மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரின் வரலாறு | History of Dhritarashtra, Pandu and Vidura in Mahabharata | Mahabharatham Episode 4

 மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரின் வரலாறு

(History of Dhritarashtra, Pandu and Vidura in Mahabharata )

            முந்தைய பகுதியில் ஷிகண்டியின் வரலாறு குறித்துப் பார்த்தோம். தற்போது சந்திர குலம் தழைக்க பீஷ்மரும், சத்யதேவியும் மேற்கொள்ளும் வழிமுறைகளையும் , திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோர் எப்படி பிறக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.  

சூரியதேவனை எதிர்த்த பீஷ்மர் :

            முந்தைய பதிவில் அம்பை ஷிகண்டினியாகப் பிறந்து முழுவதும் ஷிகண்டியாக மாறியதைப் பற்றிப் பார்த்தோம். இப்போது பீஷ்மரின் கதைக்கு வருவோம். விசித்திரவீரியன் அம்பையின் தங்கைகள் இருவரையும் மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்கிறான். ஆனால் சில காலத்தில் உடல் நலக்குறைவு காரணமாக விசித்திரவீரியனும் இறந்து போகிறான். அதுவரை விசித்திரவீரியனுக்கு குழந்தை பிறக்காததால் சந்திர வம்சத்தை தழைக்கச் செய்ய யாருமற்ற நிலை உருவாகிறது. இதனால் பீஷ்மரும், சத்யவதியும் கடும் துயரத்திற்கு உள்ளாகின்றனர். தன் தம்பியின் உயிரை பறித்து தனது குலம் தழைக்க தடையாய் இருந்த எமன் மீது கடும் சினம் கொண்ட பீஷ்மர் தன் வில்லைக் கையில் ஏந்தி சூரிய தேவனுக்கு சவால் விடுகிறார். 

            சூரியதேவா உடனே உன் புதல்வன் எமரிடம் சென்று என் தம்பியின் உயிரை திரும்பத் தரச்சொல்! இல்லையேல் என் கணைகள் மூலம் காரிருளை உருவாக்கி உன்னை அதில் மறையச் செய்வேன் என்கிறார். இதைக் கேட்டு நடுங்கிய சூரியதேவன் உடனே பீஷ்மரின் முன் தோன்றி என்ன காரியம் புரிய துணிந்தாய் பீஷ்மா? நீ செய்யும் செயலால் அகிலமே இருளில் மூழ்கும் என்கிறார். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. இந்த சந்திர குலம் தழைக்கச் செய்ய நான் எதையும் செய்வேன் என்கிறார் பீஷ்மர். உடனே சூரிய தேவன், உன் மனதை சற்று சாந்தப்படுத்து பீஷ்மா! தக்க சமயத்தில் இந்த சந்திர வம்சத்தை தழைக்கச் செய்ய வழி பிறக்கும் என்று கூறிவிட்டு சூரியதேவன் மறைகிறார். 

பீஷ்மரின் பிரமச்சரிய விரதத்திற்கு வந்த சோதனை :

            அதன்பிறகு சத்யவதி பீஷ்மரிடம் வந்து எனக்கு ஒரு யோசனை உள்ளது. அதாவது தேவ முறைப்படி நீ நடந்தால் நமது குலம் தழைக்கும் என்கிறாள். தேவ முறை என்று இங்கு சத்தியவதி குறிப்பிடுவது யாதெனில், பிள்ளை இல்லாமல் தன் உடன் பிறந்தவன் இறந்து போனால், அந்தக் குலம் தழைப்பதற்காக அவன் சகோதரன் யாராவது இறந்தவனின் மனைவியோடு கலந்து குழந்தை பெறுவதே தேவமுறையாகும். இதனைக் கேட்ட உடன் பீஷ்மரின் மனம் பதைபதைக்கிறது. பீஷ்மரின் பிரம்மச்சரியத்திற்கு வந்த மூன்றாவது பெரிய சோதனையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. 

