மகாபாரதத்தில் கிரிஷ்ணரையே பயந்து ஓட வைத்த மாவீரன் | The hero who frightened Krishna in mahabharata | mahabharata Episode 24

மகாபாரதத்தில்  கிரிஷ்ணரையே பயந்து ஓட வைத்த மாவீரன்

            காண்டவ வனம் முழுமையாக எரிந்ததையும் (The great battle between Arjuna and Indra) அதிலிருந்து அர்ஜுனனின் உதவியால் மயன் என்னும் அசுரன் தப்பியது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது கிருஷ்ணரின் வேண்டுதலின்படி மயாசுரன் அமைத்த மாளிகை பற்றியும் கிருஷ்ணரே பார்த்து பயந்த மாவீரன் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். 

அர்ஜுனனுக்கு மயாசுரன் செய்த உதவி (Mayasuran's help to Arjuna) :

கிருஷ்ணரிடம் இருந்தும், அக்னி தேவனிடம் இருந்தும் அர்ஜுனன் தன்னை  காத்ததால் அவன் இருகரம் கூப்பி வணங்கினான் மயன். அதோடு இத்தகைய பெரும் உதவிக்குக் கைமாறாக நான் உங்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்!! ஆகையால் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்!! என்றான் மயன். 

            அதற்கு பதிலளித்த அர்ஜுனன் "உனது அன்பை தவிர எனக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்றான். உடனே மயன் " தனஞ்ஜெயா நான் அசுரர்களின் விஸ்வகர்மா என்று போற்றப்படும் பெரும் கலைஞன் ஆவேன். ஆகையால் என்னால் செய்யக்கூடிய ஏதாவது ஒன்றை நான் செய்யலாம் என்று எண்ணுகிறேன்" என்றான். உடனே அர்ஜுனன், "நீ எனக்கு ஏதாவது கைமாறு செய்தே ஆக வேண்டும் என்று தவிப்பதால் நான் ஒன்று கூறுகிறேன் கேள்! கிருஷ்ணருக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதை நீ செய்வாயாக! அதுவே நீ எனக்கு செய்த கைமாறாக நான் எண்ணுகிறேன்! என்றான்". 

கிருஷ்ணருக்கு மயாசுரன் அளித்த வாக்கு (Mayasura's vow to Krishna) :

            உடனே கிருஷ்ணரின் அருகே சென்ற மயன் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்" என்றான். சற்றுநேரம் சிந்தித்த கிருஷ்ணர், "கலைஞர்களின் சிறந்தவனே, நீ யுதிஷ்டிரனுக்காக ஒரு சிறப்பான அரண்மனையை கட்டி தரவேண்டும்! அந்த அரண்மனையை பார்த்து வேறு எவரும் அது போன்ற ஒரு அரண்மனையை அமைக்க முடியாத அளவிற்கு அந்த அரண்மனை இருக்க வேண்டும்! அதில் இருக்கும் பொருட்களும், மற்றவைகளும் போலியானதா இல்லை உண்மையானதா என்று எவராலும் பரிட்சிக்க  இயலாத வகையில் அந்த அரண்மனை இருக்க வேண்டும்! அந்த அரண்மனையானது தேவர்களால் கட்டப்பட்டதா? இல்லை அசுரர்களால் கட்டப்பட்டதா? இல்லை மனிதர்களால் கட்டப்பட்டதா? என்று அறிய முடியாத வகையில் அத்தனை சிறப்புகளோடு இருக்க வேண்டும்"! என்றார் கிருஷ்ணர். அதைக் கேட்ட மயன், நான் நிச்சயம் இதை செய்து முடிப்பேன் !என்றான்.

மயாசுரன் கட்டிய அரண்மனையின் சிறப்பு (Mayasuran's palace's specialty) :

            பிறகு அனைவரும் அரண்மனைக்கு சென்று நடந்தவை அனைத்தையும் யுதிஷ்டிரனிடம் கூறினர். சிறிது காலம் அரண்மனையில் தங்கியிருந்த மயன் தான் புதிதாக கட்டப் போகும் அரண்மனை பற்றி தெளிவாக யோசித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு ஒரு நல்ல நாளில் பூஜை போட்டு அந்த அரண்மனையை கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டது. அந்த சமயம் அர்ஜுனனிடம் வந்த மயன், அந்த அரண்மனையை கட்டுவதற்கு தேவையான கண்ணாடி போன்ற பொருட்கள் பல கைலாச மலைக்கு அருகே உள்ள பிந்து நதிக்கரையில் இருப்பதாகவும், அதோடு அங்கு மிகப்பெரிய கதாயுதமும், சங்கும் இருப்பதாகவும் அவரிடம் கூறிவிட்டு அதனை எடுத்து வர அர்ஜுனனின் அனுமதியோடு அங்கு புறப்பட்டான் மயன்.

