மகாபாரதத்தில் பீஷ்மரின் வரலாறு
(History of Bhishma in Mahabharat)
மஹாபாரதத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் என அனைவர்க்கும் நல்ல குருவாகவும், மரணத்தையே வென்றவருமாக திகழ்ந்த பீஷ்மருடைய வரலாற்றைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
பிரம்மதேவரின் சாபம் (Curse of Brahma):
மகாபிஷக் என்னும் அரசன் தன் வாழ்வில் பல நல்ல காரியங்களை செய்ததன் காரணமாக அவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கிறது. அதோடு தேவர்களுக்கு சமமான உரிமைகளை அவருக்கு தேவர்கள் அளிக்கின்றனர். ஒரு சமயம் பிரம்மதேவரின் அவையில் தேவர்கள் அனைவருடனும் மகாபிஷக் மன்னனும் இருந்தான். அப்போது கங்காதேவி அந்த சபைக்குள் வரும் சமயத்தில் தென்றல் காற்று வீசியதன் காரணமாக அவளின் மேலாடை விலகுகிறது. இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒரு மரியாதைக்காக அவர்களின் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொள்கின்றனர்.
ஆனால் மன்னன் மகாபிஷக் மட்டும் கங்காதேவியை உற்றுப் பார்க்கிறான். கங்காதேவியும் அவள் ஆடையை சரி செய்வதை விட்டுவிட்டு மன்னனை நோக்குகிறாள். இதைக் கவனித்த பிரம்மதேவரின் கண்கள் சிவக்க, உடனே கோபத்தில் இருவரும் மனிதராய்ப் பிறந்து பூலோகத்தில் உங்களது இச்சைகளை அனுபவித்த பிறகு சாப விமோசனம் பெறுவீர்கள் என்று சாபமிடுகிறார். அவரின் சாபம் காரணமாக பிரதீபன் என்ற அரசனுக்கு மகனாய்ப் பிறந்தார் மகாபிஷக். அந்த பிள்ளையின் பெயர் சந்தனு.
கங்காதேவியின் நிபந்தனை (Condition of Gangadevi) :
அரசன் ஆன பிறகு அவன் ஒருநாள் வேட்டைக்கு செல்கையில் தாகம் காரணமாக கங்கைக் கரையோரம் வருகிறார். அந்த சமயம் அழகில் மிகச்சிறந்த ஒரு பெண் அவர் முன் தோன்றுகிறார். அவள் மானுடப் பெண்ணா..! இல்லை தேவலோகப் பெண்ணா..! என்று சந்தனு வியக்கும் வகையில் இருக்கிறாள். அவள் அழகில் மயங்கிய சந்தனு அரசன், அவளை திருமணம் செய்து கொள்ள எண்ணி, தன்னுடைய ஆசையை அவளிடம் தெரிவிக்கிறார். அந்த பெண் ஒரு நிபந்தனையோடு மணக்க ஒப்புக்கொள்கிறார். அதன்படி அவள் தன் இஷ்டத்திற்கு எதையும் செய்வாள்! அவளின் செயல்களை சந்தனு எப்போதும் தடுக்கக் கூடாது! அப்படி தடுத்தால் அவள் அவனை விட்டுப் பிரிந்து விடுவாள்! என்பதே அந்த நிபந்தனை. அவளின் அழகில் மயங்கிக்கிடந்த சந்தனு, அவள் கூறிய நிபந்தனைகளுக்கு முழு சம்மதம் கூறுகிறார். அவர்களின் திருமணமும் நடக்கிறது. அந்தப் பெண்தான் கங்காதேவி.
வசிஷ்ட முனிவரின் சாபம் (Curse of Vashishta Sage):
இது ஒருபுறமிருக்க வருணனின் புதல்வரான வசிஷ்ட முனிவர், நந்தினி என்கிற ஒரு பசுவை வளர்த்து வருகிறார். ஒருநாள் தேவர்களாகிய எட்டு வசுக்களும் தங்களது மனைவிகளோடு அந்தப் பக்கம் செல்கின்றனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினி பசுவின் அழகை கண்டு வியக்கிறாள். இதைக் கவனித்த பிரபாசன் வசிஷ்டரின் பசு என்பதை அறிந்து, அதன் சிறப்புகளைப் பற்றியும், அதன் பாலில் உள்ள அபூர்வமான சக்திகளைப் பற்றியும் தன் மனைவியிடம் கூறுகிறார். இதைக் கேட்ட பிறகு அந்த பசு தனக்கு வேண்டும் என்றால் அவன் மனைவி. அதைக் கேட்டதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்தப் பசுவை வசிஷ்டருக்கு தெரியாமல் அவர் குடிலில் இருந்து திருடி வருகிறார் பிரபாசன்.
