ஒரு மனைவி ஐந்து கணவர்கள் பிரச்சனை வராமல் இருக்க பாண்டவர்கள் ஏற்ற சபதம் | The Pandavas vow not to cause trouble between the Pandavas and Draupadi | Mahabharata Episode 21

 ஒரு மனைவி ஐந்து கணவர்கள் பிரச்சனை வராமல் இருக்க பாண்டவர்கள் ஏற்ற சபதம் 

(The Pandavas vow not to cause trouble in domestic life 
between the Pandavas and Draupadi)

            பாண்டவர்கள் பாஞ்சாலத்தில் உயிரோடு இருப்பதை (Karna's strategy to destroy the Pandavas ) அஸ்தினாபுரத்தில் அனைவரும் அறிந்து கொண்டதை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் இடையே திருமணத்திற்கு பின் இல்லற வாழ்வில் பிரச்சனைகள் வராமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட சபதம் பற்றி பார்க்கலாம்.
 
பாண்டவர்களை அஸ்தினாபுரம் அழைத்த திருதராஷ்டிரன் (Dhritarashtra invited the Pandavas to Hastinapur):
                         
            பீஷ்மர், துரோணர் மற்றும் விதுரர் பாண்டவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தையும் சகுனி மற்றும் துரியோதனன் ஆகியோர் பாண்டவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தையும் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் அவர்களின் கருத்தை ஒப்புக் கொண்டான். அதன்பிறகு பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும் அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வர ஆள் அனுப்பினான். அறிவில் சிறந்த விதுரர் பெரும் செல்வத்தை எடுத்துக்கொண்டு பாஞ்சாலத்தை அடைந்தார். 

            அங்கு அவர் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டார். தான் கொண்டு வந்த செல்வங்களை பாண்டவர்களுக்கும், திரௌபதிக்கும், துருபதனுக்கும் அவர் கொடுத்தார். அந்த அரண்மனையில் கிருஷ்ணரும் பாண்டவர்களுடன் இருப்பதைக் கண்டு அவர் பெரும் ஆனந்தம் கொண்டார் .அதோடு வெகு நாட்கள் கழித்து பாண்டவர்களை அவர் சந்தித்ததால் அவர்கள் அனைவரையும் ஆரத் தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அனைவரது முன்னிலையிலும் தான் கொண்டு வந்த செய்தியை கூறினார். 

பாண்டவர்களை சந்தித்த விதுரர் (Vithura who met the Pandavas) :

            அதன்படி பாண்டவர்கள் உயிரோடு இருப்பதை அறிந்து மன்னர் திருதராஷ்டிரர் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், பாண்டவர்கள் பாஞ்சால தேசத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறார் என்றும், அவர் பாண்டவர்களையும், குந்தியையும், திரௌபதியையும் காண மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார் என்றும் விதுரர் கூறினார். பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும் அஸ்தினாபுரத்தை காணப் பெரும் ஆவலோடு இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றும், ஆகையால் அவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் வர நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவே திருதராஷ்டிரரின் ஆசையும் ஆகும் என்றார் விதுரர். 
            
            விதுரர் கூறிய அனைத்தையும் கேட்ட துருபதனும், மன்னர் திருதராஷ்டிரரோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! அதோடு பாண்டவர்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நாட்டிற்கு திரும்புவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! ஆனாலும் அதை நானே அவர்களிடம் கூறுவது முறையாகாது! ஆகையால் இது குறித்து கிருஷ்ணரும், பாண்டவர்களும் சேர்ந்து முடிவெடுக்கட்டும் என்றான் துருபதன். உடனே கிருஷ்ணர், பாண்டவர்கள் தற்போது அஸ்தினாபுரம் செல்வதே நல்லது! என்று நான் நினைக்கிறேன் என்றார். 

அஸ்தினாபுரத்திற்கு திரும்பும் பாண்டவர்கள் (Pandavas returning to Hastinapur):

            உடனே யுதிஷ்டிரன், எங்கள் அனைவருக்கும் அஸ்தினாபுரம் செல்வதற்கு முழு சம்மதம்! ஆனால் எங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்தவர் நீங்கள் தான்! ஆகையால் மன்னா உங்களின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம்! என்றான். உடனே துருபதன் அவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் செல்ல அனுமதித்தார். அதன்படி பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும் அவர்களோடு கிருஷ்ணனும் அஸ்தினாபுரம் நோக்கி விரைந்தனர். அவர்கள் அஸ்தினாபுரத்தை நெருங்கிய செய்தி திருதராஷ்டிரனை எட்டியது. உடனே அவனது ஆணைக்கு ஏற்ப துரோணரும், கிருபரும், தோழர்களில் சிலரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்க சென்றனர். 

