விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் (big boss). ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே பரவலாக காணப்படும். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தெலுங்கு மொழியில் ஐந்தாம் பாகத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுருக்கிறது. மேலும் தெலுங்கில் இந்நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதே போன்று தமிழிலும் பிக் பாஸ் ஐந்தாம் பாகத்திற்கான தொடக்க கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற நட்சத்திரங்களான ஹரிஷ் கல்யாண், ஓவியா மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் தற்போது பல பட வாய்ப்புகளுடன் படங்களில் நடித்தும், சமூக ஊடகங்களில் பிரபலங்களாக கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் பங்கு பெறும் போட்டியாளர்கள் குறித்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கனி திரு (Kani Thiru)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக்கூ வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் கனி திரு. இவர் கிராமப்புற மற்றும் உள்ளூர் சமையல் குறிப்புகளை மையமாகக்கொண்டு பல கற்பனை உணவுகளை செய்து குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன் (Ramya krishnan)
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்தவர் ரம்யாகிருஷ்ணன். இவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கூறும் குயின் என்னும் வலைத்தொடரில் நடித்திருந்தார். தற்போது படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.பி. முத்து (G.P. Muthu)
டிக் டாக் செயலியின் மூலம் தனது ஆபாசம் கலந்த வெகுளியான பேச்சினால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜி.பி. முத்து. இன்ஸ்டகிரம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கூ வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விஜய் டிவி அவரை அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மைனா நந்தினி (Myna Nandini)
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பிரபல தொடர்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் மைனா நந்தினி. மேலும் இவர் வெண்ணிலா கபடிக்குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமான இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் பங்கேற்கலாம் என தெரிகிறது.
ஷகிலாவின் வளர்ப்பு மகள் நிலா (Nila)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சமையல் நிகழ்ச்சியான குக்கூ வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிலா. பிரபல ஆடை வடிவமைப்பாளராகவும், மாடலாகவும் உள்ள இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே நடிகை சகிலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் தற்போது இவரது வளர்ப்பு மகளான நிலா ஐந்தாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்மணி சேகர் (Kanmani Sekar)
செய்தி வாசிப்பாளராக சேனல்களில் தனது பணியை தொடங்கிய கண்மணி சேகர் தன்னுடைய வசீகரமான அழகின் மூலம் ஏராளமான பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் என்றே கூறலாம். சமூக ஊடகங்களான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எஸ். பாஸ்கர் (M.S.Basker)
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஒரு குணச்சித்திர நடிகராகவும், சின்னத்திரையில் காமெடி நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை பதித்தவர் எம்.எஸ். பாஸ்கர். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த Malaysia to Amnesia என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது பிரபலமான குணச்சித்திர நடிகராக விளங்கும் இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமி ராமகிருஷ்ணன் (Lakshmi Ramakrishnan)
குணச்சித்திர நடிகை, இயக்குனர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளோடு திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடித்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியில் மூலம் மக்களிடம் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.
ஜான் விஜய் (John Vijay)
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தில் daddy என்ற கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டும்படியாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பிக்பாஸ் ஐந்தாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்கலாம் என தெரிகிறது.