            இதற்கிடையில் கிருஷ்ணர் பாண்டவர்களிடம் இருந்து விடைபெற்று துவாரகை திரும்பினார். பிந்து நதிக்கரையிலிருந்து தான் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு காண்டவப்பிரஸ்தம் நோக்கி விரைந்தான் மயன். தான் கொண்டுவந்த கதாயுதத்தை பீமனுக்கும்,சங்கை அர்ஜுனனுக்கும் கொடுத்த மயன் அரண்மனை கட்டும் பணியில் மும்முரமாக இறங்கினான். மூவுலகில் உள்ள அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அந்த அரண்மனையை தங்கத்தாலும், வைர வைடூரியதாலும், கண்ணாடியாலும் கட்டி முடித்தான் மயன். 

            அதோடு அந்த அரண்மனைக்குள்ளேயே சிறப்பான கலை நயத்தோடு ஒரு குளத்தை உருவாக்கினான். அந்த குளத்தை காண்போர் எவரும் அது குளம் என்று அறியாத வகையில் அமைந்திருந்தது அந்தக் குளம். அதோடு அந்த அரண்மனையை சுற்றி பல வகையான மரங்களை நட்டு அந்த இடத்தையே பசுமையாக்கினான் மயன். அதன் பிறகு அந்தணர்களையும், பல நாட்டு அரசர்களையும் அங்கு அழைத்து மிகப்பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தான் யுதிஷ்டிரன். அந்த சமயம் அங்கு வந்த நாரதர்  யுதிஷ்டிரனுக்கு தேவையான பல நல்வழிகளை போதித்தார்.

ராஜசூய வேள்வி :

            அதோடு ராஜசூய வேள்வி குறித்த சிறப்புகளையும் அவர் யுதிஷ்டிரனுக்கு கூறினார். அந்த வேள்வியை எவரொருவர் செய்கிறாரோ, அவர் மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் ஆகும் தகுதி பெற்றவர் என்பதை அறிந்து அந்த கேள்வியை தானும் செய்ய தீர்மானித்தான் யுதிஷ்டிரன். இது குறித்து தனது சகோதரர்களோடும், அமைச்சர்களோடும், ஆன்றோர்களோடும், சான்றோர்களோடும் உரையாடினான் யுதிஷ்டிரன். அந்த வேள்வி செய்ய உங்களுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று அனைவரும் கூறினர். ஆனாலும் யுதிஷ்டிரனுக்கு ஏதோ உறுத்தல் இருந்தது. ஆகையால் அது குறித்து கிருஷ்ணரிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தான் யுதிஷ்டிரன். உடனே ஒரு தூதுவரை அவன் கிருஷ்ணரிடம் அனுப்பினான். அதன் பிறகு கிருஷ்ணர் இந்திரப்பிரஸ்தம் நோக்கி விரைந்து வந்தார். அவரை பாண்டவர்கள் சிறப்பாக வரவேற்றனர். யுதிஷ்டிரன் அவரிடம்தான் ராஜசூய வேள்வியை இப்போது செய்யலாமா என்று கேட்டான். 

கிருஷ்ணரே பார்த்து பயந்த மாவீரன் ஜராசந்தன் :

            அதற்கு பதிலளித்த கிருஷ்ணர் "மன்னா நீர் இராஜசூய வேள்வியை செய்வதற்கான அடிப்படை தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளீர்! அதோடு நீர் அனைத்தையும் அறிந்தவர்! ஆனாலும் நான் உங்களுக்கு சிலவற்றைக் கூறுகிறேன் கேளுங்கள்! ஜலா மற்றும் விஷ்வாவின் வழித்தோன்றல்கள் மூலம் வந்த மன்னர்கள் என்று ஏராளமாக உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரிலும் வலிமை மிக்கவராக திகழ்ந்தான் ஜராசந்தன். அவனை யாராலும் வெல்ல முடியாத அளவிற்கு மிகுந்த பலம் பொருந்தியவனாகவும், பல அரசர்களை தனது நண்பனாகவும் கொண்டுள்ளான். ஒரு சமயம் நாங்கள் கூட அவனுக்கு பயந்து மதுராவை விட்டு ஓடி வந்து துவாரகையை அடைந்தோம். 

