எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ராமா ராவ் , ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட் மற்றும் ஒலிவியா மோரிஸ் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்க பிரமாண்டமான பொருட்ச்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் RRR. இந்தத் திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனோ தாக்கத்தின் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்டபடி படக்குழுவால் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் எஞ்சியுள்ள படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டிருக்கும் படக்குழு, ஜூலை மாதம் தொடங்கினாலும் படத்தை முழுமையாக முடித்து அக்டோபர் மாதம் வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கொரோனோ முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் இடையே திரை அரங்குகளை திறந்த போது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். இரண்டாவது அலையின் தாக்கம் மேலும் நீடிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தற்போது பல்வேறு படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு அதற்கான வெளியிடப்படும் தேதிகள் குறித்து படக்குழுவினர் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை உலக அளவில் பல்வேறு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இப்படத்திற்கான விளம்பரப்படுத்துதல், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தல் போன்ற வேலைகளுக்காக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
அதோடு இப்படம் பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாவதால் மற்ற பட தயாரிப்பாளர்கள் இப்படம் வெளியிடப்படும் தேதி குறித்த முடிவை படக்குழுவினர் விரைவாக வெளியிட வேண்டும் என்றும், இந்த படத்தின் தேதியை வைத்தே எங்கள் படங்களின் தேதியை முடிவு செய்ய முடியும் என்றும் இயக்குனர் ராஜமௌலியிடம் திரையுலகினர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே ராஜமௌலியின் பிரமாண்டமான இயக்கத்தில் கடந்த 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் வெளியான பாகுபலியின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலகெங்கிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
