தமிழ்த் திரையுலகில் தற்பொழுது சின்னத்திரை மூலம் வரும் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம். தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஸ்டார் விஜய் தமிழ் நிறுவனம் சந்தானம், சிவகார்த்திகேயன், புகழ் மற்றும் பாலா போன்ற பல்வேறு நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி மெரினா என்னும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் சிவகார்த்திகேயன்.
இவர் நகைச்சுவை, குணசித்ர வேடம் எனப் படிப்படியாக நடித்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் என்ரே கூறலாம். இவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிளும் ஒரு ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் வெற்றி கண்டவர். அதோடு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, மற்றும் ரெமோ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டார்.
மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் நல்ல கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இறுதியாக நடித்து வெளியான படம் ஹீரோ. இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை எனினும் ஒரு மாறுபட்ட ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகனுடன் "டாக்டர்" என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி இந்த வருடம் மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அலையின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த திரைப்படம் OTT தளமான Disney+Hotstar வலைத்தளத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்ததது. கடந்த சிறு மாதங்களாக கொரோனா அலையின் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு மக்கள் அனைவரும் OTT தளங்களுக்கு மாறி வரும் நிலையில் இந்தப்படக்குழு வெளியிட்ட செய்தி திரையரங்க உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதே சமயம் கொரோனா அலையின் தாக்கம் குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு வலிமை, டாக்டர் மற்றும் மாநாடு போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் திரையரங்குகளுக்கு மக்கள் மீண்டும் வருவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளரிடம் திரையரங்க உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தப்படம் திரையரங்கில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
