தமிழ் திரையுலகில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களையே பூர்விகமாகக் கொண்டுள்ளனர். தமிழ் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பெரும்பாலும் அண்டை மாநிலங்களிலிருந்து நடிகைகளை தேர்வு செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் திரையுலகில் 5 வருடங்களுக்கு மேல் முன்னிலையில் இருக்கும் நடிகைகளில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்களை எடுத்துக்கொண்டால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு கூட இல்லை என்றே கூறலாம்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து ஒரு செய்தி தொகுப்பாளராக புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர் தான் பிரியா பவானிசங்கர். பின்னர் திரைத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட "கல்யாணம் முதல் காதல் வரை" என்னும் சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்னும் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாஃபியா மற்றும் களத்தில் சிந்திப்போம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் ஏற்று நடிக்கும் வித்யாசமான கதாபாத்திரங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம்.
இவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் (instagaram) வலைத்தளத்தில் தன்னுடைய மறக்க முடியாத தருணங்கள் குறித்து அவர்களுடைய ரசிகர்களிடம் தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் ரசிகர்களிடம் பகிர்ந்த செய்தியில் "தான் ராஜவேலு என்பவரை காதலித்து வருவதாகவும், இந்த செய்தி நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்குத் தெரிந்து கல்லூரி நிர்வாகம் அங்கிருந்து தன்னை வெளியேற்றியதாகவும்" தெரிவித்துள்ளார்.
மேலும் ஓரினச்சேர்க்கை குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய சர்ச்சையான கேள்விக்கு , "காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும் உங்களுக்கு யார் மீது காதல் வந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை" என்றும் கூறிய இவர் , செய்தி தொகுப்பாளராக இருப்பது தங்களுக்கு பிடித்திருந்ததா? இல்லை தற்போது நடிகையாக இருப்பது தங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, "நான் செய்தி தொகுப்பாளராக இருந்த போது அப்பாவியாக இருந்ததாகவும், தற்போது நடிக்க தொடங்கிய பின் அனைத்தும் மாறிவிட்டதாகவும்" தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இந்தியன் - 2, ருத்ரன், பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
