பீஷ்மருக்கும், பரசுராமருக்கும் இடையே நிகழ்ந்த சரித்திரப் போர்
(Bhishma vs Parshuram Battle in Mahabharata)
தந்தைக்காக பீஷ்மர் மேற்கொண்ட பிரம்மச்சரிய விரதம் தொடர்பான செய்திகளை (History of Bhishma) முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது வரலாற்றிலேயே சிறப்புமிக்க போராக கருதப்படும் பீஷ்மருக்கும், பரசுராமருக்கும் இடையே நிகழ்ந்த போரைப் பற்றி இங்கு பார்ப்போம்.
சந்தனு மகாராஜாவின் இழப்பு :
சந்தனு மகாராஜாவும், சத்யவதியும் கூடி வாழ்கின்றனர். அவர்கள் இருவருக்கும் சித்திராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் என இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் இருவரையும் பீஷ்மர் தன் பிள்ளைகள் போல வளர்க்கிறார். அவர்கள் இருவரையும் அனைத்து விதமான கலைகளையும் கற்கும்படி செய்கிறார். சந்தனு மகாராஜா இறப்பிற்குப் பிறகு சித்திராங்கனுக்கு மகுடம் சூட்டப்படுகிறது. பீஷ்மரின் வழிகாட்டுதலால் சிறப்பாக ஆட்சி புரிகிறான் சித்திராங்கதன்.
பீஷ்மர் நாட்டில் இல்லாத சமயத்தில் சித்திராங்கனை ஒரு கந்தர்வன் கொல்கிறான். அதன்பிறகு பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு மகுடம் சூட்டுகிறார். இந்த சமயங்களில் பீஷ்மர் அணு அளவு கூட தன் வாக்கிலிருந்து மாறாமல் அஸ்தினாபுரத்திற்கு ஒரு சேவகனாகவே இருக்கிறார். விசித்திரவீரியனுக்கு நாட்டை ஆளும் அனைத்து நுட்பங்களையும் அவர் கற்றுத் தருகிறார். சில காலத்திற்குப் பிறகு விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்யலாம் என்று சத்தியவதி எண்ணுகிறார்.
காசி அரசன் நடத்தும் சுயம்வரம் :
அப்போது காசி அரசன் தனது 3 மகள்களுக்கு சுயம்வரம் நடத்துகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட சத்தியவதி, அந்த மூன்று பெண்களையும் இங்கு கொண்டு வருமாறு பீஷ்மருக்கு ஆணையிடுகிறார். அதன்படி சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார் பீஷ்மர். அனைவரும் அங்கு அவரை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். திருமணமே வேண்டாம் என்று சபதம் பூண்ட அவர் எதற்காக இங்கு சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
ஆனால் பீஷ்மர் அங்கு சென்றதும் உடனே அங்கிருந்த அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற மூன்று பெண்களையும் தூக்கிச் செல்கிறார். பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் தூக்கிச் சென்றதால் அவரை பின் தொடர்ந்து அங்கிருந்த அனைத்து அரசர்களும் வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் தூக்கி வருகிறார். அப்போது சால்வ நாட்டு மன்னன் மட்டும் பீஷ்மரை விடாமல் துரத்துகிறான். அவனையும் தோற்கடித்து அனைவரையும் தூக்கிவந்து அஸ்தினாபுரத்தில் இறக்குகிறார்.
அம்பையின் கோபம் (Ambai's anger):
என் மனதில் இருக்கும் எண்ணத்தை ஒருபோதும் அறியாமல் என்னை ஏன் தூக்கி வந்தீர்கள் என்று அம்பை பீஷ்மரிடம் கேட்கிறாள். உன் மனதில் உள்ள எண்ணம் தான் என்ன என்று பீஷ்மர் அவளிடம் கேட்க, உங்களை விடாமல் தொடர்ந்து வந்த சால்வ நாட்டு மன்னன் அவனைத்தான் நான் மணந்து கொள்ள விரும்புகிறேன். அவனே என் மனம் முழுவதும் நிறைந்துள்ளான் என்று கூறுகிறாள். உடனே பீஷ்மர் தன் காவலர்களை அழைத்து சால்வ நாட்டு மன்னனிடம் கொண்டுபோய் விடச் சொல்கிறார். காதலை விட அரசர்களுக்கு எப்போதுமே வீரம் தான் முக்கியம். ஆகையால் உன்னை மீட்க முடியாமல் தோற்றுப் போன என்னால் உன்னை மறக்க முடியாது.
