பீமனை கொல்ல துரியன் செய்த பெரும் சதி
(The Great Conspiracy of Durian to Kill Bhima)
பாண்டுவின் இறப்பு (Death of Pandu) :
பாண்டு சிலகாலம் ஒரு முனிவன் போல வாழ்ந்தாலும், ஒரு கட்டத்தில் அவனுக்குள் காம உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மிகவும் அழகு பொருந்திய மாத்ரையைக் கண்டவுடன் அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், மாத்ரியுடன் இணைய முற்படுகிறார். மாத்ரி அவரை எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். ஆனால் பாண்டுவோ அவளை விடவில்லை. இறுதியாய் முனிவரின் சாபம் பலித்து போய் அவன் மரண தேவனின் பிடியில் அகப்பட்டுக் கொள்கிறான். அதைக் கண்டு பெரும் துயர் கொள்கிறார். மாத்ரி. அதோடு முனிவரின் சாபம் அறிந்தும் நீ அவரோடு கூட எப்படி ஒப்புக் கொண்டாய்? என்று மாத்ரி மீது பெரும் சினம் கொள்கிறார் குந்தி.
பாண்டுவின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட மாத்ரையால் அவரைத் தடுக்க இயலவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்த சமயத்தில் மாத்ரி எவ்வளவோ தடுத்தும் பாண்டுவை கட்டுப்படுத்த முடியவில்லை. மாத்ரி தன் இரு பிள்ளைகளையும் குந்தியிடம் ஒப்படைத்து விட்டு பாண்டுவின் துயரம் தாங்காமல் அவளும் உடன்கட்டை ஏறுகிறாள். அதன்பிறகு அங்கு கூடியிருந்த முனிவர்கள் பலர் பாண்டு மற்றும் மாத்திரையின் எரியப்படாத சில உடல் பாகங்களை எடுத்துக்கொண்டும் குந்தி மற்றும் ஐந்து பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டும் அஸ்தினாபுரத்தை நோக்கி விரைந்தனர். அஸ்தினாபுரத்தை அடைந்ததும் பாண்டு மற்றும் மாத்திரையின் இறப்பு குறித்து பீஷ்மரிடமும் மற்ற அனைவரிடமும் கூறப்படுகிறது.
பாண்டுவின் இறப்பால் நாட்டில் ஏற்பட்ட துக்கம் :
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பீஷ்மர் தேற்ற முடியாத அளவிற்கு வருத்தம் கொள்கிறார். மாவீரனான தங்களின் மன்னன் பாண்டுவின் இறப்பை கேட்டு மக்கள் அனைவரும் கவலை கொள்கின்றனர். பீஷ்மரின் ஆலோசனைப்படி ராஜ மரியாதையோடு அவர்கள் இருவருக்கும் அஸ்தினாபுரத்தில் இறுதிச் சடங்குகளும், துக்க நிகழ்வுகளும் நடைபெறுகிறது. பாண்டுவின் மரணத்திற்காக 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பாண்டுவின் இழப்பால் பல மாதங்கள் நாடே துயரம் கொள்கிறது.
இந்த நிலையில் அங்கு வந்த சத்தியவதியின் மகனான வியாச முனிவர், தாயே! இனி இந்த பூமியில் கௌரவர்கள் மூலம் அதர்மங்கள் அதிகரிக்கும். குற்றங்களும் கொடுஞ்செயல்களும் இந்த உலகை பீடிக்கும். அதனால் இந்த குலமே அழியக்கூடும். அதையெல்லாம் நீங்கள் இந்த வயது முதிர்ந்த காலத்தில் பார்க்க வேண்டாம் தாயே! நீங்கள் இனி இங்கிருக்க வேண்டாம். கானகம் சென்று தவத்தினை மேற்கொள்ளுங்கள் என்கிறார் வியாசர். வியாசர் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காத சத்தியவதி, தனது இரு மருமகள்களுடன் இது குறித்து பேசுகிறார். அவர்களும் சத்தியவதியுடன் கானகம் செல்ல தயாராகின்றனர். பீஷ்மரிடம் விடைபெற்று அவர்கள்அனைவரும் கானகம் செல்கின்றனர்.
பீமனை கொல்ல துரியன் செய்த பெரும் சதி :
சில காலத்தில் சத்தியவதி அங்கு இறந்து போகிறார். பாண்டுவின் இறப்பிற்குப் பிறகு பாண்டவர்கள் அனைவரும் ராஜகுமாரர்களாக அரண்மனையில் வலம் வருகின்றனர். கௌரவர்கள் 100 பேர் இருந்தாலும், அவர்களிடம் இருந்து இந்த ஐவரும் தங்களது திறமைகளால் தனித்து காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாய் பீமசேனன், அந்த நூறு பிள்ளைகளையும் சிறுவயது முதலே புரட்டியெடுக்க துவங்குகிறான். குஸ்தி முதல் பலத்தை நிரூபிக்கும் அனைத்து விதமான போட்டிகளிலும் பீமன் அவர்களை பந்தாடுகிறான். பீமன் இப்படி செய்த பல குறும்பு செயல்களால் துரியோதனன் அவன் மீது கடும் சினம் கொள்கிறான். இவனை இப்படியே விட்டால் இவன் ஒருவனே கௌரவர்கள் 100 பேரையும் அழித்துவிடுவான்.
