மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பிறப்பு
(Birth of Pandavas and Kauravas in Mahabharata)
கடந்த பாகத்தில் திருதராஷ்டிரன் பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரின் பிறப்பை பற்றியும், ( History of Dhritarashtra, Pandu and Vidura in Mahabharata )பீஷ்மரின் பிரம்மச் சரியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் பற்றியும் பார்த்தோம். இப்போது அவர்களின் திருமண வாழ்வை பற்றியும், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பிறப்பை பற்றியும் பார்க்கலாம்.
பாண்டு அரசனான கதையைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அதன்பிறகு அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்ய எண்ணினார் பீஷ்மர். காந்தார நாட்டு அரசனின் மகளான காந்தாரி சிவனிடமிருந்து 100 மகன்களை பெறுவதற்கான வரத்தினை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்த பீஷ்மர் அவளை திருதராஷ்டிரருக்கு மணமுடிக்க எண்ணி, அதுகுறித்து தூது அனுப்புகிறார். திருதராஷ்டிரன் கண் பார்வையற்றவர் என்பதால் முதலில் காந்தார நாட்டு மன்னன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறான்.
அதன்பிறகு சந்திர குலத்தின் பெருமையை உணர்ந்து இந்த திருமணத்திற்கு அவன் தனது சம்மதத்தை அறிவிக்கிறான். திருதராஷ்டிரன் பார்வையற்றவர் என்பதை அறிந்த காந்தாரி தனது எதிர்காலக் கணவர் மீது வைத்திருந்த அன்பு காரணமாக, அவளும் தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு திருமணத்திற்கு முன்பே கண்கள் இருந்தும் குருடரைப் போல வாழ்கிறாள். அவர்கள் இருவரின் திருமணமும் பீஷ்மரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக நடக்கிறது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகின்றனர்.
குந்தி தேவியின் பிறப்பு (Birth of Kunti Devi) :
இதனையடுத்து குந்திபோஜனின் மகளான குந்தியை பாண்டுவிற்கு மணம் முடிக்கலாம் என்று எண்ணுகிறார் பீஷ்மர். இங்கு நாம் குந்தியை பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. கிருஷ்ணரின் பாட்டனான சூரசேனர் என்பர் யாதவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கினார். அதோடு அவர் எப்போதும் தான் கொடுத்த வாக்கிலிருந்து மாறாதவர். ஒரு சமயம் குழந்தையின்றி தவித்து வரும் தன்னுடைய நண்பனும், அத்தையின் மகனுமான குந்திபோஜனிடம் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை உனக்கு தத்துக் கொடுக்கிறேன் என்று வாக்களிக்கிறார். அதன்படி தனக்குப் பிறந்த பிருதை என்னும் பெண் குழந்தையை தன் நண்பரிடம் தத்துக் கொடுக்கிறார். குந்திபோஜனின் வளர்ப்பு மகளாய் அவள் வளர்வதால் குந்தி என்று பெயர் பெறுகிறாள்.
