அர்ஜுனனுக்கும் இந்திரனுக்கும் இடையே நடந்த மாபெரும் போர் | The great battle between Arjuna and Indra in mahabharata | mahabharata Episode 23

                அர்ஜுனனுக்கும் இந்திரனுக்கும் இடையே நடந்த மாபெரும் போர் 

The great battle between Arjuna and Indra

            அர்ஜுனனின் மனைவிகள் பற்றியும் How many wives did Arjuna had in the Mahabharata?, பாண்டவர்கள் ஐவருக்கும் பிறந்த குழந்தைகள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது இந்த பதிவில் அர்ஜுனனுக்கும் இந்திரா தேவனுக்கும் நடைபெறும் மாபெரும் போர் குறித்து காணலாம்.

 

அக்னி தேவனின் வருகை (Agnideva's arrival):

            யுதிஷ்டிரன் தனது ராஜ்யத்தை சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த சமயம் ஒரு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணரும், அர்ஜுனனும் காண்டவ வன பகுதிக்கு அருகே உள்ள யமுனை நதிக்கரைக்கு தங்களது நண்பர்களோடு சென்று நீரில் விளையாடலாம் என்று எண்ணினர். யுதிஷ்டிரனிடம் இது குறித்து தெரிவித்து விட்டு அவர்கள் அங்கு சென்றனர். சிறிது நேரம் விளையாடிய பிறகு அங்கு இருந்த ஒரு மாளிகைக்கு சென்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பார்ப்பதற்கு பிரகாசம் பொருந்திய அந்தணர் ஒருவர் அங்கு வந்தார். அவரை வரவேற்ற கிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டனர். எனக்கு மிகவும் பசிக்கிறது! ஆகையால் உண்ண உணவு வேண்டும்! என்று கூறினார் அந்தணர். 

அக்னி தேவனுக்கு அர்ஜுனன் அளித்த வாக்கு (Arjuna's vow to Agni Deva) :

            அவர்கள் ஏராளமான உணவைக் கொண்டுவந்து இருந்ததால், அதை அந்த அந்தணருக்கு கொடுத்து பசியாற்றலாம் என்று எண்ணி, உங்களுக்கு எது போன்ற உணவு வேண்டும்? என்று கேட்டனர். எது போன்று கேட்டாலும் நீங்கள் தருவீர்களா? என்றார் அந்த அந்தணர். நிச்சயம் நீங்கள் கேட்கும் உணவை நாங்கள் தருகிறோம்! என்றான் அர்ஜுனன். உடனே அந்த அந்தணர், "நான் தான் அக்னிதேவன்! நான் இந்த வனத்தை உண்ண வேண்டும் என்று பல வருடங்களாகக் காத்துக் கிடக்கிறேன்! இந்த காண்டவ வனத்தை உண்ண நான் பலமுறை முயற்சித்தும் இந்திரன் அந்த முயற்சிக்கு குறுக்கே நின்று பெரும் மழையை பொழியச் செய்து இந்த வனத்தை காத்து வருகிறார்! அகிலத்தில் நீங்கள் இருவரும் மாபெரும் வீரர்கள் என்பதை நான் அறிவேன்! அதனால் அந்த இந்திரனை தடுத்து நிறுத்தி இந்த காட்டையும் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் முழுமையாக நான் உன்ன நீங்கள் உதவ வேண்டும்"! என்றான் அக்னி. 

            தாங்கள் அந்த அந்தணருக்கு உணவு அளிப்பதாக வாக்கு கொடுத்ததால் அர்ஜுனனும், கிருஷ்ணனும் அந்த அந்தணர் கூறியதற்கு ஒப்புக்கொண்டனர். அதோடு தன்னிடம் இப்போது போர் செய்யும் அளவிற்கு எந்த ஆயுதமும், ரதமும் இல்லை என்றும், அதே போல் கிருஷ்ணரும் எந்த ஒரு பெரிய ஆயுதத்தையும் தற்போது கொண்டு வரவில்லை என்றும், அவைகள் தங்களிடம் இருந்தால் மட்டுமே இந்திரனை எதிர்க்க முடியும் என்றும் அர்ஜுனன் கூறினான். 