            அதனால் அவனை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல! அவன் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் ராஜசூய வேள்வி செய்து சக்கரவர்த்தியாக இயலாது! அவன் தற்போது 86 மன்னர்களை அவர்களின் படைகளோடு சிறைபிடித்து அவர்கள் அனைவரையும் ஒரு மலைக் குகையில் அடைத்து வைத்துள்ளான். அந்த எண்ணிக்கை 100 ஆன பிறகு அவன் சிவனை நோக்கி மேற்கொண்ட ஒரு கடும் தவத்திற்கு அலங்காரமாக ஒரு வேள்வியில் அந்த நூறு மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் சிவனுக்கு பலியிட போகிறான். அவர்களை நீ ஜராசந்தனின் பிடியிலிருந்து விடுவித்து அவனை வென்றால் மட்டுமே ராஜசூய வேள்வி செய்து சக்கரவர்த்தியாக இயலும்! என்றார் கிருஷ்ணர்". 

யுதிர்ஷ்டிரனின் பயம் (Yudhisthira's fear):

            கிருஷ்ணர் கூறியதை கேட்டு அதிர்ச்சியுற்ற யுதிஷ்டிரன், நீரே பலத்தைக் கண்டு பயந்தால் நாங்கள் என்ன செய்வது? என்றான். உடனே பீமன் "என்னிடமுள்ள பலத்தையும் கிருஷ்ணரிடமுள்ள வியூகத்தையும், அர்ஜுனனிடமுள்ள முழு ஆற்றலையும் கொண்டு நாம் அவனை வீழ்த்துவோம்  என்றான். உடனே கிருஷ்ணர் "ஜராசந்தன் ஒரு மிகப் பெரிய பலசாலி ஆவான்! அவனை நாம் அவ்வளவு எளிதில் பெற இயலாது! ஆனாலும் அதற்கான முயற்சியில் நாம் இறங்குவோம்! உடனே அவனோடு போருக்கு தயாராவோம் என்றார்". இதை கேட்ட யுதிஷ்டிரன், "கிருஷ்ணா அந்த ஜராசந்தனை நெருங்க எமனே பயப்படுவார்! அப்படி இருக்கையில் நாம் எப்படி அவரை நெருங்குவது? அதோடு இந்தப் போரானது ஒருவேளை நமக்கு சாதகமாக இல்லை என்றால் நான் எப்படி உன்னையும், அர்ஜுனனையும், பீமனையும், பிரிந்து வாழ இயலும்? அவனோடு போர் புரிவது எனக்கு சரியாகப்படவில்லை! ஆகையால் அந்த முயற்சியை நாம் கைவிடுவதே நமக்கு நல்லது! அதோடு ராஜசூய யாகம் நடத்தும் யோசனையையும் கைவிடலாம் என்று நான் எண்ணுகிறேன்! என்றான் யுதிஷ்டிரன்". 

            அதைக் கேட்ட அர்ஜுனன் "அண்ணா நம்மிடம் அளவற்ற திறமை இருக்கிறது! அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் ஜராசந்தனை கண்டு அஞ்சுகிறீர்கள்? நமது யாகத்திற்கு தடையாக இருக்கும் அவனைக் கொன்று அவன் சிறை பிடித்து வைத்துள்ள எண்பத்தாறு மன்னர்களையும் நாம் மீட்போம்! நாம் அப்படி செய்தால் தான் இந்த உலகம் நம்மை போற்றும்! அதோடு சிறந்த வீரர்கள் என்று அங்கீகாரமும் நமக்கு கிடைக்கும்! ஆகையால் நாம் அனைவரும் உறுதியாக அவனை எதிர்ப்போம்! என்றான் அர்ஜுனன்". 

            அதைக் கேட்ட கிருஷ்ணர் "நாமும் அவனும் சமமான பலம் உடையவர்கள் என்றாலும் அவனால் சிறைபட்ட மன்னர்களை காக்கவாவது நாம் அவனுடன் யுத்தம் புரிய வேண்டும்! இந்த யுத்தத்தில் ஒன்று நாம் அவனை கொல்வோம்! அல்லது நாம் அனைவரும் விண்ணுலகம் செல்வோம்! என்றார்". அதைக் கேட்ட யுதிஷ்டிரன், "கிருஷ்ணா ஜராசந்தன் எப்படி இவ்வளவு வலிமை உடையவனாக இருக்கிறான்? அவன் எப்படி இவ்வளவு காலம் உன்னிடமிருந்து தப்பித்தான்? என்றான்". அதற்கான பதிலை கூறத் துவங்கினார் கிருஷ்ணர். 