துர்வாச முனிவரின் வரங்கள் (Gifts of Durvasa) :
ரிஷி முனிவர்களை நல்ல மரியாதையோடு நடத்துவதிலும் எப்போதும் கவனித்துக் கொள்வதிலும் குந்தி சிறந்து விளங்குகிறாள். ஒரு சமயம் துர்வாச முனிவர் அவள் இருப்பிடத்திற்கு வந்தபோது அவரை மிகுந்த மரியாதையோடு கவனித்துக் கொள்கிறாள் குந்தி. குந்தியின் விருந்தோம்பல் பண்பும் மரியாதையும் அவரை வெகுவாகக் கவர்கிறது. உடனே தன்னுடைய ஞான திருஷ்டி மூலம் குந்தியின் எதிர்காலத்தை அறிந்த துர்வாச முனிவர், அவளுக்கு பாண்டுவுடன் திருமணம் நடக்கப் போவதையும், அவள் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கப் போவதையும் முன்கூட்டியே அறிகிறார். அதன் காரணமாக அவளிடம் ஒரு மந்திரத்தை கூறிய துர்வாசர், நீ எந்த தேவரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை கூறினாலும், அவர்கள் மூலம் உனக்கு குழந்தை பிறக்கும்! என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
கர்ணனின் பிறப்பு (Birth of Karna) :
மந்திரத்தை கூறினால் அவர்கள் மூலம் எப்படி குழந்தை பிறக்கும்? என்று எண்ணத் தொடங்கினாள் குந்தி. ஆனால் அந்த மந்திரத்தைக் கற்பித்தவர் துர்வாசர் என்பதால் அது பலிக்கும் வாய்ப்புள்ளது என்று எண்ணினாள். இப்படி குழப்பத்தில் இருந்த அவள், அந்த மந்திரத்தை சோதித்துப் பார்க்க முடிவெடுத்து சூரியனை நினைத்து அந்த மந்திரத்தை ஜெபிக்க, உடனே சூரியதேவன் அவள் முன் தோன்றுகிறார். அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குந்தி, உலகிற்கெல்லாம் ஒளிதரும் சூரியதேவா! நான் இந்த மந்திரத்தை சோதிப்பதற்காகவே உங்களை அழைத்தேன்.
தன் திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டதால், அதை தன்னுடைய உற்றார், உறவினர்கள் கண்டால் தன்னையும் தன் குழந்தையையும் இழிவாகப் பேசுவார்களே என்று எண்ணி, அந்தக் குழந்தையை பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுகிறார். அதைக் கண்ட அதிரதன் என்னும் பீஷ்மரின் தேரோட்டி ஆற்றில் மிதந்து வரும் அந்தக் குழந்தையைக் கண்டு அதைத் தானே எடுத்து வளர்க்கிறார். காதுகளில் குண்டலம், உடம்பில் கவசத்தோடு இருந்த அந்தக் குழந்தைக்கு அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வசுசேனன் என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். கர்ணனின் கதையைப் பற்றி பிறகு பார்ப்போம்.
பாண்டுவின் திருமணம் (Pandu's Marriage) :
இப்போது குந்தியின் கதைக்கு வருவோம். குந்தியின் தந்தை குந்திபோஜன் தன் மகளின் திருமணத்தை கருத்தில் கொண்டு சுயம்வரம் ஒன்றை நடத்துகிறார். அந்த சுயம்வரத்தில் பாண்டுவும் கலந்து கொள்கிறார். அங்கு எத்தனையோ அரசகுமாரர்கள் வந்திருந்தாலும், பாண்டுவின் சிங்கம் போன்ற தோற்றத்தையும், நிறத்தையும், அழகையும் கண்டு அவரிடம் தன் மனதை பறிகொடுக்கிறார் குந்தி. அதோடு பாண்டுவின் கழுத்தில் அவள் மணமாலையை போடுகிறாள். அதனைத் தொடர்ந்து பீஷ்மரின் ஆசைகளோடு அவர்களின் திருமணம் விசேஷமாக நடக்கிறது. அதன் பிறகு சிறிது காலத்தில் பாண்டுவிற்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க எண்ணிய பீஷ்மர் மத்ர நாட்டு மன்னன் சல்லியனின் தங்கையான மாத்திரையை பெண் கேட்டுச் செல்கிறார். அதன் பிறகு பாண்டுவிற்கு மாத்திரையோடு திருமணம் நடக்கிறது.