அர்ஜுனனுக்கு காண்டீபத்தை வழங்கிய அக்னிதேவன் (Arjuna got the Gandiva from Agni) :

            உடனே அக்னிதேவன் வருணனை அங்கு வரச் செய்தார். அங்கு வந்த வருண தேவன் என்னை அழைத்த காரணம் என்ன? என்று அக்னியிடம் கேட்டான். நேரத்தை கடத்த விரும்பாத அக்னி, மன்னன் சோமனிடம் பெற்ற காண்டீபம் என்ற வில்லையும், அம்பை வைக்கும் கூடையையும், குரங்குகூடி கொண்ட ரதத்தையும் எனக்கு கொடு! என்று கேட்டான். உடனே வருணன் அதனை அவனிடம் கொடுத்தான். முதலில் காண்டீபத்தை எடுத்து அர்ஜுனனிடம் கொடுத்தான் அக்னி. காண்டீபத்தை கையில் ஏந்தியவுடன் அர்ஜுனனுக்கு ஒரு புது தெம்பு வந்தது போல இருந்தது. அந்த வில்லானது புத்தம் புதிதாக, வில்லுக்கே உரிய அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்தது. அதோடு அது அனைத்து ஆயுதங்களுக்கும் தலைமையானதாகவும், எல்லா ஆயுதங்களையும் அழிக்கும் சக்தியையும் பெற்றிருந்தது. 

            ஒரு வில் பலநூறு வில்களுக்கு சமமானது போல இருந்தது. இதை கண்ட அர்ஜுனன் ஆச்சரியம் கொண்டான். அதன்பிறகு அம்பு வைக்கும் கூடையையும், அனுமனை கொடியில் கொண்ட ரதத்தையும் கொடுத்தான் அக்னி. அந்த ரதம் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்ததாக இருந்தது. அதோடு அதில் சக்தி வாய்ந்த பல ஆயுதங்கள் இருந்தது. இவை அனைத்தையும் பெற்ற பிறகு அக்னி தேவனுக்கு உதவத் தயாரானான் அர்ஜுனன். பிறகு நெருப்பை உமிழும் சக்கராயுதத்தையும், கௌமோதகி என்னும் கதாயுதத்தையும் அக்னிதேவன் கிருஷ்ணரிடம் கொடுத்தான். 

கானகத்தை எரிக்கும் அக்னிதேவன் (Agni deva burning Khandavaprastha's forest) :

            உடனே கிருஷ்ணனும், அர்ஜுனனும் அக்னி தேவனிடம், "நீ உனது விருப்பப்படி கானகம் முழுவதையும் உண்டு உனது பசியைத் தீர்த்துக் கொள்! நாங்கள் இருவரும் உனக்கு உறுதுணையாக நிற்கிறோம்" என்றனர். உடனே அக்னிதேவன் 7 சுடர்களால் அந்த கானகத்தை சூழ்ந்து அதை உட்கொள்ளத் துவங்கினான். அந்த வனத்தில் வாழ்ந்த உயிரினங்கள் அக்னியின் வெப்பத்தால்  பொசுங்கின. அதிலிருந்து தப்பிக்க நினைத்த சில உயிரினங்களையும், பறவைகளையும் அர்ஜுனன் தனது வில்லைக் கொண்டு மாய்த்து அக்னிக்கு இறையாக்கினான். 

            இதனால் அந்த கானகத்தில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் கதறியது. பறவைகளும், மிருகங்களும் எழுப்பிய ஒலியானது  மிகக் கொடூரமாக இருந்தது. அந்த அடர்ந்த கானகத்தில் பற்றிய தீயானது வானுயர எரிந்தது. இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் இந்திரனிடம் சென்று, "ஏன் அக்னிதேவன் இந்த கானகத்தை இப்படி கொடூரமாக எரிக்கிறார்? உலகம் அழிவதற்கான நேரம் துவங்கியதா? என்றார்கள்". 

இந்திரனை தடுத்த அர்ஜுனன் (Arjuna stopped Indra):

            உடனே இந்திரன் அந்த தீயை அணைக்க எண்ணி அங்கு கடும் மழையை பொழியச் செய்தார். ஆனால் அந்த மழையானது கானகத்தை அடைவதற்கு முன்பே வானுயர எரியும் தீயால் ஆவியாகி போனது. இதைக் கண்ட இந்திரன் மிகக்கடுமையான மழையை பொழியச் செய்து அந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதைக் கண்ட அர்ஜுனன் காண்டீபத்தில் கணைகளை தொடுத்து திவ்ய அஸ்த்திரங்கள் மூலம் மழைத் துளிகள் கீழே இறங்காதது போல அந்த கானகத்தின் மீது ஒரு பெரிய குடை அமைத்தான். இதனால் மீண்டும் அந்த தீ வேகமாக எரிய துவங்கியது. அத்தீயில் நாகர்களின் தலைவரான தக்சகனின் மனைவியும், அவனது மகனான அஸ்வசேனனும் மாட்டிக்கொண்டு தவித்தனர். 

