுத்த வரம் (Uluppi's boon to Arjuna) :

            அதைக் கேட்ட அர்ஜுனன், "அழகில் சிறந்த பெண்ணே நான் 12 ஆண்டுகள் ஒரு பிரம்மச்சாரியாக காட்டில் வாழ வேண்டும் என்று சபதம் ஏற்றுள்ளேன்! இந்த நிலையில் உன்னோடு என்னால் இல்லற வாழ்வில் ஈடுபட இயலாது! என்றான்". அதைக்கேட்ட உலுப்பி, "நீங்கள் இப்போது என்னோடு சேரவில்லை என்றால், நான் இப்போதே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்! ஒரு மங்கையின் மனதை காயப்படுத்தி விட்டு நீங்கள் இங்கிருந்து செல்ல மாட்டீர்கள் என்று நான் எண்ணுகிறேன்! என்னோடு சேர்ந்து எனக்கு உயிர் பிச்சை அளித்து பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள்! என்றாள்". செய்வதறியாது தவித்த அர்ஜுனன் வேறு வழியின்றி உலுப்பி கூறிய அனைத்தையும் செய்தான். அதோடு அன்றைய இரவுப் பொழுதை அவன் அவளோடு சேர்ந்து கழித்தான். விடிந்ததும் மீண்டும் தான் நீராடிக் கொண்டிருந்த அதே இடத்திற்கு அர்ஜுனனை கொண்டு வந்து விட்ட உலுப்பி, நீரில் அவனை யாரும் வெல்ல முடியாதபடி ஒரு வரத்தினை அவனுக்கு அளித்துவிட்டு உலுப்பி தனது மாளிகைக்கு திரும்பினாள். 

சித்ராங்கதை மீது காதல் கொண்ட அர்ஜுனன் (Arjunan in love with Chithrangathai) :

            அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து அர்ஜுனன் பல முனிவர்களை சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றுக்கொண்டு கலிங்க நாட்டை கடந்து பயணித்து மணிபுரம் என்ற நாட்டை அடைந்தான். அங்கு மணிபுர நாட்டு இளவரசியான சித்ராங்கதையை கண்ட அர்ஜுனன், அவள் மீது காதல் கொண்டு மன்னனிடம் பெண் கேட்டுச் சென்றான். தான் யார் என்பதையும், தன் குலம் பற்றியும் அவன் அந்த மன்னனிடம் எடுத்துரைத்தான். அதையெல்லாம் கேட்ட மணிபுர நாட்டு மன்னன், "நீங்கள் எனது மகளை மணக்க எனக்கு ஒரு நிபந்தனை உள்ளது! அதற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் எனது மகளை தாராளமாக மணமுடிக்கலாம் ! என்றான்". உடனே அந்த நிபந்தனை பற்றி கேட்டான் அர்ஜுனன். 

            உடனே அந்த மன்னன் "எனது முன்னோர்கள் சிவனிடம் பெற்ற வரத்தின்படி எங்களது பரம்பரையில் அனைவருக்கும் ஒரு குழந்தைதான் பிறக்கும்! அதன்படி எனது முன்னோர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது! ஆனால் எனக்கோ பெண் குழந்தை பிறந்தது! அவளை நான் என் மகன் போலவே வளர்த்து வருகிறேன்! திருமணத்திற்கு பின் அவள் மூலம் பிறக்கும் குழந்தையையே இந்த நாட்டின் அரசனாக எண்ணி உள்ளேன்! ஆகையால் திருமணத்திற்கு பிறகு அவளுக்குப் பிறக்கப் போகும் மகன்களில் ஒருவனை நீ எனக்கு வரதட்சணையாக கொடுக்கவேண்டும்! 

            அவனே எனக்குப் பிறகு இந்த நாட்டை ஆள்வான்! என்றான்". மன்னனின் நிபந்தனைகளை ஏற்ற அர்ஜுனன் சித்திராங்கதையை மணம் முடித்து, அங்கேயே மூன்று வருடகாலம் வாழத் துவங்கினான். அப்போது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு பப்ருவாகனன் என்று பெயர் சூட்டப்பட்டது. அர்ஜுனன் அந்த மன்னனுக்கு கொடுத்த வாக்குப்படி தனது மகனை மன்னனிடம் ஒப்படைத்ததோடு, தனது மகனுக்கு துணையாக தனது மனைவியையும் அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தான். 

