தமிழ் மற்றும் தெலுகு திரையுலகில் ஒரு நடனக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் தனது பன்முக திறமையின் காரணமாக நடிகர் மற்றும் இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்து திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ராகவா லாரன்ஸ். இவர் திரையுலகில் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்காக பேரிடர் காலங்களில் அவ்வப்போது நான்கொடை அளித்தும், தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவ்வப்போது குரல் கொடுத்ததும் வருபவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு நடனக் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராக திகில் மற்றும் காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுத்து நடிப்பதில் வெற்றியும் கண்டவர். இவர் தற்போது 5 ஸ்டார் கிரேயேஷன்ஸ் தயாரிப்பில் கதிரேசன் இயக்கத்தில் "ருத்ரன்" என்னும் படத்தில் நடித்து வருவதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. "அதிகாரம்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் போன்ற திரைப்படத்தை இயக்கிய துரைசெந்தில் இயக்கவுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"அசுரன்" படத்தின் வெற்றியை தொடர்ந்து எல்ரெட் குமார் தயாரிப்பில் நடிகர் சூரியை வைத்து "விடுதலை" என்னும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரலானது. அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான விசாரணை திரைப்படம் போலவே இந்தப் படத்தையும் மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
நடிகர் சூரியைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-40 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
