பாண்டவர்களை அழிக்க கர்ணன் வகுத்த வியூகம்
(Karna's strategy to destroy the Pandavas)
பாண்டவர்கள் திரௌபதியை எப்படி திருமணம் (Marriage between the Pandavas and Draupadi in Mahabharata) செய்து கொண்டார்கள் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம். இப்போது இந்த பதிவில் பாண்டவர்களை கொல்ல கர்ணன் வகுத்த திட்டத்தைப் பற்றி பாப்போம்.
கிருஷ்ணர் அளித்த பரிசு (Krishna's gift) :
திரௌபதியின் திருமணத்திற்கு பிறகு அனைவரும் காம்பல்யத்திலேயே வாழத் துவங்கினர். தான் அந்தணர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தங்களை நாடி வருபவர்களை எப்படி உபசரிக்க வேண்டும்? போன்ற பல விடயங்களை குந்தி திரௌபதிக்கு எடுத்துரைத்தாள். பாண்டவர்களுக்கு திருமண பரிசு வழங்கிய கிருஷ்ணர் பல்லாயிரம் தங்க நாணயங்களையும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களையும், யானைகள், குதிரைகள், போர்க்கருவிகள் என பலவற்றை அவர்களுக்கு பரிசளித்தார்.
கிருஷ்ணரின் அனைத்து பரிசையும் அவர்கள் மனதார ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் திரௌபதியின் சுயம்வரத்தில் வந்த அனைத்து மன்னர்களும் தங்களது ஒற்றர்கள் மூலம் அந்த சுயம்வரத்தில் வந்தது அர்ஜுனன் தான் என்பதை அறிந்து அவர்கள் மகிழ்ந்தனர். அதோடு துரியோதனன், திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மர் உள்ளிட்ட பலரை அவர்கள் திட்டித் தீர்த்தனர். திரௌபதி பாண்டவர்களை மணந்த செய்தி திருதராஷ்டிரனை எட்டியது. அதைக் கேட்டு அவன் மிகுந்த துயர் கொண்டான்.
திருதராஷ்டிரனின் வருத்தம் (Dhritarashtra's regret) :
இந்த செய்தி விதுரரையும் எட்டியது. உடனே அவர் திருதராஷ்டிரனிடம் சென்று பாண்டவர்கள் உயிரோடு இருப்பது பற்றியும், அர்ஜுனன் சுயம்வரத்தில் வென்று பற்றியும் கூறினார். அதை அறிந்த திருதராஷ்டிரன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தான். ஆனால் அவன் மனதில் வஞ்சமே நிலைத்திருந்தது. திருதராஷ்டிரனின் நடிப்பை நம்பிய விதுரர் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றார். அவர் சென்றபிறகு துரியோதனனும், கர்ணனும் திருதராஷ்டிரனை சந்திக்க வந்தனர். தந்தையே நீங்கள் விதுரரிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்!
பாண்டவர்கள் உயிரோடு இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது! அனால் அவர்கள் நம்மை அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்கிறான் துரியோதனன். அதைக் கேட்ட திருதராஷ்டிரன் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியில்லை துரியோதனா! ஆனால் நான் எனது கோபத்தை இப்போது வேதனையுடன் வெளிப்படுத்தினால் அவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள்! அதனாலேயே நான் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்தேன்! என்றார். அதன் பிறகு இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று தன் மகனிடம் கேட்டான் திருதராஷ்டிரன்.