பாண்டு போரில் நிகழ்த்திய வெற்றிகள் (Victories in the Battle of Bandu) :
பாண்டு தன் மனைவியரோடு கூடி மகிழ்ச்சியாக வாழ்கிறார். தனது இரண்டாவது திருமணம் முடிந்த ஒரு மாத காலத்தில், பாண்டு தன்னுடைய எதிரிகள் அனைவரையும் அடக்க எண்ணினார். அதன் காரணமாக பீஷ்மர் உள்ளிட்ட அனைத்து பெரியோர்களிடம் ஆசி பெற்று போருக்கு செல்கிறார். அவரின் இந்தப் போர் பயணமானது சிறிதாக இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கிறது. முதலில் தசாகர்கள் என்னும் திருடர்கள் குழுவை அடக்குகிறார். அதன்பிறகு மகத நாட்டு மன்னனையும் வீழ்த்துகிறார். அதன் பிறகு காசி, சம்பா, புண்டரம் ஆகிய நாடுகளை அடைந்து தனக்கு அடிபணியாத அத்தனை மன்னர்களையும் வீழ்த்தி மிகப்பெரிய ஒரு மாவீரனாக வலம் வருகிறார்.
கிட்டத்தட்ட அவருக்கு சுற்றியிருந்த அனைத்து அரசர்களும் அவருக்கு கப்பல் கட்டும் நிலை உருவாகிறது. ஒரு வழியாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் பாண்டு. அப்போது அவர் எண்ணிலடங்கா பல செல்வங்களையும், யானைகளையும், குதிரைகளையும் பெற்று வருகிறார். அவரின் போர் திறமையை கண்ட பீஷ்மர் அவரை ஆனந்தக் கண்ணீரோடு வரவேற்கிறார். பாண்டுவின் புகழ் எட்டு திக்கும் பரவுகிறது. அதன் பிறகு சிறிது காலத்தில் தேவகன் என்னும் மன்னனின் மகளை விதுரருக்கு மணமுடித்து வைக்கிறார் பீஷ்மர். இப்போது தன் தம்பிகளின் பிள்ளைகள் மூவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்து விட்டார் பீஷ்மர்.
பாண்டு பெற்ற பெரும் சாபம் (Curse of Pandu) :
போரை முடித்தவுடன் சிறிது காலம் இயற்கையோடு இயற்கையாக வாழத் துவங்கினார் பாண்டு. அதன் காரணமாக அவர் தம் மனைவியரோடு ஒரு காட்டுப்பகுதியில் வாழ்கிறார். அங்கு அவர் காட்டு விலங்குகளை வேட்டையாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். அப்போது ஒருநாள் இரு மான்கள் கலவியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், தன் கணைகள் கொண்டு அந்த மான்களின் உயிரைப் பறிக்க முற்பட்டார் பாண்டு. பாண்டுவின் அம்புகள் அந்த மான்களின் மேல் பாய்ந்த பின்புதான் தெரிந்தது, அவை உண்மையில் மான்கள் அல்ல! கிண்டவன் என்ற முனிவரும் அவர் மனைவியும் என்று.
அதன் காரணமாக கடும் சினம் கொண்ட அந்த முனிவர் பாண்டுவிற்கு பெரும் சாபம் ஒன்றை கொடுக்கிறார். அதன்படி ஓ மன்னா! எங்களை நீ மான் என்றே கருதியிருந்தாலும், கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இரு மான்களை வேட்டையாடுவது என்பது எந்த விதத்திலும் தர்மமாகாது! அதனால் இனி உன் வாழ்வில் உனக்கு காம ஆசை எப்போது ஏற்பட்டு உன் மனைவியரோடு நீ கலந்தாலும், அப்போதே நீ இறப்பாய்! அதோடு உன்னோடு கலவியில் ஈடுபடும் பெண்ணும் உன்னைத் தொடர்ந்து இறப்பாள்! என்று கடுமையான சாபம் ஒன்றை பாண்டுவிற்கு அவர் கொடுத்துவிட்டு இறந்து போகிறார்.
அரச பதவியை துறந்த பாண்டு :
அந்த சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டு, தான் செய்த பெரும் தவறை எண்ணி வருத்தம் கொள்கிறார், அந்தப் பாவத்திற்கு பிராயச்சித்தமாய், இனி நான் என் அரண்மனை வாழ்வைத் துறந்து ஒரு முனிவரைப் போல வாழப் போகிறேன் என்று முடிவெடுக்கிறார். அவரின் மனைவியான குந்தியும், மாத்ரியும் அவரைத் தனித்து விடாமல் அவர்களும் அவரோடு வாழ எண்ணுகின்றனர். அதன் பிறகு அந்த காட்டுப் பகுதியில் வசித்த மக்கள் சிலரை அழைத்து நடந்தவற்றை கூறி, தானும் தனது மனைவியும் இனி அனைத்தையும் துறந்து கானகத்தில் வாழப்போகிறோம்!