            பாண்டவர்களைக் காண அந்நாட்டு மக்கள் பெரும் திரளாக வந்து காத்துக் கிடந்தனர். அவர்கள் அனைவருக்கும் நடுவில் பிரவேசித்தார்கள் பாண்டவர்கள். அவர்களைக் கண்டு பிரஜைகள் அனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டு கோஷமிட்டனர். இறுதியாக அரண்மனை வாயிலை அடைந்த அவர்கள், திருதராஷ்டிரனின் பாதம் தொட்டு வணங்கினர். அதோடு பீஷ்மரின் பாதங்களையும் வணங்கினர். 

ராஜ்ஜியத்தை பிரித்த திருதராஷ்டிரன் (Dhritarashtra who divided the kingdom) :
            
            அதன் பிறகு சிறிது நேரத்தில் மன்னர் சபை கூடியது. அதில் திருதராஷ்டிரன், உங்களுக்கு நடந்த துயரங்கள் அனைத்தையும் கண்டு நான் மிகவும் துயர் கொண்டேன்! ஆனால் இனி பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் எந்தவித மனஸ்தாபமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்! அதன்படி பாண்டவர்கள் தங்களது மனைவியோடு காண்டவப்பிரஸ்தம் சென்று அங்கே தங்களுக்கான அரண்மனையை அமைத்துக் கொண்டு அங்கே தங்களது ஆட்சியை தொடரலாம்! அவர்களுக்கான பாதி ராஜ்ஜியத்தை நான் இப்போதே தருகிறேன்! என்றான் திருதராஷ்டிரன். இப்படி கூறியதற்கு பின் பல சதிகள் இருக்கத்தான் செய்தது. 

காண்டவப்பிரஸ்தம் நகரத்தின் சிறப்பு (Specialty of kandavaprastham city in mahabharata) :

            உண்மையில் காண்டவப்பிரஸ்தம் என்பது மனிதர்கள் வசிப்பதற்கு ஏதுவான ஒரு நகரம் கிடையாது. பலவகையான பறவைகள், மிருகங்கள், அரக்கர்கள் என பலரும் வசிக்கும் ஒரு மிகப்பெரிய நகரமே காண்டவப்பிரஸ்தம். யுதிஷ்டிரனும் இதை நன்கு அறிந்திருந்தான்! ஆனாலும் அவன் மன்னரின் ஆணையை ஏற்றுக் கொண்டான். அதன் பிறகு பாகப்பிரிவினையில் தங்களுக்கு கிடைத்த பெரும் செல்வத்தையும், துருபதன் மற்றும் கிருஷ்ணன் தங்களுக்கு பரிசாக அளித்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும், கிருஷ்ணரும் காண்டவப்பிரஸ்தம் நோக்கிப் புறப்படத் தயாரானார்கள்.அதைக் கண்ட மக்கள் பெரும்பாலானோர் தாங்களும் காண்டவப்பிரஸ்தம் வருவதாக கூறினார்கள். அதை யுதிஷ்டிரன் ஏற்றுக்கொண்டான். அதனால் பாண்டவர்களுடன் சேர்ந்து பெரும் பிரஜைகள் கூட்டமொன்று காண்டவப்பிரஸ்தம் நோக்கிப் புறப்பட தயாரானது. சில நாட்கள் பயணம் செய்து அனைவரும் நகரத்தை அடைந்தனர். 

காண்டவப்பிரஸ்தம் நகரத்தை மாற்றியமைத்த கிருஷ்ணர் (Krishna who transformed the city of kandavaprastham) :

            கிருஷ்ணனின் தலைமையில் அர்ஜுனனின் உதவியோடு அந்தக் கரடுமுரடான வனப்பகுதி சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு வியாசரின் உதவியோடு அங்கு ஒரு புனிதமான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கு செய்ய வேண்டிய சில சடங்குகளை செய்து அங்கு ஒரு புதிதாக ஒரு நகரத்தை அமைத்தனர். காண்பவர் கண்களைக் கவர்ச் செய்யும் அழகிய மாளிகைகள் பல அங்கு உருவாக்கப்பட்டது. அதோடு எதிரிகள் யாரும் அவ்வளவு எளிதில் அந்த நகரத்தை தாக்க முடியாத அளவிற்கு அது மிக சாதுரியமாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. அதோடு மக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் அந்த நகரத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும் மரங்கள், அழகிய வண்ணத்தில் பூத்து குலுங்கும் மலர்கள், பார்த்ததுமே சுவைக்கத் தூண்டும் கனி தரும் மரங்கள், பூங்காக்கள் என அந்நகரம் மிகவும் சுத்தமாகவும், பசுமையாகவும் காட்சியளித்தது. 