            அன்னையே என்னை மன்னித்தருளுங்கள்! யான் மேற்கொண்ட சபதத்தினைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்! அப்படியிருக்கையில் நீங்களே இப்படி கூறலாமா என்கிறார் பீஷ்மர். உடனே சத்தியவதி, உன் சபதத்தை பற்றி நான் நன்கு அறிவேன்! பீஷ்மா. ஆனாலும் உன் அன்னையான நானே இதை உன்னை செய்ய சொல்வதால், உன் சபதத்திற்கு பங்கம் நேராது! என்கிறாள். என்னை மன்னியுங்கள் அன்னையே! இனி ஒருமுறை இந்தக் கங்கையின் மைந்தன் என் அன்னையின் வயிற்றில் கருவாகி உதித்தால் மட்டுமே என் சபதம் நீங்கும்! அது வரை என்னால் என் பிரம்மச்சரியத்திற்கு சிறுபிழை உருவாவதையும் நான் அனுமதியேன்! என்கிறார். 

சத்தியவதியின் விடயம் : 

            அதன் பிறகு குலம் தழைக்க இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். அந்த சமயத்தில் பீஷ்மர் ஒரு யோசனை கூறினார். அதாவது பரசுராமரால் மனு என்னும் அரசனின் குலம் அழிந்த போது அந்த குலத்தை சார்ந்த பெண்கள் சாஸ்திரப்படி முனிவர்களோடு கூடி அந்த குலத்தைத் தழைக்க செய்தனர். அதன்படியே நாமும் செய்யலாமா அன்னையே என்று அவர் சத்தியவதியிடம் கேட்டார். அப்போது சத்யவதி தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பீஷ்மரிடம் கூறினார். மகனே பீஷ்மா இப்போது நான் கூறப்போகும் விடயமானது யாரும் அறியாதது. 

            இது என் மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயமாகும். அதை இப்போது உன்னிடம் கூறியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. என்னுடைய திருமணத்திற்கு முன்பு நான் யமுனை கரையோரம் சென்று கொண்டிருக்கையில், அங்கு தோன்றிய பராசரர் என்ற முனிவர் தன்னுடைய குலம் தழைப்பதற்காக என்னை அவர் தன்னோடு கூடச் சொன்னார். முனிவரின் வார்த்தையை மறுக்க முடியாத நிலையில் நான் இருந்தாலும் அப்போது நான் என் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் நான் என் கண்ணித் தன்மையை இழந்தால் இந்த உலகம் என்னை இழிவாகப் பேசும் என்றேன்.

வியாசரின் பிறப்பு (Birth of Vyasa) :

            நீ என்னோடு கூடினாலும் உன் கன்னித் தன்மைக்கு பங்கம் நேராது என்று அவர் எனக்கு வாக்குறுதி கொடுத்தார். அதன்படி நான் அவரோடு கூடி கருவுற்று ஒரு குழந்தையை ஈன்றெடுத்தேன். நீண்ட ஜடாமுடியோடும், ஒளிபொருந்திய கண்களோடும் இருந்த அவன் பெயர் வியாசன். அவன் மண்ணில் உதித்ததும் என்னை வணங்கிவிட்டு, உங்களுக்கு என் தேவை எப்போது வேண்டுமோ அப்போது என்னை அழையுங்கள் அம்மா! நான் உங்களுக்காக உதவ எப்போதும் தயாராக இருப்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான். அதன்பிறகு பராசர முனிவர் கூறியதைப் போல நான் மீண்டும் கன்னித்தன்மையை அடைந்தேன். அதோடு மீனவப் பெண்ணான எனக்குள் இருந்த மீன் வாடயை போக்கி, என் மீது ஒரு யோஜனை தூரம் நறுமணம் வீசும் படியான வரத்தினை அளித்தார். அன்று முதல் எனக்கு யோஜனகந்தி என்ற பெயரும் வந்தது. 