அதனால் இவனைக் கொன்று விடுவதே சிறந்தது. அதன் பிறகு மற்றவர்களை சிறையில் அடைத்து ராஜ்யத்தை நாமே ஆளலாம் என்று அந்த சிறு வயதிலேயே மிகக் கொடிய எண்ணங்களோடு செயல்படத் தொடங்கினான் துரியன். அன்று முதல் அவன் பீமனை கொல்வதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கங்கைக் கரையோரம் மாளிகை ஒன்றை அமைத்து அதில் நிறைய உணவுகளை சமைத்து வைத்து பாண்டவர்கள் ஐவரையும் கௌரவர்கள் அங்கு விளையாட கூட்டிச் சென்றனர். அங்கு கொடிய விஷம் கலந்த பல உணவுகளையும், பானங்களையும் துரியன் பீமனுக்குக் கொடுக்கிறான். அதனால் பீமன் மயங்கிப் போகிறான். உடனே துரியோதனனும், அவன் தம்பிகளும் பாண்டவர்கள் அறியாத சமயம் பார்த்து ஒரு கயிரைக் கொண்டு பீமனை கட்டி கங்கையில் தூக்கி எறிகின்றனர்.
நாகலோகத்தில் வாசுகியின் உபசரிப்பு :
பீமன் நீரில் மூழ்கி நாகலோகம் வரை செல்கிறான். அங்கு பாம்புகள் பல அவனைத் தீண்டத் துவங்குகிறது. பாம்புகளின் விஷத்தால் பீமனின் உடலில் இருந்த விஷம் முழுவதும் அவனை விட்டு நீங்கியது. அப்போது அவன் பாம்புகளின் தலைவனான வாசுகியை கண்டான். குந்தியின் பாட்டனான ஆரியன் என்பவன் பாம்புகளில் ஒருவனாவான். பீமனைக் கண்டவுடன் வாசுகிக்கு, ஆரியன் நினைவிற்கு வருகிறான். உடனே அவனை பீமனை ஆரத்தழுவி தனது உறவினனை சிறப்பாக கவனிக்கிறான். அதன் பிறகு 100 யானை பலம் தரும் ஒரு கோப்பை அமுதத்தினை பீமனுக்கு வாசுகி பருக்கக் கொடுத்தார்.
அவன் தனது பசியாறும் வரை அந்த அமுதத்தினை பல அண்டாக்கள் குடித்துக்கொண்டே இருந்தான். அதன் பிறகு அவன் அங்கேயே உறங்கிவிடுகிறான். இதற்கிடையில் பாண்டவர்கள் பீமனைத் தேடத் தூவங்குகின்றனர். பீமன் தொலைந்துபோன தகவலை குந்திக்கும் தெரியப்படுத்துகின்றனர். அனைவரும் எவ்வளவோ தேடியும் பீமன் கிடைக்கவில்லை. இப்படி தொடர்ந்து 8 நாட்கள் அந்த தேடல் தொடர்கிறது. அந்த எட்டு நாட்களும் பீமன் உறங்கிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவன் குடித்த அமுதம் முழுவதும் ஜீரணித்து, இப்போது அவன் 10 ஆயிரம் யானைகள் பலத்தோடு விழித்தெழுகிறான்.
அஸ்தினாபுரத்திற்கு திரும்பும் பீமன் (Bhima returns to Astinapur):
நாகங்களிடமிருந்து பிரியா விடை பெற்று அங்கிருந்து நேராக அரண்மனை வந்து தனது சகோதரர்களையும், குந்தியையும் சந்திக்கிறான். பீமனைக் கண்ட பிறகுதான் குந்திக்கு உயிரே வந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் துயர் கொண்டிருந்தாள். நடந்தவை முழுவதையும் பீமன் தன் சகோதரர்களிடம் கூறுகிறான். அதைக் கேட்ட யுதிஷ்டிரன் இதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறியதோடு இனி நாம் அனைவரும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் கூறுகிறான்.
அதன் பிறகும் பீமனைக் கொல்ல துரியன் எவ்வளவோ முயற்சிக்கிறான் ஆனாலும் முடியவில்லை. இந்த நிலையில் விதுரர் பாண்டவர்கள் மீது கொண்ட பேரன்பால் அவர்களை கவனமுடன் பார்த்துக் கொள்கிறார். நடப்பவை அனைத்தையும் பீஷ்மர் கவனித்துக் கொண்டிருப்பதோடு, ஒருவரின் குணத்தை பற்றியும் ஆராய்கிறார். அதன் பிறகு சிறிது காலத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் கல்வி கற்கச் செல்கின்றனர். அதுபற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.