வசிஷ்டர் வந்து பார்க்கும்போது பசு இல்லாததால், அவர் தன் ஞான திருஷ்டியால் அது யார் திருடிச் சென்றது என்பதை அறிகிறார். உடனே எட்டு வசுக்களும் மனிதர்களாய் பூமியில் பிறக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். இதை அறிந்தவர்கள் உடனே வந்து பசுவை ஒப்படைத்துவிட்டு வசிஷ்டரின் காலில் விழுந்து கெஞ்சி தங்களுக்கான சாப விமோசனத்தை கூறுமாறு வேண்டுகின்றனர். அவர்களுக்கு இரக்கம் காட்ட எண்ணிய வசிஸ்ட முனிவர் இந்தத் திருட்டுக்கு துணையாய் இருந்த ஏழு வசுக்களும் மனிதர்களாய் பிறந்த உடனே சாப விமோசனம் பெறுவர். ஆனால் இந்தத் திருட்டுக்கு முழுமுதற் காரணமாக இருந்த வாசன் மட்டும் மண்ணுலகில் பிறந்து, நீண்ட காலம் வாழ்வார். சாஸ்திரங்களில் வல்லவராகத் திகழ்வார். அதோடு அவன் பூமியில் வாழும் காலம் வரை அவனை யாராலும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது. ஆனால் அவனுக்குப் பெண் சுகம் என்பதே எப்போதும் இருக்காது என்று கூறி சாப விமோசனம் தருகிறார் வசிஷ்டர்.
சந்தனு மற்றும் கங்கை தேவியின் திருமண வாழ்க்கை (Marriage life of Santhanu and Ganga Devi) :
இப்போது நாம் கங்காதேவி மற்றும் சந்தனு கதைக்கு வருவோம். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். கங்காதேவி கர்ப்பம் தருகிறாள். இதை அறிந்த சந்தனு ஆனந்தத்தில் மகிழ்கிறார். ஊரே கோலாகலமாக பத்து மாதங்களில் கங்காதேவிக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறந்த அடுத்த நொடியே அவள் அதை ஒரு துணியில் சுற்றி கங்கையில் வீசி எறிகிறாள். அவளின் இந்த செயலை தடுக்க இயலவில்லை. அதற்கு காரணம் திருமணத்திற்கு முன்பு அவள் போட்ட நிபந்தனை. அதை சந்தனு மீறினால் அவள் தன்னை விட்டு பிரிவால் என்பதற்காக சந்தனு அமைதி காக்கிறார்.
அதன் பிறகு அடுத்தடுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் அவள் கங்கையில் வீசி எறிகிறாள். ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசி எறிகிறார். எட்டாவது முறையாக அவள் கர்ப்பம் தரித்த பிறகு இனி என்ன ஆனாலும் சரி அந்தக் குழந்தையை நாம் கொல்ல அனுமதிக்கக்கூடாது. எப்படியாவது இதை தடுத்தே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கிறார் சந்தனு. கங்காதேவிக்கு எட்டாவது குழந்தை பிறக்கிறது ஆனால் அதைக் கொல்ல சந்தனு மகாராஜா அனுமதிக்கவில்லை.
பீஷ்மரின் பிறப்பு (Birth of Bhisma):
உடனே கங்காதேவி கேட்கிறாள், ஏழு குழந்தைகளை கொள்ள அனுமதித்து எட்டாவது குழந்தையை மட்டும் கொள்ள அனுமதிக்காதது ஏன்.? இதுவரை இல்லாத குழந்தை பாசம் இப்போது வர காரணம் என்ன.? எனப் பல கேள்விகளை அடுக்குகிறாள் தேவி. ஆனால் அவளின் கேள்விகள் எதற்கும் பதில் கூறமுடியவில்லை. அதன்பிறகு கங்காதேவி தங்களின் சாபம் குறித்து கூறுகிறார். அதோடு அந்த எட்டு வசுக்கள் பெற்ற சாபம் பற்றியும் கூறுகிறாள். அதில் 7 வசுக்கள் தங்களுக்கு குழந்தையாய் பிறந்து சாபவிமோச்சனம் பெற்று விட்டதாகவும், எட்டாவதாகப் பிறந்த வசுதான் பிரபாசன் என்றும் கூறிய கங்காதேவி, தான் திருமணத்திற்கு முன்பு கூறிய நிபந்தனைப்படி நீங்கள் இந்த குழந்தையைக் கொல்ல எண்ணைத் தடுத்ததால், இப்போது நான் உங்களை விட்டு பிரிகிறேன் என்று கூறுகிறார். அதோடு இல்லாமல் இந்த குழந்தையை நானே வளர்த்து தக்க சமயம் வரும்போது உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து குழந்தையோடு விடை பெறுகிறாள் கங்காதேவி. மனைவியையும் குழந்தையையும் இழந்த சோகத்தில் சந்தனு மகாராஜா தவிக்கிறார். ஆனாலும் மக்களுக்கு குறை ஏதும் இருக்கக்கூடாது என்பதற்காக நல்லாட்சி புரிகிறார்.