அம்பிகை மற்றும் அம்பாலிகையுடன் கூடும் வியாச முனிவர் :

            இப்போது நான் உன் தம்பியை அழைத்து அவனிடம் நமது சங்கடத்தை கூறி அவன் மூலம் நமது குலம் தழைக்க அவரிடம் வேண்டுகிறேன். இந்த யோசனையில் உனக்கு சம்பந்தம் உண்டா பீஷ்மா என்றார் சத்தியவதி. எனக்கு பரிபூரண சம்மதம் தாயே! நீங்கள் ஆக வேண்டியதை பாருங்கள் என்றார் பீஷ்மர். உடனே சத்யவதி வியாசரை அழைத்தார். தன் அன்னை முன் தோன்றிய வியாச முனிவர், தன் அன்னையை வணங்கி விட்டு தன்னை அழைத்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அன்னையின் தவிப்பை நீக்கும் பொருட்டு அவர் அம்பிகா மற்றும் அம்பாலிகையோடு கூட ஒப்புக் கொண்டார். 

            கருத்தரிப்பதற்கு சரியான காலம் வசந்த காலம் என்பதால் நான் இப்போது சென்று வசந்த காலம் வந்தவுடன் இங்கு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் வியாசர். அதன்பிறகு சத்தியவதி அம்பிகை மற்றும் அம்பாலிகையிடம் இடம் சென்று தனது யோசனையைத் தெரிவிக்கிறார். கணவனோடு கூடி வாழ்ந்த ஒரு பெண் எப்படி இப்போது ஒரு முனிவரோடு கூடி வாழ முடியும்? என்று இருவரும் கேட்கிறார்கள். ஆனால் இறுதியாக வேறு வழியின்றி தங்களின் குலம் தழைப்பதற்காக சத்தியவதியின் யோசனையை ஏற்றுக் கொள்கின்றனர். 

திருதராஷ்டிரனின் பிறப்பு (Birth of Thirudharashtra) 

            வசந்த காலம் வருகிறது. வியாசர் அம்பிகையோடு கூடச் செல்கிறார். வியாசர் தன்னிடம் நெருங்குவதை கண்ட அம்பிகைக்கு அவளின் உடல் முழுவதும் கூசுகிறது. வியாசர் தன்னிடம் நெருங்குவதை அவள் விரும்பவில்லை. அதனால் அவள் தன் இரு கண்களையும் இறுக்கமாக மூடிக் கொள்கிறார். அம்பிகையோடு கூடி முடித்த பிறகு தன் தாயிடம் சென்று வியாசர், நான் அம்பிகையோடு கூடுகையில் அவள் கூச்சத்தால் இரு கண்களையும் மூடிக் கொண்டாள். அதனால் அவளுக்கு நல்லதொரு வலிமைமிக்க ஆண்மகன் பிறந்தாலும் அவனுக்கு இரு கண்கள் குருடாக இருக்கும் என்று கூறுகிறார். இதைக்கேட்ட சத்தியவதி துயர் கொள்கிறார். அதன்பிறகு தனக்கு நல்ல அழகும், வலிமையும், வீரமுமிக்க ஒரு பேரப்பிள்ளை வேண்டும் என்றும், அதனால் மற்றொரு நாள் வந்து அம்பாலிகையோடு கூடுமாறு சத்யவதி வியாசரிடம் வேண்டுகிறார். 

