மகாபாரதத்தில் ஷிகண்டியின் வரலாறு
(History of Shikhandi in Mahabharat)
பீஷ்மருக்கும், பரசுராமருக்கு இருபத்தி மூன்று நாட்கள் நடந்த மகாயுத்தத்தைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். (bhishma vs parshuram battle). தற்போது இந்த பகுதியில் பெண்ணாக இருந்து ஆணாக மாறி பீஷ்மரையே அழிக்கும் வரத்தைப் பெரும் ஷிகண்டியைப் பற்றி பார்ப்போம்.
அம்பையின் கடும் தவம் :
போரில் தோற்ற பிறகு, பீஷ்மரிடம் தான் யுத்தத்தில் தோற்று விட்டதாக பரசுராமர் அம்பையிடம் வருத்தத்துடன் கூறுகிறார். இதைக்கேட்ட அம்பை கடும் கோபம் கொள்கிறார். இனியும் மற்றவர்களை நம்பினால் ஒன்றும் செய்ய முடியாது! நாமே பீஷ்மரை கொல்வதற்கான மார்க்கத்தை அறிய வேண்டும்! என்று எண்ணிய அம்பை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல கடும் தவங்களை புரிகிறாள். தொடர்ந்து ஆறுமாதங்கள் வெறும் காற்றை மட்டுமே உணவாக கொண்டு சிலை போல ஒரே இடத்தில் நின்று தவம் புரிகிறார். அவன் உடலில் வெறும் எலும்பும் தோலும் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அழுக்கான ஆடை, நீண்ட ஜடாமுடி என அவளின் தோற்றம் முழுவதும் மாறி இருக்கிறது. ஆனாலும் அவரின் தவத்தை மெச்சி இறைவன் அவரை வந்து காண வரவில்லை. அதனால் தன் கால் கட்டை விரலின் நுனிப் பகுதியில் நின்று கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவத்தை மேற்கொள்கிறாள். அவள் தவத்தின் வலிமையால் சொர்க்கமே கோபமாக மாறுகிறது.
சிவபெருமானின் வரம் :
அந்தப் பெண் தவசியின் தவவலிமையை உணர்ந்து காட்சி கொடுத்த சிவபெருமான், அம்பையே உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்கிறார். ஒரு பெண் தன்னுடைய கணவரிடம் இருந்து பெறக்கூடிய அனைத்து விதமான சுகங்களையும் நான் இதுவரை பெறாமல் இருப்பதற்கு காரணமும், பெண்ணாய் பிறந்தும் நான் இப்படி அலைந்து திரிந்து கடும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதற்கு காரணமுமான அந்த கங்கையின் மைந்தனை நான் போரில் கொல்ல வேண்டும்! அதற்கான வரத்தை எனக்கு தாங்கள் அருள வேண்டும் இறைவா! என்று ஈசனிடம் வேண்டுகிறாள். அம்பை நீ கேட்ட வரத்தை அழித்தோம். போரில் உன்னால் பீஷ்மர் மடிவார் என்று ஈசன் கூறுகிறார்.
அதைக் கேட்ட பிறகும் அவள் மனதில் சந்தேகங்கள் பல எழுகிறது. பெருமானே ஒரு பெண்ணாக இருக்கும் நான் எவ்வாறு போரில் எப்படி கலந்து கொண்டு வெற்றி அடைய முடியும்? நான் பீஷ்மரிடம் போரிடுகையில் நீங்கள் எனக்கு துணை புரிவீர்களா? என்றால் அம்பை. கன்னிகையே என்னால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் யாவும் எப்போதும் பொய்யாகாது. பீஷ்மரின் மரணம் நிச்சயம் உன்னால் தான் நிகழும். ஆனால் இந்தப் பிறவியில் அல்ல. நீ அடுத்த பிறவியில் துருவனுக்கு மகனாய்ப் பிறந்து, கலைகள் பல கற்று மிகச்சிறந்த ஒரு வீரனைப் போல திகழ்வாய். அப்போது தக்க தருணம் வரும்போது இந்தப் பிறவியில் ரகசியங்கள் யாவும் உன் நினைவிற்கு வரும்.