சுபத்திரை மீது காதல் கொண்ட அர்ஜுனன் (Arjuna in love with Subhadra):

            அப்போது பிரபாசம் என்ற இடத்தை அடைந்த அவன் அங்கே கிருஷ்ணரை சந்திக்க நேர்ந்தது. பிறகு கிருஷ்ணரின் அழைப்பையேற்று அவன் துவாரகைக்கு சென்றான். கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரையை கண்டு அவள் மேல் ஆசை கொண்டான். இதை அறிந்த கிருஷ்ணர் அது குறித்து அவனிடம் கேட்டார். அதற்கு அர்ஜுனன் "சுபத்திரையின் தோற்றத்தைக் கண்டு நான் என்னை மறந்தேன்! அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள எண்ணுகிறேன்! அவளை நான் திருமணம் செய்து கொள்ள என்ன வழி என்று நீங்களே கூறுங்கள்! என்றான்". உடனே கிருஷ்ணர் "எங்களது வழக்கப்படி சுயம் வரம் மூலமாகவே பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான கணவனை தேர்ந்தெடுப்பர்! சுபத்திரையின் மனதில் என்ன உள்ளது என்பதை நான் அறியேன்! ஆகையால் அவளுக்கு சுயம்வரம் நடப்பதற்கு முன்பே நீ அவளை கடத்தி சென்றுவிடு! என்றார்". உடனே அவர்கள் இருவரும் சேர்ந்து இது குறித்து ஆலோசிக்க துவங்கினர்.

சுபத்திரையை கடத்திய அர்ஜுனன் (Subhadra kidnapped by Arjuna) :

            அதோடு இது தொடர்பாக ஒரு செய்தியை தூதுவர் மூலம் தர்மனுக்கு அனுப்பி அவனது சம்மதத்தையும் பெற்றனர். அந்த சமயத்தில் சுபத்திரை மலைக்கு சென்றிருப்பதை அறிந்த அர்ஜுனன் சிறப்பு வாய்ந்த ஒரு தேரில் ஏறி வேட்டைக்குச் செல்வதுபோல் அந்த மலையை நோக்கி சென்றான். அங்கு சுபத்திரையை கண்ட அவன், அவளுக்கு காவலாக இருந்த அனைவரையும் தாக்கிவிட்டு அவளை தனது தேரில் ஏற்றிக் கொண்டு தனது நகரமான இந்திரப்பிரஸ்தம் நோக்கி விரைந்தான். உடனிருந்தவர்கள் அரண்மனையை நோக்கி விரைந்து வந்து இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். 

            அர்ஜுனனை தடுத்து நிறுத்தி சுபத்திரையை மீட்டுவர பலரும் தயாரானார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் அமைதியாகவே இருந்தார். இதை கவனித்த பலராமன் மற்றவர்களிடம், கிருஷ்ணர் தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை நாம் அனைவரும் செய்வோம்! என்றார். பிறகு கிருஷ்ணரிடம் பேசத் துவங்கிய பலராமன் "கோவிந்தா! நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன் அழைப்பை ஏற்று அந்த பாவி அர்ஜுனன் இங்கு வந்தான்! ஆனால் உண்ட வீட்டுக்கே துரோகம் செய்வது போல அவன் நமது சுபத்திரையை கவர்ந்து சென்றுள்ளான்! அவனை நாம் நிச்சயம் கண்டித்தே ஆகவேண்டும்! என்றார்". 