பாண்டுவின் பிறப்பு (Birth of Pandu) :

            அதன்படி வியாசர் வேறொரு நாள் வந்து அம்பாலிகையோடு கூடுகிறார். அந்த சமயத்தில் நாணம் காரணமாக அம்பாலிகையின் உடல் முழுவதும் வெளுக்கிறது. அம்பாலிகையோடு கூடி முடித்த பிறகு சத்தியவதியிடம் சென்று வியாசர், தான் அம்பாலிகையோடு கூடும் சமயத்தில் அவள் உடல் முழுவதும் வெளுத்திருந்ததால் அவளுக்கு உடல் முழுவதும் வெளுத்த ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த உலகையே ஆளும் திறன் பெற்றவனாக இருப்பான் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைகிறார் வியாசர். அதன் பிறகு 10 மாதங்கள் கழித்து இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. கண்களின்றி அம்பிகைக்கு பிறந்த குழந்தைதான் திருதராஷ்டிரன். வெளுத்த உடலோடு அம்பாலிகைக்கு பிறந்த குழந்தைதான் பாண்டு. தன்னுடைய மூத்த பேரன் குருடனாய் பிறந்ததால் அம்பிகைக்கு இன்னொரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சத்தியவதி மீண்டும் வியாசரை அழைத்து அம்பிகையோடு கூடச்  சொல்கிறார். 

விதுரரின் பிறப்பு (Birth of Vidura) :

            வியாசர் அம்பிகையோடு கூடத் தயாராகிறார். ஆனால் அம்பிகைக்கு மீண்டும் வியாசரோடு கூட விருப்பம் இல்லாததால் அவள் தன்னுடைய தோழி ஒருவரை அழைத்து, அவளுக்குத் தன்னைப் போலவே அலங்காரம் செய்து அவளை வியாசரோடு கூடும்படி செய்கிறாள். அந்தப் பெண்ணோ வியாசரை தன்னுடைய கணவன் போல நினைத்து, எந்தவித அச்சமுமின்றி அவரோடு முழுமனதோடு கூடுகிறாள். அவளிடம் கூடி முடித்த பிறகு சத்தியவதியிடம் வந்த வியாசர், அன்னையே நான் அம்பிகையோடு கூடவில்லை. மாறாக அவள் தன் தோழியை என்னோடு கூடச் செய்ததால், அந்தப் பெண்ணிற்கு பிறக்கப் போகும் குழந்தை மிகச்சிறந்த அறிவோடும் ஆற்றலோடும் திகழ்வான். அவன் ஒரு மிகச் சிறந்த மனிதனாக விளங்குவான் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் வியாசர். அம்பிகையின் தோழிக்கு குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் தான் விதுரன். 

அஸ்தினாபுரத்திற்கு அரசராகும் பாண்டு (Pandu becomes king of Astinapur):

            திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகிய மூவரையும் பீஷ்மர் சமமாகவே பார்க்கிறார். அவர்கள் மூவருக்கும் போர்க் கலைகள் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார். திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தாலும் கூட அவனும் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேறுகிறான். விற்போரில் பாண்டுவை வெல்ல ஆளில்லை என்ற அளவிற்கு அவன் ஒரு சிறந்த வில்லனாக திகழ்கிறான். திருதராஷ்டிரன் உடல் பலத்தில் எல்லோரையும் விஞ்சி நிற்கிறார். அறம் சார்ந்த அனைத்து செயல்களிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குகிறான் விதுரன். 

            அவர்கள் அனைவரும் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடையும் வரை பீஷ்மர் ஒரு சேவகனாக இருந்து அஸ்தினாபுரத்தைக் காத்து வருகிறார். மூவரும் வளர்ந்து அரச பதவியை ஏற்கும் நிலையை அடைகின்றனர். ஒரு நாட்டின் அரசன் முழு உடல்தகுதியோடு இருக்க வேண்டும் என்பதால், திருதராஷ்டிரனை அரசனாக்காமல் பாண்டுவை அரசனாக்கினார் பீஷ்மர். அதையே அந்நாட்டு மக்களும் விரும்புகின்றனர். அதோடு விதுரர் மந்திரியாக நியமிக்கப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக இவர்களுக்கு திருமணம் நடந்து பாண்டவர்களும், கௌரவர்களும் எப்படி பிறக்கிறார்கள்? கர்ணன் இந்த பூமியில் எப்படி உதிக்கிறான்? எனப் பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம். 

Post a Comment

Previous Post Next Post