ஷிகண்டியின் பிறப்பு (Birth of Shikhandi) :
அடுத்த பிறவியை விரைந்து எடுக்க நினைத்த அம்பை காட்டிலிருந்த விறகுகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிகப்பெரிய ஒரு தீயை மூட்டி அந்த சுடர்மிகு தெருவிற்குள் நுழைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அம்பை பரசுராமரிடம் இருந்து விடைபெற்றதிலிருந்து, அவள் இறக்கும் வரை அவள் வாழ்வில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த பீஷ்மர் கொடுமையான இழப்பை கேள்விப்பட்டு கடும் வேதனை கொள்கிறார். காலங்கள் பல கடக்கிறது.
துருபதன் என்னும் மன்னன், பீஷ்மர் மேல் கொண்ட சினத்தால் அவரை கொல்வதற்காக ஒரு மகனை வேண்டி ஈசனை நோக்கி தவம் செய்கிறான். அப்போது அவர் முன் தோன்றிய ஈசன் பெண்ணாகவும் ஆணாகவும் உள்ள ஒரு குழந்தையை நீ ஈன்றெடுப்பாய் என்று வரமளித்தார். துருபதன் ஒரு ஆண் குழந்தைக்காக ஈசனிடம் எவ்வளவு வேண்டினார் ஆனால் இதுவே விதியாகும். பிறப்பது பெண் குழந்தையாய் இருந்தாலும் தக்க தருணம் வரும்போது ஆணாக மாறுவாள் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைகிறார்.
பெண்ணாக பிறக்கும் ஷிக்கண்டி (Shikandi born as a Girl):
அதன் பிறகு தன் அரண்மனைக்கு வந்த துருபதன் நடந்த அனைத்தையும் தன் மனைவியிடம் கூறுகிறார். சில காலங்களில் துருபதனின் மனைவி கர்ப்பம் தரிக்கிறார். நல்லதொரு நேரத்தில் பெரும் அழகுடன் கூடிய ஒரு மகள் பிறக்கிறாள். ஆனால் துருபதனின் மற்ற மனைவிகள் மீது கொண்ட அச்சம் காரணமாக அவள் தனக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்று துருபதனிடம் கூறி விடுகிறாள். துருபதனுக்கு உண்மை தெரிந்தாலும் இறைவனின் அருளால் இந்த குழந்தை நிச்சயம் ஒருநாள் ஆணாக மாறும் என்ற நம்பிக்கையில் தனக்கு ஒரு ஆண் மகன் பிறந்துள்ளான் என்று அறிவிக்கிறான்.
ஒரு ஆண் குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் அந்த குழந்தைக்கு செய்யப்படுகிறது. அந்த குழந்தைக்கு துருபதன், ஷிகண்டி என்று பெயர்சூட்டி வளர்த்து வருகிறான். ஆனால் அவனும் அவன் மனைவியும் மட்டும் அந்த குழந்தையை சிகண்டினி என்று கூறி அழைத்து வருகின்றனர். ஷிகண்டி வளர்ந்த பிறகு ஒரு பெரும் சிக்கல் வருகிறது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதா? அல்லது ஒரு ஆணைத் திருமணம் செய்து வைப்பதா? என்பதுதான் அந்த சிக்கல். அவள் உண்மையில் ஒரு பெண் தான் என்றாலும் இவ்வுலகத்தால் ஆணாக பார்க்கப்படுகிறாள். இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் துருபதன்.
ஷிகண்டியின் திருமணம் (Shikandi's Marriage):
பிறகு துருபதன் தனது மனைவியோடு கலந்துரையாடி ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவுவெடுத்து, தசார்ணகக்கண் என்னும் அரசனின் மகளை மணம் முடித்தனர். இந்த திருமணம் ஆனது மிகவும் கவனமாக நடத்தப்படுகிறது. துருபதனின் சம்பந்தியான தசார்ணகக்கண் மிகவும் வலிமைமிக்க ஒரு அரசனாவான். அவனுக்கு உண்மை தெரிவதற்குள் நம் மகள் ஒரு ஆணாக மாறி விட வேண்டும்! இல்லையேல் நம் நிலை அவ்வளவுதான்! என்று துருபதன் தன் மனைவியிடம் கூறி வருத்தப்படுகிறார். இந்த நிலையில் ஒரு நாள் சிகண்டியின் மனைவிக்கு சிகண்டி ஒரு பெண் என்ற உண்மை தெரிய வருகிறது.
