தமிழ் திரையுலகில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் தனக்கென்ன ஒரு இடத்தை நீண்ட காலங்களாக தக்க வைத்துக்கொண்டிருப்பவர் வைகை புயல் வடிவேலு அவர்கள். தற்போது பெரிய அளவில் படங்கள் நடிக்காவிட்டாலும் இவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் வந்து ரசிகர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்திருந்தார்.
அதன்பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த இவருக்கு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24- ஆம் புலிகேசி என்னும் படத்தில் ரிஎன்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு வந்தது. ஏற்கனவே இவர் நடித்து சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23- ஆம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர் படக்குழு. இந்த படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு நாளுக்குநாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டு சென்றிருக்கும் வேலையில் படப்பிடிப்பின் பொது இயக்குனர் சிம்புதேவன் அவர்களுக்கும் வடிவேலு அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் மூலம் படப்பிடிப்பில் அதிக பிரச்சினைகள் ஏற்ப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு வடிவேலு அவர்களை வேறு எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த படத்தை பற்றிய எந்த தகவலும் பகிரப்படமால் இருந்து வந்த நிலையில் வடிவேலு அவர்களின் திரை பயணம் முடிந்து விட்டதோ! இனிமேல் அவரை திரையில் காண முடியாதோ !என்று அவருடைய ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படம் குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகரும் தேவி, போகன், எல்கேஜி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களை தயாரித்த ஐசரி.கே.கணேஷ் இந்த படம் குறித்து படக்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர் ஏற்கனவே என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியிடப்படும் பொது ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்து படம் வெளியாவதற்கு முக்கிய பங்காற்றினார். எனவே தற்போது 24- ஆம் புலிகேசி குறித்து படக்குழுவுடன் அவர் பேசியிருப்பது வடிவேலு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