இந்தச் செய்தியை அஸ்தினாபுரத்திலுள்ள திருதராஷ்டிரரிடமும், பீஷ்மரிடமும் சேர்த்து விடுங்கள்! என்று கூறி தானும் தனது மனைவியும் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார். இந்த செய்தியை அறிந்த பீஷ்மர் அதிர்ந்து போகிறார். திருதராஷ்டிரன், விதுரன் என அனைவரும் மிகுந்த துன்பம் கொள்கின்றனர். பாண்டு தன் மனைவியரோடு தவங்கள் பல மேற்கொள்கிறார். அப்போது முனிவர்கள் பலரோடு பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. பிள்ளைப் பேறு இல்லாத ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைய மாட்டான் என்பதை அறிகிறார் பாண்டு.
பாண்டவர்களின் பிறப்பு (Birth of Pandavas) :
இது குறித்து பாண்டு மிகுந்த கவலை கொள்கிறார். அந்த சமயத்தில் அங்கிருந்த முனிவர் ஒருவர் தனது ஞான திருஷ்டி மூலம் எதிர்காலத்தை அறிந்து பாண்டுவிடம் நிச்சயம் உன் வம்சம் விருத்தி அடையும் எனக் கூறுகிறார். ஆனாலும் மானிட்ட சாபம் அந்த மன்னன் மனதை வதைக்கிறது. அந்த முனிவர் கூறிய வார்த்தை பலிக்க வேண்டுமெனில் நமக்கு பிள்ளை பிறக்க வேண்டும். ஆனால் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி இப்போது நமக்கில்லை. ஆகையால் என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார் பாண்டு. அப்போது குந்தியை அழைத்து உயர்ந்த பண்புகள் கொண்ட ஆண்மகனோடு கலந்து, ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி கேட்கிறார். ஆனால் பாண்டுவின் வார்த்தைகளைக் குந்தி ஏற்கவில்லை. உங்களைத் தவிர வேறு ஒரு ஆண்மகனை என்னால் ஏற்க முடியாது. என்னை மன்னியுங்கள் அரச முனியே என்று அவரிடம் கெஞ்சுகிறார். ஆனால் பாண்டு குந்தியை விடுவதாக இல்லை.
யுதிர்ஷ்டனின் பிறப்பு (Birth of Yudhishthira) :
இந்த நிலையில் குந்திதேவி தான் துர்வாச முனிவரிடம் இருந்து பெற்ற அற்புத குழந்தை வரம் பற்றி பாண்டுவிடம் கூற, இதை கேட்டு பாண்டுவின் உள்ளம் குளிர்கிறது. மந்திரத்தை இப்போதே பிரயோகப்படுத்து என்கிறார் பாண்டு. எந்த தேவரை இப்போது நான் மந்திரத்தை கூறி அழைக்க வேண்டும் என பாண்டுவிடம் கேட்கிறாள் குந்தி. முதலில் நீ எம தர்மனை அழை. அவனே அறத்தில் சிறந்தவனாவான். அவன் மூலமாகப் பெறப்படும் குழந்தை நிச்சயம் நீதிக்கும், ஒழுக்கத்திற்கும் அதிபதியாகத் திகழ்வான்.
