அழகான தமிழ் உச்சரிப்புகளுடனும், முகத்தில் அழகான புன்னகையுடனும் எதார்த்தமாகப் பேசி தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்தவர் தான் ஆனந்த கண்ணன். தற்போது இவருடைய மறைவு செய்தியைக் கேட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர். மேலும் பலர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த இவர் கேன்சர் என்னும் புற்று நோயால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி தன்னுடைய நாற்பத்தி எட்டாவது வயதில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு இவருடைய ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 2000-ஆம் வருடத்தின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனல் தொடங்கிய கால கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், தன்னுடைய எதார்த்தமான பேச்சினாலும், நடிப்பு திறமையினாலும் பல்வேறு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவருடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான தமிழ் மக்கள் கால் செய்து பேசி நல்ல வரவேற்பு தந்தனர். நீண்ட நாட்களாக சன் மியூசிக் சேனலில் பிரபலமாக இருந்த இவர் சன்மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க தொடங்கினார்.
சிங்கப்பூர் தமிழராக இருந்து சென்னையில் தங்கி 10 வருடம் பல்வேறு தமிழ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ராணி என்ற பெண்ணை மணந்தார். இவர் மனைவி ராணியும் ஆனந்த கண்ணனைப் போலவே சிங்கப்பூரில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மியூசிக் சேனல்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு பிடித்த அனைத்து பாடல்களையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளர்களிலேயே மிகவும் பிரபலம் வாய்ந்தவராக திகழ்ந்தார். சன் மியூசிக் சேனலின் மூலம் பிரபலமான இவருக்காக சன் தொலைக்காட்சி "சிந்துபாத்" என்ற ஒரு நாடகத்தை உருவாக்கியது. அந்த காலகட்டத்தில் வெளியான இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதோடு ஒரு தொகுப்பாளராக இருந்து தமிழ் திரையுலகில் கால்பதிக்க முடியும் என்பதையும் நிகழ்த்திக் காட்டினார். சன் மியூசிக், எஸ் எஸ் மியூசிக் போன்ற மியூசிக் சேனல்களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக விளங்கிய இவர் 2012-ஆம் ஆண்டு வெளியான "அதிசய உலகம்" என்னும் 3D படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பரான ஆனந்த கண்ணன், அவருடைய இயக்கத்தில் வெளியான "சரோஜா" என்னும் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி நடித்துள்ளார்.
தன்னுடைய நண்பர் ஆனந்த கண்ணன் இறந்த செய்தியை அறிந்த இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த உருக்கத்துடன் இந்த செய்தியை மக்களிடம் பகிர்ந்துள்ளார். ஆனந்த கண்ணனின் இறப்புச் செய்தியை கேள்விப்பட்ட சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் மற்றும் தமிழக மக்களும் அவர்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.