Netflix-ல் வெளியானது ஜகமே தந்திரம் | படத்தைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் | Some interesting information about Jagame Thandhiram

            நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரையுலகில் பல்வேறு  தயாரிப்பாளர்களும் OTT தளங்களில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, , ஜோஜு ஜார்ஜ் மற்றும்  கலையரசன் ஆகியோர் நடிப்பில் இன்று Netflix தளத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.


            கடந்த மே மாதம் வெளியிடப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் கொரோனாவின் தாக்கம் காரணமாக ஒரு வருடம் கழித்து இன்று Netflix தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போது இந்தத் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

            முதன் முதலில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜின் கதாநாயகர்கள் பட்டியலில் இருந்தது Morgan Freeman, Al Pacino மற்றும்  Robert De Niro போன்ற ஹாலிவுட் கதாநாயகர்கள் தான். இவர்கள் அனைவரும் ஆஸ்கார் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தற்போது இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் வரும் காலத்தில் கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

            ஏனெனில் இதுபோன்றே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமாக "ஜிகர்தண்டா" என்னும் திரைப்படத்தில் நவாசுதீன் சித்திகிடம் நடிக்குமாறு கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதும் பிறகு அவரே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய "பேட்ட" படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்துக்கொடுத்ததும் மறக்க முடியாத ஒன்று. மேலும் இந்த மூன்று ஹாலிவுட் நடிகர்களையும் தாண்டி பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ என்பவரை இப்படத்தில் நடிக்க வைத்தது திரைக்கதையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

            முதன்முதலில் கார்த்திக் சுப்புராஜ் இந்தத் திரைப்படத்திற்கு வைத்த பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்" , அதன் பிறகு தனுஷ் இந்தப் திரைப்படத்திற்கு பரிந்துரைத்த பெயர் "சுருளி". எனவே சுருளி என்னும் பெயர் வைப்பதாக முடிவான நிலையில், ஒருநாள் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி நடித்த "நினைத்தாலே இனிக்கும்" என்னும் திரைப்படத்தில் வந்த "சம்போ சிவ சம்போ" என்னும் பாடலைக் கேட்டு விட்டு இந்தப் படத்திற்கு "ஜகமே தந்திரம்" என்ற பெயரையே வைத்து விடலாம் என்று படக்குழுவினருடன் சேர்ந்து முடிவு செய்துவிட்டனர். 

            நடிகர் தனுஷ் தனது பழைய நேர்காணல்களில் சூப்பர்ஸ்டாரின் தோரணைகள் அவ்வப்போது என்னையே அறியாமல் என்னுடைய நடிப்பில் வந்துவிடும் என்று கூறியிருப்பார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தனுஷிடம் உங்களுக்கு சூப்பர்ஸ்டார் போன்று நடிக்க தோன்றினால் கூச்சப்படாமல் நடித்து விடுங்கள் என்றும், அதுதான் எங்களுக்கும் தேவை என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே வெளியான பல்வேறு புகைப்படத்தில் தனுசுடைய நடிப்பு சூப்பர்ஸ்டாரின் தோரணையை கொண்டிருக்கும்.

            வெளிநாட்டில் இருக்கும் ரவுடி கும்பலை அழிப்பதற்காக ஒரு தமிழ்நாட்டின் ரவுடி செல்லும் போது அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனைகளை மிகவும் த்ரில்லிங் மற்றும் சண்டை காட்சிகள் கலந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்தியாவிலேயே ஒரு திரைப்படம் ஏறக்குறைய 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Previous Post Next Post