அஸ்வசேனனை காப்பாற்றும் இந்திரன் (Indra saves Aswasena) :

            தனது கணைகளைக் கொண்டு அர்ஜுன் அனைத்து பாதைகளையும் அடைத்து இருந்ததால், அவர்களால் வனத்தை விட்டு வெளியேற முடியவில்லை. அந்த சமயத்தில் தக்சகனும் வனத்தில் இல்லை. இந்த நிலையில் அந்த கடும் தீயிலிருந்து தனது மகனைக் காக்க எண்ணிய தக்சகனின் மனைவி அவளது பெரும் வாயை திறந்து முதலில் அஸ்வசேனனின் தலையை விழுங்கினாள். பிறகு படிப்படியாக அவனது வால்பகுதி வரை விழுங்கிவிட்டு அங்கிருந்து தப்பிப்பதற்காக மேல்நோக்கி எழுந்தாள். 

            இதை கவனித்த அர்ஜுனன் தனது கணையைக் கொண்டு அந்தப் பாம்பின் தலையை கொய்தான். இதைக்கண்டு பெரும் சினம் கொண்ட இந்திரன் தனது நண்பனின் மகனை எப்படியாவது காக்க வேண்டும் என்று எண்ணி பெரும் புயல் காற்றை அங்கே வீசச் செய்தார். இதனால் அர்ஜுன் நிலை தடுமாறினான். அந்த சமயத்தில் இந்திரனின் முயற்சியால் தக்சகனின் மகனான அஸ்வசேனன் தப்பித்தான். 

இந்திரனோடு மோதும் அர்ஜுனன் (Arjuna clashes with Indra) :

            இதை கண்ட அர்ஜுனன் பெரும் சினம் கொண்டு இந்திரனோடு மோத தயாராகி தனது அஸ்திரங்கள் கொண்டு வானத்தை மறைத்தான். இந்திரனும் அர்ஜுனனை நோக்கி ஆயுதங்களைப் பிரயோகித்தான். அதோடு மழையின் வலிமையும் கூட்டினார். ஆனால் அர்ஜுனனோ வயவ்யா என்னும் தெய்வீக அஸ்திரத்தை வானத்தை நோக்கி எய்தினான். இதனால் மழை முழுவதும் கட்டுப்பட்டு அங்கு சூரிய ஒளி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அக்னிதேவன் விஸ்வரூபம் கொண்டு அந்த கானகத்தை வேகமாக பொசுக்கினான். அர்ஜுனனால்தான் இந்த காடு அழிகிறது என்பதை அறிந்த பறவைகளும், விலங்குகளும் அவனைத் தாக்க முற்பட்டன.

            அதோடு அங்கிருந்த பாம்புகளும் அவர் மீது விஷத்தை கக்கின. ஆனால் அந்தப் பாம்பு மற்றும் விலங்குகளின் முயற்சி அர்ஜுனனிடம் பலிக்கவில்லை அதனைத் தொடர்ந்து அசுரர்களும், ராட்சசர்ளும், நாகர்களும் சேர்ந்து அர்ஜூனை தாக்கினர். ஆனால் அவர்கள் அனைவரையும் அவன் தனது அஸ்திரம் கொண்டு வீழ்த்தினான். கிருஷ்ணரும் ஒரு பக்கம் தனது ஆயுதம் கொண்டு அசுரர்களை வீழ்த்தினார். காட்டுத்தீயில் ஏராளமான உயிர்கள் பொசுங்கி கொண்டிருப்பதை கண்ட இந்திரன் அர்ஜுனனை கடுமையாக தாக்க முடிவு செய்து தனது படையோடு அர்ஜுனனைத் தாக்க விரைந்து வந்தார். 