இதை அவள் தன் தோழிகள் மூலம் தன் தந்தை தசார்ணகக்கணுக்கு தெரியப்படுத்துகிறாள். இதை கேள்விப்பட்டதும் கோபம் கொள்கிறான் தசார்ணகக்கண். தன்னையும் தன் மகளையும் ஏமாற்றிய துருபதனையும் அவளது மகளையும் கொல்ல வேண்டும் என்று தீர்மானித்து தனது நட்பு அரசர்களுக்கு இதுகுறித்து தூது அனுப்பி பெரும்படை ஒன்றை திரட்டினான் தசார்ணகக்கண். இதை அறிந்த துருபதனும் அவன் மனைவியும் துயரம் கொள்கின்றனர். தன்னால்தான் தன் பெற்றோர்களுக்கு இத்தகைய பெரும் துன்பம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த ஷிகண்டி, தன் உயிரைத் துறக்க எண்ணுகிறாள்.
ஆணாக மாறும் ஷிகண்டி (Shikanti becomes a Man) :
ஸ்தூனன் என்ற யசன் ஒருவன் காட்டின் ஒரு பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அந்தக் காட்டிற்குள் செல்ல மனிதர்கள் யாரும் அஞ்சுவர். அந்தக் காட்டை நோக்கி நடந்தாள் ஷிகண்டி. அங்கு இருந்த ஸ்தூனனின் மாளிகைக்குள் நுழைந்த அவள், பல நாட்களாக உணவு உண்ணாமல் தன் உடலை வற்றச் செய்தாள். சிகண்டியின் மீது இரக்கம் காட்டிய ஸ்தூனன் எதற்காக நீ இந்த செயலை செய்கிறாய்? உன் நோக்கம் என்னவென்று என்னிடம் கூறு! நான் அதை நிறைவேற்றுகறேன்! என்றான். சிறிது நேரம் ஸ்தூனனை உற்று நோக்கிய ஷிகண்டி, உன்னால் அதை செய்ய முடியாது ! என்று கூறினாள். என்னால் நிச்சயம் உனக்கு உதவ முடியும்! நீ முதலில் உன் தேவையைக் கூறு! என்றான் ஸ்தூனன்.
நடந்த அனைத்தையும் ஷிகண்டி ஸ்தூனனிடம் கூறுகிறாள். நான் இப்போது ஆணாக மாற வேண்டும்! இல்லையேல் என் தந்தையை தசார்ணகக்கண் நிச்சயம் கொன்று விடுவார்! என்றாள். கவலைப்படாதே நங்கையே! நீ விரும்பியதை நான் செய்கிறேன்! எனது சக்தி மூலம் நான் எனது ஆண்மையை உனக்குத் தந்து உனது பெண்மையை நான் ஏற்கிறேன்! ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் நீ இங்கு வந்து பெண்ணாக மாறி விட வேண்டும்! என்றான். அதற்கு சம்மதித்தாள் ஷிகண்டி. அதன்படி இருவரும் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்கின்றனர்.
மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து நாடு திரும்பிய ஷிகண்டி நடந்த அனைத்தையும் தன் தந்தை துருபதனிடம் கூறுகிறாள். உடனே அவள் தந்தை தன் சம்பந்திக்கு தூது அனுப்பி ஷிகண்டி உண்மையில் ஒரு ஆண்மகன் தான். உங்களுக்கு யாரோ தவறான தகவலைத் தந்துள்ளார்கள் என்று கூறுகிறார். இதை சோதிக்க தசார்ணகக்கண் சிலரை அனுப்புகிறார். அவர்களின் சோதனைக்கு பிறகு ஷிகண்டி ஒரு ஆண் தான் என்பது நிரூபணமாகிறது. அதன்பிறகு மகளுக்கு புத்தி கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் தசார்ணகக்கண். சிறிது நாட்களில் சிகண்டியும், ஸ்தூனனும் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வருகிறது.
குபேரனின் வருகை (Kuberan's Visit) :
இப்போது ஷிகண்டி ஆணாக மாறி தன் மனைவியோடும், பெற்றோறோருடனும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். இதற்கிடையில் யக்ஷர்களின் தலைவனான குபேரன், ஸ்தூனனின் அற்புதமான மாளிகையைக் கண்டு அங்கு செல்கிறார். அங்கிருக்கும் யக்ஷர்கள் பலர் அவரை நல்ல முறையில் வரவேற்கின்றனர். ஸ்தூனனின் இந்த மாளிகையை நீங்கள் அனைவரும் நல்ல முறையில் அலங்கரித்துள்ளீர்கள். இதைப் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனாலும் இங்கு நான் வந்ததை அறிந்தும் ஸ்தூனன் ஏன் இன்னும் இங்கு வரவில்லை? என்னை அவமதிக்கிறானா அவன்? அவனை நான் நிச்சயம் தண்டிப்பேன் என்று கூறுகிறார் குபேரன்.