அந்த நகரத்திற்குள் எவரொருவர் வந்தாலும் அதை விட்டு போக மனம் இல்லாதபடி செய்யும் அளவிற்கு அத்தனை வசதிகளும் இருந்தன. நகரத்தை இந்திர லோகத்திற்கு இணையான ஒரு நகரம் என்று அனைவரும் கருதினர். ஆகையால் அது இந்திரப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது. இந்திரப்பிரஸ்தம் சிறப்புகள் எட்டு திக்கும் பரவியது. ஆகையால் அங்கு தொழில் செய்ய ஏராளமானோர் வரத்துவங்கினர். அதோடு வேதங்கள் கற்றறிந்த பலர் அந்த நகரத்தை நாடி வந்து அங்கேயே தங்கினர். நகரத்தை முழுமையாக கட்டமைத்த பிறகு கிருஷ்ணர் பாண்டவர்களிடம் இருந்து விடைபெற்று துவாரகைக்கு சென்றார். 

பாண்டவருக்கு உதவிய நாரதர் (Naradhar who helped the Pandavas) :

            பாண்டவர்கள் தங்களது ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் அங்கு நாரதர் வந்தார். அவரை கண்ட பாண்டவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டு அவரை சிறப்பாக வரவேற்றனர். அதன் பிறகு அவர்களிடம் நலம் விசாரித்த நாரதர், ஒரு பெண்ணை அனைவரும் மணந்திருப்பதால் தங்களுக்குள் பிரச்சனை ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்தார். அதைக் கேட்ட பாண்டவர்கள் அப்போது ஒரு சபதம் மேற்கொண்டு, வருடத்திற்கு ஒருவர் மட்டுமே திரௌபதியோடு இல்லற வாழ்வில் ஈடுபட போவதாகவும், அந்த சமயத்தில் மற்ற நாள்களில் எவரேனும் ஒருவர் திரௌபதியோடு தனிமையில் தங்கி இருக்கும் அறைக்கு வந்தால் அவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் சென்று பிரம்மச்சாரியாக வாழவேண்டும் என்றும் தங்களுக்குள் சபதம் ஏற்றனர். அதைப்  பார்த்து மகிழ்ந்த நாரதர் பாண்டவர்களிடமிருந்து விடைபெற்று சென்றார். 

அரண்மனையில் பிரஜையின் கூச்சல் (The shout of the citizen in the palace) :

            அதன்பிறகு பாண்டவர்களும், திரௌபதியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதோடு அவர்கள் தங்களது வீரம் மூலம் பல தேசங்களை போரிட்டு வென்று தங்களது நாட்டுடன் இணைத்தனர். இந்த நிலையில் ஒரு நாள் ஆடு, மாடுகளை மேய்க்கும் ஒருவரிடமிருந்து பல ஆடு மாடுகளை ஒரு திருட்டுக் கும்பல் திருடிச் சென்றது. இதனால் பெரும் துயர் கொண்ட அந்த ஆடு மேய்ப்பவன் செய்வதறியாது தவித்தான். 

            உடனே அரண்மனையை நோக்கி விரைந்து வந்து அவன் அரண்மனையில் யாரேனும் வீரர்கள் உள்ளனரா? நான் உங்கள் பிரஜைகளில் ஒருவன் வந்துள்ளேன்! எனது ஆடு மாடுகளை திருடர்கள் கவர்ந்து சென்றனர்! அவர்களிடமிருந்து அதை எனக்கு மீட்டுத்தாருங்கள்! உங்களை நம்பித் தானே நாங்கள் அனைவரும் இங்கு இருக்கிறோம்! அதோடு உங்களுக்கு வரியும் நாங்கள் செலுத்துகிறோம்! உங்கள் ராஜ்யத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும் தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்பது உங்கள் கடமையல்லவா? என்று பெரும் கூச்சலிட்டான். அவன் கூச்சலிட்டது அர்ஜுனனின் காதில் விழுந்தது. 

அர்ஜுனனின் தர்மம் (Charity of Arjuna) :

            உடனே அவன் தனது ஆயுதங்களை எடுக்க சென்றான். ஆனால் அவன் தனது ஆயுதத்தை யுதிஷ்டிரனின் அறையில் வைத்து இருந்தான். அப்போதுதான் திரௌபதியும், யுதிஷ்டிரனும் தனிமையில் இருந்தனர். இந்த சமயத்தில் நாம் அந்த அறைக்கு சென்றால் நாம் முன்பே ஏற்ற சபதத்தின் படி 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிடும் என்று அவன் எண்ணினான். ஆனால் இப்போது நாம் நமது பிரஜையின் துயரைத் துடைக்க வில்லை என்றால் நமது அரசர் மீது கலங்கம் ஏற்படும்! இதனால் அவர் பெரும் துயர் கொள்வார்!

            இப்போது என்ன செய்யலாம்? என்று அவன் யோசித்தான். நமக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை பிரஜையின் துயர் துடைப்பது ஏன் நமது முதற்கண் கடமையாகும்! அதுவே தர்மம் என்று எண்ணி யுதிஷ்டிரனின் அறைக்கு சென்று தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அந்தப் பிரஜை இருக்கும் திசை நோக்கி புறப்பட்டான். அர்ஜுனன் இந்த செயலுக்காக அவன் 12 ஆண்டுகள் தனியாக வனவாசம் சென்றானா? அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Post a Comment

Previous Post Next Post