பலராமனுக்கு கிருஷ்ணர் அளித்த அறிவுரை (Krishna's advice to Balarama) :

            பலராமன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட கிருஷ்ணர் தன்னுடைய கருத்தை முன்வைத்தார். அதன்படி "அர்ஜுனன் நம்மை அவமதித்ததாக எண்ண வேண்டாம்! அவன் சுயம்வர கொள்கையில் விருப்பம் இல்லாதவன்! அதனாலேயே அவன் சுபத்திரையை கவர்ந்து சென்றுள்ளான்! அதோடு அவன் அளவற்ற வீரமும், புகழும் கொண்டவன்! அவன் சுபத்திரைக்கு தகுந்த ஒரு மணமகன் ஆவான்! அவனை போரிட்டு வெல்வது என்பது எவராலும் ஆகாத காரியம் என்பதை நான் அறிவேன்! ஆகையால் அவனை தண்டிப்பதற்காக நாம் அவனை துரத்தி சென்றால் அவன் நிச்சயம் நம்மை தோற்கடித்துவிட்டு தனது நகரத்திற்கு சென்று விடுவான்! 

            இதனால் நமக்கு அவமானமே மிஞ்சும்! ஆகையால் அவனை பின் தொடர்ந்து அவரிடம் அமைதியாக பேசி அவனை இங்கு கூட்டி வந்து அவனுக்கும், சுபத்திரைக்கும் திருமணத்தை நடத்தி வைப்பதே சிறந்த முறையாகும்! என்றார் கிருஷ்ணர்". அதை ஒத்துக் கொண்ட அனைவரும் அர்ஜுனனை அழைத்து வந்து அவனுக்கும், சுபத்திரைக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். அதன்பிறகு அவன் சுபத்திரையோடு ஒரு வருட காலம் துவாரகையில் கழித்தான். அதன்பிறகு தனது 12 வருட வனவாச காலத்தில் மீதமிருந்த ஒரு வருடத்தை புஷ்கர் என்ற இடத்தில் கழித்துவிட்டு சுபத்திரையோடு தனது நகரமான இந்திரபிரஸ்தம் அடைந்தான் அர்ஜுனன். 

அபிமன்யுவின் பிறப்பு (Birth of Abhimanyu) :

            சுபத்திரையை திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்த திரௌபதி அவன் மீது பெரும் கோபத்தில் இருந்தாள். அதை அறிந்த அர்ஜுன் அவளை பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தினான். அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தம் சென்ற செய்தியை அறிந்த கிருஷ்ணரும், பலராமரும் அங்கு வந்து பாண்டவர்களுக்கும் தனது தங்கைக்கும் திருமண பரிசு வழங்கினார். ஆயிரக்கணக்கில் குதிரைகள், யானைகள், தங்கத்தேர்கள், பொற்காசுகள் என கிருஷ்ணர் ஏராளமான பரிசு கொடுத்தார். அதன் பிறகு அவர் சில காலம் அங்கேயே தங்கினார். இந்த நிலையில் சுபத்திரை கர்ப்பம் தரித்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அவர்கள் அக்குழந்தைக்கு அபிமன்யு என்று பெயரிட்டனர். அழகிய தோற்றத்தோடு பலம் பொருந்திய ஒரு பயமறியா காளையைப் போல வளர்ந்து வந்தான் அபிமன்யு. 

            அவன் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவனாக இருந்ததால் அபிமன்யு அனைத்து சாஸ்திரங்களையும் கிருஷ்ணரிடமும், அனைத்து போர்க் கலைகளையும் தனது தந்தையான அர்ஜுனனிடமும் கற்றான். அவன் வீரத்திலும், அழகிலும் தனது மாமனான கிருஷ்ணனைப் போல இருந்தான். இதற்கிடையில் தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளை பெற்றேடுத்தாள் திரௌபதி. யுதிஷ்டிரன் மூலம் பிரதிவிந்தனையும், பீமன் மூலம் சூதசேனனையும், அர்ஜுனன் மூலம் சுரூதகர்மனையும், நகுலன் மூலம் சதானிக்கனையும், சகாதேவன் மூலம் சுரூதசேனனையும் அவள் ஈன்றெடுத்தாள். அந்த ஐந்து பிள்ளைகளும் அர்ஜுனனிடம் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து சிறந்த வீரர்களாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பாண்டவர்கள் என்னவெல்லாம் செய்து தங்களது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகிறார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Post a Comment

Previous Post Next Post