அதனால் உன்னை யார் தூக்கி சென்றார்களோ அவர்களிடமே திரும்பி செல்லென்று அம்பையிடம் சால்வ நாட்டு மன்னன் கூறிவிடுகிறார். இதை அம்பை பீஷ்மரிடம் சொல்ல, அவர் உடனே விசித்திரவீரியனிடம் கேட்கிறார். ஆனால் அவன் வேறு ஒரு அரசனை மனதில் நினைத்து வாழ்ந்த ஒரு பெண்ணை என்னால் மணக்க இயலாது என்று கூறி விட்டு மற்ற இருவரை மட்டும் மணக்கிறான். இதனால் அம்பை பீஷ்மரிடம் வந்து தன்னை மணக்குமாறு வேண்டுகிறாள். பீஷ்மரின் பிரமச்சரிய விரதத்திற்கு முதல் சவால் இப்போது வருகிறது. அம்பை சொன்ன இந்த வார்த்தையை கேட்டு அவர் மிகவும் வருந்துகிறார். பெண்ணே நான் பிரம்மச்சரிய தவத்தை மேற்கொள்பவன். என்னால் உன்னை மணக்க இயலாது என்று கூறுகிறார்.
பீஷ்மரின் சபதத்திற்கு வந்த சோதனை :
ஆனால் தொடர்ந்து பீஷ்மரை வற்புறுத்துகிறார் அம்பை. ஆனாலும் பீஷ்மர் தன் முடிவில் நிலையாக நிற்கிறார். யாரிடம் சென்று தன் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று யோசிக்கிறார். பரசுராமர் சொன்னால் பீஷ்மர் தட்ட மாட்டார் என்று எண்ணி, தன்னுடைய துன்பங்கள் அனைத்தையும் பரசுராமரிடம் சென்று கூறி அது குறித்து பீஷ்மரிடம் பேசுமாறு அவரை வேண்டுகிறாள். பரசுராமரும் பீஷ்மரை சந்திக்க வருகிறார். தன்னுடைய குருவைக் கண்ட உடனே அவரை மிகச் சிறந்த முறையில் வரவேற்று உபசரிக்கிறார் பீஷ்மர். தான் வந்த காரியத்தை பீஷ்மரிடம் கூறி அம்பையை மணக்குமாறு கேட்கிறார் பரசுராமர்.
அதற்கு பீஷ்மர் நான் என் உடலில் மூச்சுள்ளவரை பிரம்மச்சாரியாகவே வாழ்வேன் என்ற சபதத்தை ஏற்று உள்ளேன். ஆகையால் இதைத் தவிர நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்யக் காத்துக் கிடக்கிறேன். ஏன் என் உயிரை வேண்டுமானாலும் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குருவின் வார்த்தையை மீறிய சிஷ்யன் என்ற அவப்பெயரை நீங்கள் எனக்கு அளித்து விட வேண்டாம் என்று பரசுராமரிடம் வேண்டுகிறார் பீஷ்மர். ஆனால் பரசுராமரும் நான் உன்னை அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்து விட்டேன். ஆகையால் அந்தப் பெண்ணை மணந்துகொள் என்று நிர்ப்பந்திக்கிறார் பரசுராமர்.
பீஷ்மருக்கும், பரசுராமருக்கும் இடையே ஏற்படும் போர் (War between Bhishma and Parasurama):
பீஷ்மரின் பிரமச்சரிய விரதத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய சோதனையாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் பீஷ்மர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்கவே, பீஷ்மருக்கும், பரசுராமருக்கும் இடையே போர் மூள்கிறது. பரசுராமரிடம் ஆசி பெற்று தன் ரதத்தில் ஏறி அமர்ந்து போருக்கு தயாராகிறார் பீஷ்மர். பரசுராமரிடம் அப்போது ரதம் ஏதும் இல்லாததனால் தரையில் நின்று கொண்டிருக்கிறார். அதனால் ரதத்தையும் போருக்கு தேவையான ஆயுதங்களையும் பரசுராமருக்கு தர வேண்டும்.
அதுவே தர்மம் அதன் பிறகே போரைத் தொடங்க வேண்டும் என்று எண்ணி அதை பரசுராமரிடம் கூறினார் பீஷ்மர். எனக்கு பூமியே ரதம்! வேதங்களே குதிரை! வாயுவே சாரதி! காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகியோர் கவசம் என்று கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் ரதத்தில் ஏறி கவசம் கொண்டவராக இருக்கிறார் பரசுராமர். மிகச் சிறந்த வீரர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தமானது மிகவும் கடுமையாக இருக்கிறது. மகாபாரதப் போர் நடந்த குருஷேத்திரத்தில் தான் இந்த யுத்தம் நடக்கிறது. மகாபாரதப் போரோ வெறும் 18 நாட்களில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்த யுத்தம் இருபத்தி மூன்று நாட்கள் நீடிக்கிறது.