துரியோதனின் சதி (Duryodhana's plot) :
தந்தையே நாம் சூழ்ச்சி செய்யும் சிலரைக் கொண்டு அந்த ஐவருக்குமிடையே பொறாமையை உருவாக்கி அவர்களை பிரிக்க வேண்டும்! அப்படி இல்லையேல் துருபதனுக்கு செல்வத்தைக் கொடுத்து அவரை நம் பக்கம் இழுத்துக் கொள்ளவேண்டும்! அப்படியும் இல்லையேல் திரௌபதி மூலம் அவர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்க நாம் ஏதாவது சதி செயலில் ஈடுபட வேண்டும்! பீமனை நாம் எப்படியாவது சூழ்ச்சி செய்து கொன்று விட வேண்டும்! பீமன் இல்லையேல் பாண்டவர்கள் இல்லை! அவனது பலத்தை நம்பியே அவர்கள் இருக்கிறார்கள்! அவன் அழிந்தால் பிறகு அவர்கள் நம்மை எதிர்க்க மாட்டார்கள்! இவற்றில் ஏதாவது ஒன்றை நாம் உடனே செய்தாக வேண்டும்! என்றான் துரியோதனன். அதன் பிறகு தனது திட்டம் குறித்து கர்ணனிடம் கருத்துக் கேட்டான்.
கர்ணனின் திட்டம் (Karna's plan) :
அதற்கு பதிலளித்த கர்ணன் எனது அன்பு நண்பா துரியோதனா! நீ தீட்டும் சதி செயல்களால் பாண்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பது எனது கருத்து! அவர்கள் நம் நாட்டில் கண்ணெதிரேயே பல காலம் வாழ்ந்தார்கள்! அப்போதே நம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை! ஆனால் இப்போதோ, அவர்கள் வெகு தொலைவில் வாழ்கின்றனர்! இந்த நிலையில் அவர்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது! இன்றைய சூழலில் பாண்டவர்கள் பல மன்னர்களோடு நட்பாய் உள்ளனர்! அதோடு துருபதனின் துணையும் கிருஷ்ணரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது!
ஆனாலும் நாம் இன்று அதிரடியாக பாஞ்சாலத்தை தாக்க முற்பட்டால், அவர்களுடன் நட்பில் இருக்கும் அரசர்கள் உடனடியாக அவர்களுக்கு உதவி புரிய வரமாட்டார்கள். அதோடு கிருஷ்ணனும் அங்கு வந்து சேர சில நாட்கள் ஆகும்! அதற்குள் நாம் நமது பெரும் படையைக் கொண்டு அவர்களை அழித்து விடலாம்! இதுவே எனது கருத்தாகும்! என்றான் கண்ணன். கர்ணனின் திட்டமானது திருதராஸ்டினையும், துரியோதனனையும் கவர்ந்தது. ஆனால் திருதராஷ்டிரன் இதுகுறித்து மேலும் ஆலோசிக்க எண்ணினான். ஆகையால் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட சில வீரர்களையும் தனது அமைச்சர்களையும் அழைத்து இது குறித்து பேசினான்.
பீஷ்மரின் கருத்து (Bhisma's opinion) :
உடனே பீஷ்மர், நிச்சயம் பாண்டவர்களை எதிர்த்து என்னால் ஆயுதம் ஏந்த முடியாது! எனக்கு நீங்கள் எப்படியோ அப்படியே அவர்களும்! அவர்கள் அனைவரும் வாரணாவதத்தில் இறந்து விட்டதாக எண்ணி இதுவரை நான் ஒரு நடைப்பிணமாகவே வாழ்ந்து வந்தேன்! ஆனால் இப்போது அவர்கள் உயிரோடு இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை தருகிறது! அதோடு இந்த நாட்டை ஆள யுதிஷ்டிரனுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது துரியோதனா!
இந்த அகண்ட ராஜ்யத்தை நீ மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறாய்! இது உன் தந்தை வழியில் உனக்கு வந்து சேர வேண்டிய சொத்து என்று நீ எண்ணுகிறாய்! ஆனால் உண்மை யாதெனில் உன்னைவிட யுதிஷ்டிரனுக்கே இதில் உரிமை அதிகம்! அவன் தன் தந்தை வழி ராஜ்யத்தை அடைய நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆகையால் நாம் இப்போது பாண்டவர்களை எதிர்க்க நினைப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு இந்த நாட்டில் பாதியை கொடுப்பதே சிறந்த முறையாகும்! என்றார் பீஷ்மர்.