தேவர்களை விரட்டியடித்த அர்ஜுனன் (Arjuna, who chased the gods away) :

            அந்த தாக்குதலை எதிர்நோக்கி காத்திருந்தான் அர்ஜுனன். அவனுக்கு பக்கபலமாக கிருஷ்ணர் அங்கு இருந்தார். தேவர்கள் படை அர்ஜுனனைப் விரைந்து தாக்கியது. ஆனால் அவனோ சிறப்பாக போரிட்டு அனைவரையும் அச்சமடையச் செய்தான். பெரும் சினம் கொண்ட இந்திரன் கற்களை மழையாகப் பொழியச் செய்தான். ஆனால் அந்த கற்கள் அனைத்தையும் தனது கணைகள் கொண்டு தடுத்தான் அர்ஜுனன். அர்ஜுனன் வீரத்தால் தேவர்கள் படை பின்வாங்கியது. அப்போது அங்கு அசரீரி ஒன்று ஒலிக்கத் துவங்கியது. 

            அதன்படி "இந்திர தேவனே! அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் உன்னால் வெல்ல முடியாது ! உன்னால் மட்டுமல்ல, எந்த மனிதர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும் கூட அவர்களை வெல்ல முடியாது! ஆகையால் நீ இங்கிருந்து செல்வதே உனக்கு நல்லது! இந்த காண்டவ வனம் இப்போது அழிய வேண்டும் என்பது முன்பே எழுதப்பட்ட விதி! என்றது அந்த அசரீரி". இதைக் கேட்ட இந்திரன் தனது போரை கைவிட்டான். அவனைத் தொடர்ந்து அனைவரும் தேவலோகம் திரும்பினர். பிறகு அந்த காண்டவ வனத்தை பெரும் ஆற்றல் கொண்டு ஏரித்தான் அக்னி தேவன். அப்போது அதிலிருந்து மயன் என்னும் அசுரன் தப்புவதைக் கண்ட கிருஷ்ணர் அவனைத் தாக்க தயாரானார். அந்த சமயத்தில் "அர்ஜுனா என்னை காப்பாற்று" என்றான் மயன். கருணை உள்ளம் கொண்ட அர்ஜுனன் மயன் கூறியதைக் கேட்டவுடன் கவலைப்படாதே! என்று கூறியதால் கிருஷ்ணரும், அக்னியும் மயனை ஒன்றும் செய்யவில்லை.

அர்ஜுனனுக்கு இந்திரன் கொடுத்த வரம் (Arjuna's boon from Indra):

            பிறகு அந்த காண்டவ வனமானது முழுமையாக எரிக்கப்பட்டது. அந்த மிகப்பெரிய தீயிலிருந்து தப்பியவர்கள் ஆறுபேர் மட்டுமே. தக்சகனின் மகனான அஸ்வசேனன், மயன் என்னும் அசுரன் மற்றும் மந்தபாலர் என்னும் முனிவரின் பிள்ளைகளான 6 சாரங்க பறவைகள் ஆகிய அறுவர் மட்டுமே அந்தத் தீயிலிருந்து தப்பினர். அந்த வனமானது முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் காண இந்திரதேவன் அங்கு விரைந்து வந்தான். இந்த உலகில் உள்ள மனிதர்கள் எவராலும் செய்ய முடியாத அரிய காரியத்தை நீங்கள் உங்கள் வீரம் கொண்டு செய்து காட்டினீர்கள்! உங்களது ஆற்றலைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன்! உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள் நான் தருகிறேன்! என்றான் இந்திரன். 

            உடனே அர்ஜுனன், இந்திரனை வணங்கி விட்டு உங்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நீங்கள் எனக்கு தர வேண்டும்! அதுவே நான் விரும்பும் வரம்! என்றான். இதைக் கேட்ட இந்திரன், "உன்னிடம் கிருஷ்ணர் எப்போது மனநிறைவு கொள்கிறாரோ அப்போது எனது ஆயுதங்கள் அனைத்தையும் நான் உனக்கு தருவேன்! என்றான்". உடனே கிருஷ்ணர் "நான் எப்போதும் அர்ஜுனனுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும் அதுவே நான் உங்களிடம் வேண்டும் வரம்" என்றார். அந்த வரத்தை கிருஷ்ணருக்கு அளித்த இந்திரதேவன் அங்கிருந்து சென்றான். அர்ஜுனன் மயன் என்னும் அசுரனை காப்பாற்றியதால் அர்ஜுனனுக்கு அவன் என்ன கைமாறு செய்தான்? அடுத்தடுத்து என்னவெல்லாம் நிகழ்ந்தது? என்பதை அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்.


Post a Comment

Previous Post Next Post