ஆகையால் அந்த மந்திரத்தை உச்சரித்து எமதர்மனை அழைக்க சொல்கிறார் பாண்டு. குந்தி மந்திரத்தை ஜெபித்தவுடன் எமதர்மன் அங்கு வருகிறார். அவர் மூலம் மிகச் சிறந்த பண்புள்ள நல்லதொரு ஆண்மகனை குந்தி ஈன்றெடுக்கிறாள். அவன் பிறந்தவுடன் அசரீரி ஒன்று ஒலிக்கத் தொடங்குகிறது. அதன்படி இந்த குழந்தை யுதிர்ஷ்டன் என்ற பெயரால் அறியப்படுவான். இவர் மிகவும் நேர்மையோடும், உண்மையோடும் இருப்பதோடு, அறம்சார்ந்த செயல்களையே இவன் செய்வான். இவன் மூவுலகம் அறியப்படும் ஒரு சிறந்த அரசனாகத் திகழ்வான் என்கிறது அந்த அசரீரி.
கௌரவர்களின் பிறப்பு (Birth of Kouravas) :
குந்திக்கு முதல் குழந்தை பிறந்த செய்தி அஸ்தினாபுரத்தை எட்டுகிறது. இதற்கிடையில் திருதராஷ்டிரரின் மனைவியான காந்தாரியும் கருவுற்றிருக்கிறாள். ஆனால் ஒரு வருடம் கடந்தும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவள் மிகுந்த துயர் கொள்கிறாள். ஏறக்குறைய அவள் கருவுற்று இரண்டு வருடங்களாகும் அதே சமயத்தில் தான் குந்திக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அஸ்தினாபுரத்தை அடைகிறது. உடனே விரக்த்தியில் அவள் தன வயிற்றை ஓங்கி தன் கையால் அடிக்கிறாள்.
அப்போது அவள் வயிற்றிலிருந்து பிண்டம் ஒன்று வேகமாக வெளியே வந்து விழுகிறது. உடனே அவள் அதை தூக்கி எறிய முற்படுகிறாள். இதைத் தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்த வியாசர், உடனே அஸ்தினாபுரதிற்கு வந்து காந்தாரியை தடுக்கிறார். என்ன காரியம் செய்யத் துணிந்தாய் காந்தாரி? என்கிறார் வியாசர். உடனே காந்தாரி தன் மனதிற்குள் ஏற்பட்ட துயரத்தைப் பற்றி கூறி அழுகிறாள்.
துரியோதனின் பிறப்பு (Birth of Duryodhana) :
அதோடு நான் நூறு மகனைப் பெற்றெடுப்பேன் என்ற வரத்தைப் பெற்றேன். ஆனால் இப்போது வந்திருப்பதோ வெறும் பிண்டம். இதனால் நான் என் செய்வேன் என்று கலங்குகிறாள் காந்தாரி. அதைக்கேட்ட துருவாசர், மகளே காந்தாரி! நிச்சயம் நீ பெற்ற வரம் பொய்த்துப் போகாது! என்று கூறி அவள் மனதை தேற்றியதோடு, அந்தப் பிண்டத்திற்கு உயிர் கொடுக்கும் முறையினைக் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் துருவாசர். சிறிது நாட்களுக்குப் பின் அந்தப் பிண்டத்திலிருந்து பிறந்தான் துரியோதனன். துரியன் பிறந்த செய்தி அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. அவன் பிறந்தவுடன் எழுப்பும் அகோரமான சத்தத்தைக் கேட்டு ஓநாய்களும், காகங்களும், விலங்கினங்களும் மற்றும் இன்ன பிற உயிரினங்களும் அலறத் துவங்குகிறது. அதனால் அங்குள்ளோர் அனைவரும் மிகுந்த அச்சம் கொள்கின்றனர்.
தனக்கு குழந்தை பிறந்ததையடுத்து திருதராஷ்டிரன் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். உடனே திருதராஷ்டிரன் பீஷ்மர், விதுரர் போன்ற சான்றோர்களை அழைத்து யுதிஷ்டிரன் துரியோதனனுக்கு முன் பிறந்துள்ளான். எனினும் துரியன் இந்த நாட்டை ஆள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என்று கேட்கிறான். இதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்குக் காரணம் துரியோதனன் பிறந்த தருணத்தில் நாட்டில் எழுந்த கெட்ட சகுனங்களே!