துரோணரின் கருத்து (Drona's opinion) :
பீஷ்மர் பேசி முடித்தவுடன் துரோணர், பீஷ்மர் கூறுவதே சரி! நீங்கள் அவர்களுக்கு சரி பாதி ராஜ்யத்தை கொடுப்பது சிறந்த அரசனுக்கு அழகாகும்! அதோடு அவர்களும் ஒரு வகையில் உங்களுக்கு புத்திரர்கள் தானே! அவர்களுக்கு ராஜ்யத்தை கொடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? அதோடு இப்போது நீங்கள் ஒரு தூதுவரை அழைத்து அவரிடம் விலைமதிப்பில்லா தங்கங்களையும், வைர வைடூரியங்களையும் கொடுத்து அதை பாண்டவர்களிடமும், திரௌபதியிடமும் கொண்டு சேர்க்கும்படி ஆணையிடுங்கள்! அதோடு இந்தத் திருமணமானது உங்களையும், துரியோதனனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதென கூறச் சொல்லுங்கள்! அதோடு பாண்டவர்களையும், குந்தியையும், திரௌபதியையும் அரண்மனைக்கு வரவேற்க ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்! என்றார் துரோணர்.
அதனைத் தொடர்ந்து கர்ணன் பேசத் துவங்கினான். பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் திருதராஷ்டிரனின் மகனுக்காக பாடுபடாமல் பாண்டவர்களின் நலனுக்காக பாடு படுகிறார்கள் என்பதை நானறியேன்! இவர்களின் வார்த்தையை நாம் கேட்டால் அனைத்தையும் நாம் இழக்க நேரிடும்! என்றதும், கர்ணனின் பேச்சில் குறுக்கிட்ட துரோணர், ஓ கர்ணா! ஒரு உண்மையை நீ ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்? இந்த ராஜ்யத்தை ஆள முழு உரிமை அவர்களுக்கு உள்ளது! அதோடு பாண்டவர்களின் குரு என்ற உயர்ந்த ஸ்தானத்தில் நான் கூறுகிறேன்! அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள்! அவர்களை அழிக்க நினைத்தால் கௌரவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்! என்பது எனது எண்ணம் என்றார் துரோணர். கர்ணன் கூறியதை ஆமோதித்த சகுனி, அதுவே எனது ஆலோசனையும்! என்று கூறி தனது கருத்தை முன்வைத்தார்.
விதுரரின் கருத்து (Vidura's opinion) :
இறுதியாகத் தனது கருத்தை முன்வைத்த விதுரர், பீஷ்மரும் துரோணரும் நமக்கு எப்போதும் சிறந்த ஆலோசனைகளை தரக்கூடியவர்கள்! அவர்கள் சொல்படி நடந்து கொள்வதே நமக்கு நன்மை பயக்கும்! சகுனி மற்றும் கர்ணனின் பேச்சைக் கேட்டால் நமக்கு அழிவே மிஞ்சும்! இந்நாட்டு மக்கள், பாண்டவர்கள் ஐவரும் உயிரோடு இருப்பதை தற்போது அறிந்து பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்! அதோடு பாண்டவர்களைக் கொல்ல நீங்கள் சதிசெய்தீர்கள் என்ற தீராத கரை ஒன்று உங்கள் மீது உள்ளது! அதைப் போக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நீங்கள் பீஷ்மர் மற்றும் துரோணர் சொல்வதைக் கேட்பதே சரி! என்றார் விதுரர்.
இப்படி பலதரப்பட்ட கருத்துக்களை அனைவரும் திருதராஷ்டிரனிடம் கூறினார்கள். திருதராஷ்டிரன் செய்வதறியாது தவித்தான்! பாண்டவர்களின் வீரத்தைப் பற்றியும் கிருஷ்ணர் எந்த பக்கம் இருக்கிறாரோ அந்த அணியே போரில் வெற்றி பெறும்! என்பது பற்றியும் அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் அவனது பேராசை அவனை ஒருபக்கம் தூண்டிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் அவன் என்ன முடிவெடுத்தான்? பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் கிடைக்கிறதா போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.