ஜராசந்தனின் பிறப்பு (Birth of Jarasanthan) :

            பிருகத்ரதன் என்னும் அரசன் காசி மன்னனின் மகள்களான இரட்டையரை மனைவியாக கொண்டிருந்தான். அவன் அவர்கள் இருவருக்கும் அனைத்தையும் சமமாகத் தான் கொடுப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டான். மன்னனுக்கு திருமணம் நடந்து வெகுகாலமாகியும் குழந்தை இல்லாததால் அவன் மிகுந்த துயரத்தில் இருந்தான். அச்சமயம் அந்த ஊருக்கு வந்த சந்தகௌசிகர்  என்னும் முனிவரை தன் மனைவியரோடு சென்று சந்தித்த மன்னன், அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்தான். அதில் மகிழ்ந்த முனிவர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு பதிலளித்த மன்னன் "சுவாமி எனக்கு பிள்ளை இல்லை! ஆகையால் நான் என்ன வரம் பெற்று என்ன பயன்? நான் இந்த நாட்டை விட்டு கானகம் செல்லவே எண்ணுகிறேன் என்றான்". 

            அதைக் கேட்ட முனிவர் ஒரு மாம்பழத்தை வரவழைத்து சில மந்திரங்களைக் கூறி அதை அந்த மன்னனிடம் கொடுத்து இதை உன் மனைவியை உண்ணச் சொல்! நிச்சயம் குழந்தை பிறக்கும் என்றார். அனைத்தையும் தன் மனைவிகளுக்கு சமமாகவே கொடுத்துப் பழகிய அந்த மன்னன் அந்த மாம்பழத்தையும் அவர்களுக்குச் சமமாக பிரித்துக் கொடுத்தான். அதன் பிறகு சில காலத்தில் அவர்கள் இருவரும் கர்ப்பம் தரித்தனர். 10 மாதங்களில் இருவருக்கும் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த இரு குழந்தைகளும் முழு உடலோடு பிறக்கவில்லை. ஒரு மனித உடலை சரி பாதியாக வெட்டினால் எப்படி இருக்குமோ அது போல ஒரு கை, ஒரு கால், ஒரு காது, பாதி மூக்கு, பாதி வாய், பாதி வயிறு என்று இருந்தது.

            இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் அந்தப் பாதி குழந்தைகளை தூக்கவே அஞ்சினர். ஆகையால் அந்த இரு கூறுகளையும் தனித்தனியாக ஒரு துணியில் சுருட்டி அதை தங்கள் ஊழியர்களிடம் கொடுத்து தூக்கி எறிந்தனர். அந்த ஊரில் ஜரை என்னும் ராட்சசி வாழ்ந்து வந்தாள். நரமாமிச உண்ணியான அவள் அந்த இரு துண்டுகளைக் கண்டு அதை உண்ண அங்கு சென்றாள். அந்த இரு கூறுகளையும் தூக்கி செல்ல எண்ணிய அவள் அதைத் தன் கையில் எடுத்து சேர்த்தாள். உடனே அது முழு உடலைப் பெற்று குழந்தையாய் மாறி வீறிட்டு அழத் துவங்கியது. அந்த அழுகை சத்தமானது அந்த நகரத்தையே அலறச் செய்தது.

            உடனே அந்த ராட்சசி தன் மந்திர சக்தியால் அது அரசரின் குழந்தைதான் என்பதை அறிந்து, அவள் அந்த அரசன் மேல் கொண்ட பற்று காரணமாக அதை அவரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு அழகிய பெண் உருவம் கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்தாள். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உடனே அனைவரும் அரண்மனை வாயிலுக்கு வந்தனர். அவரிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட அரசன் அழகிய பெண் வடிவத்தில் இருக்கும் அந்த ராட்சசியை பார்த்து நீ யார் என்றார். 

            அந்த ராட்சசி அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தாள். இரு கூறுகளாக இருந்த அந்த குழந்தை ஜரை என்னும் ராட்சசியால் ஒன்று சேர்க்கப்பட்டு உயிர்பெற்றதால் அவனுக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான் அந்த மன்னன். அந்த குழந்தை மிகவும் சிறப்போடு வளர்ந்தது. அதன் பிறகு ஜராசந்தனுக்கும், கிருஷ்ணருக்கும் எப்படி பகை மூண்டது? அவனைப் பாண்டவர்களும், கிருஷ்ணரும் சேர்ந்த வீழ்த்தினார்களா? போன்ற பல தகவல்களை அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்.


Post a Comment

Previous Post Next Post