பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் அமீர் கான். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக அவ்வப்போது சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருபவர். மேலும் திரையுலகில்ஆறுமுறை filmfare விருதையும் நான்கு முறை தேசிய விருதையும் வென்றவர். இவர் தற்போது Laal Singh Chaddha மற்றும் Mogul போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் லகான் என்னும் திரைப்படத்தில் தன்னுடன் பணிபுரிந்த கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிறகு 2011-ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் ஆசாத் ராவ் கான் என்னும் மகன் பிறந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் கூட்டு அறிக்கையில் கூறியதாவது, "எங்கள் அழகான 15 வருடகால வாழ்க்கையில் நாங்கள் வாழ்நாள் அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளோம்! எங்கள் உறவு நம்பிக்கை மற்றும் அன்பினால் மட்டுமே வளர்ந்துள்ளது! இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க எண்ணுகிறோம்! இனி கணவன்-மனைவியாக அல்ல! ஆனால் ஒருவருக்கொருவர் இணை பிரியாத பெற்றோர் மற்றும் குடும்பமாக"!
மேலும் எழுதியது, “நாங்கள் சில நாட்களுக்கு முன்பே ஒரு திட்டமிட்ட பிரிவைத் தொடங்கினோம்! இப்போது இந்த ஏற்பாட்டை முறைப்படுத்த வசதியாக உணர்கிறோம்! அதாவது தனித்தனியாக வாழ்ந்து கொண்டே ஒரு கூட்டுக் குடும்பம் போல வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள உள்ளோம்! நாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக இருக்கிறோம்! இனி வரும் காலங்களில் ஒன்றாக சேர்ந்து வளர்ப்போம்! திரைப்படங்கள், பானி அறக்கட்டளை மற்றும் எங்களுக்கு ஆர்வமாக உள்ள பிற திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக பணியாற்ற உள்ளோம்!
எங்களுடைய இந்த 15 ஆண்டு கால வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்! மேலும் எங்களுடைய இந்த பயணத்திற்கு அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் வழங்குவார்கள் என நம்புகிறோம்! இந்த விவாகரத்தை ஒரு முடிவாக அல்லாமல், ஒரு எங்கள் புதிய வாழ்க்கை பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்! நன்றி அன்புடன் , கிரண் மற்றும் அமீர்! " என தங்கள் கூட்டு அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அமீர்கான் 1986-ஆம் ஆண்டு ரீனா தத்தாவை மணந்தார். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் மற்றும் ஈரா என்ற மகளும் உள்ளனர். பின்னர் 16 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