Bhishma vs Parasurama (போரின் தனிச்சிறப்புகள்)
இந்த யுத்தத்தை தேவர்கள் முதற்கொண்டு அனைவரும் மேலோகத்திலிருந்து வந்து பார்க்கின்றனர். அதேபோல பீஷ்மரின் தாய் தந்தையரான கங்காதேவியும், சந்தனுவும் கூட இந்த யுத்தத்தைக் காண விண்ணுலகில் இருந்து வருகின்றனர். முதலில் சாதாரணமாக துவங்கப்பட்ட இந்த யுத்தமானது பல திவ்ய அஸ்திரங்களின் பிரயாகத்தோடு தொடர்கிறது. இதுகுறித்து கங்கா சந்தனுவிடம் கூறுகையில், பரசுராமரிடம் நம் மகன் யுத்தம் புரிந்தாலும் அவர் அறிந்த அனைத்து அஸ்திர கலைகளையும் நம் மகனும் அறிவான்.
ஆகையால் இந்த யுத்தம் மிகக் கடுமையாகத் தான் இருக்கும் என்கிறார். இந்த யுத்தத்தில் இருவரும் தலா ஒரு முறை மூச்சை அடைகின்றன. அதோடு தேரிலிருந்தும் விழுகின்றனர். பரசுராமர் தன் அஸ்திரம் கொண்டு பீஷ்மரின் தேர்ப்பாகனை வீழ்த்துகிறார். இதனால் கங்காதேவியே பீஷ்மருக்கு தேர்ப்பாகனாக மாறி ரதத்தை செலுத்துகிறார். இப்படி இந்த யுத்தம் நீண்டுகொண்டே போகிறது. ஒவ்வொரு நாள் யுத்தம் தொடங்கும் போதும் பீஷ்மர் தன் குருவான பரசுராமரிடம் ஆசி பெற்று யுத்தத்தை துவங்குகிறார். இதனால் யுத்ததத்தில் அவர் பரசுராமரிடம் திறன் கொண்டு சமாளிக்கிறார். ஆனால் பீஷ்மர் எத்தகைய முயற்சி செய்தாலும் பரசுராமரை வீழ்த்த முடியவில்லை. அதனால் 22-ஆம் நாள் இரவு இதற்கு ஒரு மார்க்கத்தை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறார்.
பிரம்மாஸ்திரத்தை தடுத்த நாரதர் (Naradhar blocked the Brahmastra):
அன்று இரவு பீஷ்மரின் கனவில் வந்த வசுக்கள் பிரபாப அஸ்திரத்தை பற்றி அவரிடம் கூறி, இதைப்பற்றி முன்ஜென்மத்தில் நீ அறிவாய். ஆனால் பரசுராமருக்கு இது பற்றித் தெரியாது. ஆகையால் இதை உபயோகித்தால் பரசுராமர் தூங்கிவிடுவார். போர் செய்யும் நேரத்தில் தூங்கியவர் தோற்றவராக கருதப்படுவார் என்கின்றனர். இருபத்தி மூன்றாம் நாள் யுத்தம் துவங்குகிறது. பல அதிபயங்கர சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் பிரயோகிக்கப்படுகிறது.
யுத்தத்தின் தீவிரத்தை கண்டு அனைவருமே அஞ்சத் துவங்குகின்றனர். அதற்கு ஏற்ப பரசுராமர் பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்கிறார். அதனை எதிர்த்து பீஷ்மரும் தனது பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்கிறார். இருவரின் பிரம்மாஸ்திரமும் வானில் எதிர்கொள்கிறது. பிரம்மாஸ்திரம் என்பது அகிலத்தையே நிலைகுலையச் செய்யும் என்பதால் இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சியில் இறங்குகிறார் நாரதர்.
பீஷ்மரின் வெற்றி (Bhisma's Victory) :
இதற்கிடையில் பீஷ்மருக்கு வசுக்கள் கூறிய பிரபாப அஸ்திரம் நினைவிற்கு வர அதை பரசுராமர் மேல் பிரயோகிப்பதற்காக தயாராகிறார் பீஷ்மர். அப்போது அங்கு வந்த நாரதர் தவறியும் குருவை அவமதிக்கும் இந்த செயலை செய்து விடாதே என்கிறார். நாரதர் கூறியதைக் கேட்டு பீஷ்மர் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறார். இதற்கிடையில் பீஷ்மரின் அவதார நோக்கம் குறித்தும் அவர் யார் கையால் மரணமடைய வேண்டும் என்பது குறித்தும் நாரதர் பரசுராமரிடம் கூறி அவரது மனதை மாற்றுகிறார்.
இருவரும் தங்களது பிரம்மாஸ்திரத்தை உலக நலன் கருதி திரும்பப் பெறுகின்றனர். பீஷ்மர் பிரபாகர அஸ்திரத்தை என்மீது தொடுத்திருந்தால்நான் தோற்றிருப்பேன் என்பதை உணர்ந்த பரசுராமர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். பீஷ்மரை என்னால் தோற்கடிக்க முடியவில்லை என்று அம்பையிடம் கூறுகிறார் பரசுராமர். உடனே அம்பையின் கோபம் தலைக்கு ஏறுகிறது. அதன் பிறகு அவள் என்ன செய்கிறாள்? பீஷ்மரின் வாழ்வில் என்னவெல்லாம் சோதனைகள் வருகின்றன. என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.