அவர்கள் அனைவரும் இதுகுறித்து திருதராஷ்டிரனிடம் துரியன் பிறந்த சகுணம் சரியில்லை என்பதால், அவன் பேரழிவை விளைவிக்கக் கூடிய ஒரு ஆண்மகனாகவே இருப்பான்! அவனால் இந்த உலகில் அதர்மம் அதிகரிக்கும்! அதனால் அந்த சிசுவை நீ கைவிடுவதே சிறந்தது! ஒரு நாட்டின் நன்மைக்காக நீ இவ்வாறு செய்வதில் தவறில்லை! என்று கூறுகின்றனர். ஆனால் பிள்ளைப்பாசம் திருதராஷ்டிரனை தடுக்கிறது. அதன்பிறகு ஒரு மாத காலத்திற்குள் வியாசர் கூறியபடி மீதமுள்ள 99 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
யுதிர்ஷ்டன் பிறந்த பிறகு அடுத்து எதுபோன்ற குழந்தையைப் பெற்றெடுக்கலாம்? என்று கூறி குந்தியும், பாண்டுவும் யோசித்து பலம் பொருந்திய ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். உடனே மந்திரத்தைக் கூறி வாயு தேவனை அழைக்கிறாள் குந்தி. அவர் மூலம் வலிமைமிக்க ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள் குந்தி. அவன் பிறந்தவுடன் இவன் மிகவும் வலிமை மிக்கவராக திகழ்வான்! எல்லோராலும் இவன் பீமன் என்று அழைக்கப்படுவான்! என்று அசரீரி கூறுகிறது. பீமனும், துரியோதனனும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பீமன் பிறந்த பிறகு இந்திரனைப் போல ஆற்றலுடைய ஒரு ஒரு மகனை பெற்றெடுக்க நினைத்தார் பாண்டு. இந்திரனை நினைத்து மந்திரத்தை ஜெபிக்கும்படி கூறுகிறார் பாண்டு. அதன்படி பெரும் பலத்தோடும், போரில் எவரும் வெல்ல முடியாத ஆற்றலோடும், அழகிய தோற்றத்துடனும், பெரும் ஞானத்தோடும் பிறந்தான் அர்ஜுனன்.
அதன் பிறகு மேலும் ஆண்குழந்தைகளை பெற எண்ணிய பாண்டு அது குறித்து குந்தியிடம் கூற, ஆனால் குந்தியோ இதற்கு மேல் நான் மற்ற தேவர்களோடு கூடி குழந்தை பெறுவதென்பது முறையாகாது! நான்கு ஆண் மகனோடு ஒரு பெண் கூடுவதென்பது, மிகப்பெரும் தவறு என்ற சாஸ்திரத்தினை நீங்கள் அறிவீர்கள்! ஆகையால் அந்தத் தவறை என்னை செய்ய சொல்லாதீர்கள் அரசே! என்று பாண்டுவிடம் அவள் வேண்டுகிறாள். இதற்கிடையில் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரி பாண்டுவிடம், தனக்குப் பிள்ளை பேறு இல்லை என்பதைக் கூறி வருந்துகிறாள்.
அதோடு குந்தியிடம் என்னுடைய துயர் குறித்து எடுத்துரைத்து, அந்த மந்திரத்தை எனக்கு கற்றுக் கொடுக்கும்படி குந்தியிடம் கூறுங்கள்! என்று பாண்டுவிடம் வேண்டுகிறார். அதன்படி பாண்டு குந்தியிடம் மாத்ரியின் வருத்தத்தைக் கூற, குந்தியும் மாத்ரிக்கு மந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். அதன்படி மாத்ரி மந்திரத்தை ஜெபித்து அஸ்வினி குமாரர்ககளை நினைக்கிறாள்.
அவர்கள் மூலம் நகுலன் மற்றும் சகாதேவன் என அழகில் சிறந்த இரு பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். அதன்பிறகு அந்த குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள்? பாண்டவர்கள் எப்படி அரண்மனையை வந்தடைகிறார்கள்? என்பதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.