சில காலங்களுக்குப் பிறகு கங்கைக் கரையோரம் சென்று அவர் கங்கை நதியை பார்த்தவாறே தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தைப் பற்றி எண்ணி கவலை கொள்கிறார். அப்போது அங்கு வந்த வாலிபன் ஒருவன் தன் கணைகள் மூலம் கங்கை நதியையே தடுத்து நிறுத்துகிறார். அவன் அழகையும், சாகசத்தையும் கண்டு ஆச்சரியமடைந்த சந்தனு யார் நீ..? உன் கணைகள் கொண்டு எவ்வாறு கங்கையை தடுத்தாய்? என்று கேட்கிறார். அப்போது அங்கு தோன்றும் கங்காதேவி, இவன் தான் நம் மைந்தன் தேவவிரதன்! என்று சந்தனுவிடம் கூறுகிறார். வசிஷ்டரிடம் கல்வியையும், பரசுராமரிடம் போர்க் கலைகள் பலவற்றையும் கற்றவன்! என்று தன் மகனின் பெருமைகளை கூறுகிறார் கங்காதேவி. நான் கூறியவாறே இவனை மிகச் சிறந்த ஒரு ஆண்மகனாக வளர்த்து இப்போது உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் கங்காதேவி.
பீஷ்மரின் சபதங்கள் (Bhisma's Vows):
தன் மகனான தேவரைப் பார்த்தவுடன் சந்தனுவின் உள்ளம் குளிர்கிறது. அவனை வாரி அணைக்க அவனும் தன் தந்தை மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார். பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்த நிலையில் சந்தனு அரசன், மீனவப் பெண்ணான சத்தியவதியின் அழகில் மயங்கி அவள் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் அவளின் வளர்ப்புத் தந்தையான செம்படவன் இந்த திருமணத்தை மறுக்கிறார். ஒருவேளை சத்தியவதி சந்தனுவை மணந்தாலும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் இந்த நாட்டை ஆள முடியாது.
ஒருவேளை தேவவிரதன் தன் ராஜ பதவியை விட்டுக் கொடுத்தாலும், அவன் சந்ததியினர் என் மகனுக்கு அதை வழங்க மாட்டார்கள். ஆகையால் தன் மகளின் சந்ததிகளாக வருபவர்கள் அரசனாகும் தகுதியை இழப்பார்கள் என்று கூறி அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் செம்படவன். இதன் காரணமாக சந்தனு மகாராஜா மிகுந்த துயரம் கொள்கிறார். இந்த விடயத்தை அறிந்த தேவவிரதன், தன் தந்தையின் துயரத்தைப் போக்க எண்ணி, நான் என் வாழ்நாள் முழுவதும் எப்போதும் நாட்டிற்கு அரசனாக இருக்க மாட்டேன்! மாறாக இந்த நாட்டிற்கு சேவகனாகவே இருப்பேன்!
அதோடு நான் சாகும்வரை பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பேன்! இது என் அன்னை கங்கா தேவியின் மீது ஆணை! என்று சபதம் எடுக்கிறார். தேவவிரதன் எடுத்த சபதம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. தன் தந்தையின் காதலுக்காக தன்னுடைய அரசபதவியை மட்டுமல்லாது தன்னுடைய திருமண வாழ்வையும் தியாகம் செய்கிறார். இதைக் கண்ட தேவர்கள், தேவர் போற்றும் வகையில் "பீஷ்ம பீஷ்ம" என்று மலர்களை தூவுகின்றனர். பீஷ்ம என்றால் கடுமையான விரதத்தை ஏற்பவன் என்று பொருள்.
அன்றிலிருந்துதான் தேவவிரதன் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார். தன்னுடைய சுகத்திற்காக, தன் மகன் மிகப் பெரிய தியாகத்தைச் செய்துள்ளான் என்பதை உணர்ந்து சந்தனு மகாராஜா, பீஷ்மருக்கு ஒரு வரம் அளிக்கிறார். அதன்படி பீஷ்மர் எப்போது மரணிக்க விரும்புகிறாரோ, அப்போதே அவர் மரணம் நிகழும்! அதுவரை மரண தேவன் அவரை நெருங்க மாட்டான்! என்பது அந்த வரம். அதன்பிறகு பீஷ்மர் தன் வாழ்வில் ஏராளமான தியாகங்களையும்,போர்களில் பங்கேற்று பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.