இதைக் கேட்ட யக்ஷர்கள், எங்களின் தலைவா மன்னித்துவிடுங்கள். துருபதனின் மகளான ஷிகண்டிக்கு ஏதோ ஒரு காரணத்தால் உதவ நினைத்த ஸ்தூனன் தன்னுடைய ஆண்மைத்தன்மையை அவனுக்கு கொடுத்துவிட்டு, அவளின் பெண்மைத்தன்மையை பெற்று இப்போது பெண்ணாக மாறியிருக்கிறார். அதன் காரணமாகவே உங்கள் முன் வராமல் கூச்சப்பட்டு ஒரு தனி அறையில் இருக்கிறான். அதனாலேயே உங்களை வரவேற்க அவனால் வர இயலவில்லை என்றனர் யக்ஷர்கள். இவர்கள் கூறிய வார்த்தைகளால் குபேரனின் கோபம் தணியவில்லை மாறாக அவரின் கோபம் அதிகரிக்கிறது. உடனே ஸ்தூனனை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என்று கூறுகிறார் குபேரன்.
குபேரனின் சாபம் (Kubera's Curse):
பெண்ணுக்கே உரிய நாணத்தோடு குபேரன் முன் வந்து நிற்கிறான் ஸ்தூனன். யக்ஷர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் உனது ஆண் தன்மையை ஒரு பெண்ணுக்கு கொடுத்துவிட்டு இப்போது என் முன் தலைகுனிந்து நிற்கிறாயே! உனக்கு அவமானமாக இல்லையா? இப்படி ஒரு இழிவான செயலை செய்ததால் இனி எப்போதுமே நீ பெண்ணாகவே இருப்பாய்! உன்னிடமிருந்து ஆண் தன்மையைப் பெற்ற அந்தப் பெண்ணும், இனி எப்போதும் ஆணாகவே இருப்பாள் என சாபமிடுகிறார். இதைக் கேட்டதும் அங்கிருந்த யக்ஷர்கள் அனைவரும் குபேரனை சாந்தப்படுத்தி இந்த சாபதற்கான விமோச்சனத்தை கூறுமாறு வேண்டுகின்றனர். அதனால் மனமிரங்கிய குபேரன், அந்த சாபதற்கான விமோச்சனத்தை கூறுகிறார். அதன்படி அந்தப் பெண் எப்போது இறக்கிறாளோ, அப்போது மீண்டும் இவன் தன் சுய வடிவத்தைப் பெறுவான் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
ஷிகண்டியின் நேர்மை (Honesty of Shikandi) :
இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு ஷிகண்டி தான் கூறியபடி மீண்டும் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்காக ஸ்தூனனின் மாளிகைக்கு வருகிறாள். உன்னால் தான் இன்று நானும் என் தந்தை உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீ எனக்கு தக்க சமயத்தில் செய்த இந்த உதவியை நான் என் வாழ்நாள் உள்ளவரை மறக்க மாட்டேன். இப்போது நான் என்னிடம் உள்ள ஆண் தன்மையை நான் கூறியபடி உனக்கு திரும்ப அளிக்க வந்துள்ளேன். அதை எடுத்துக்கொள் என்கிறாள் ஷிகண்டி. ஷிகண்டியின் நேர்மையைக் கண்டு அவளை பாராட்டுகிறான் ஸ்தூனன்.
அதன்பிறகு குபேரனால் தனக்கு கொடுக்கப்பட்ட சாபம் பற்றி ஷிகண்டியிடம் அவன் கூறுகிறான். இதைக்கேட்ட ஷிகண்டி என்னால் நீ இந்த நிலையை அடைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்கிறாள். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் விதிப்படியே நடக்கும் என்கிறான் ஸ்தூனன். அதன் பிறகு அங்கிருந்து ஷிகண்டி தன் அரண்மனைக்கு வருகிறாள். அதன்பிறகு வில், வால் என அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெறத்துவங்குகிறாள். அடுத்த பகுதியில் சந்திர குலம் தழைக்கச் செய்ய பீஷ்மரும், சத்யவதியும் எடுக்கும் முடிவுகளை பற்றி காண்போம்.