பாலிவுட் திரையுலகில் கபூர் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். ஏனெனில் இவர்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் திரையுலகில் எதாவது ஒரு துறையில் இன்றும் பணியாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களை தயாரித்து வருபவர் போனி கபூர். இவர் பிரபல நடிகர்களான அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோரின் மூத்த சகோதரர் ஆவர். மேலும் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு மோனா கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஜுன் கபூர் என்ற மகனும் மற்றும் அன்ஷுளா கபூர் என்ற மகளும் உள்ளனர். பின்னர் 13 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன்பின் போனி கபூர் பிரபல முன்னணி நடிகையாக 1990- களில் வளம் வந்த ஸ்ரீதேவி அவர்களை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் இவரது மகன் அர்ஜுன் கபூர் மற்றும் மகள் ஜான்வி கபூர் ஆகியோரும் படங்களில் நடிக்கத் தொடங்கினர். இவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த போனி கபூரின் குடும்பத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு துக்க சம்பவம் அரங்கேறியது. ஆம்..! பிரபல நடிகை ஸ்ரீதேவி ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
இவரது மகனான அர்ஜுன் கபூர் பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் என்றே கூறலாம். Ishaqzaade என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் Gunday, 2 States, Finding Fanny, Ki & Ka மற்றும் Half Girlfriend போன்ற வெற்றிப் படங்களையும் வழங்கியுள்ளார். இவர் மேலும் தற்போது Bhoot Policedagger மற்றும் Ek Villain Returns என்னும் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களை தயாரித்து வந்த போனி கபூர் கடந்த சில மாதங்களாக தமிழ் மற்றும் தெலுகு திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழில் தல அஜித் நடித்து வரும் "வலிமை" என்னும் படத்தை தற்போது தயாரித்து வருகிறார். கொரோனா அலையின் தாக்கம் காரணமாக இந்தப் படத்திற்கான வெளிவரும் தேதி மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற வேலைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் Article 15 என்னும் படத்திற்கான தமிழ் ரீமேக்கயும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோமாளி. 1990-களில் பிறந்த ஜெயம் ரவி தனது பள்ளிப் பருவத்தில் எதிர்பாராத விபத்து காரணமாக கோமா நிலைக்கு தள்ளப் படுகிறார். பிறகு 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு நினைவு வருகிறது. அதன்பின் அவர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் விசயங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவை, காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் கலந்த குடும்பப் படமாக இயக்கியிருப்பார் இயக்குனர் பிரதீப். மேலும் இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். மேலும் இந்தப்படத்தில் அவருடைய மகன் அர்ஜுன் கபூர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
