திரையுலகில் தற்போது கோடி கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பது ஒரு போக்காக மாறி வருகிறது. மேலும் முன்னணி நடிகர்களும் அது போன்ற படங்களில் நடிப்பதையே விரும்புகின்றனர். அந்த வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தத் திரைப்படம் பாகுபலி. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி பாஹுபலி போன்றே சாதனை சாதனை படைத்த திரைப்படம் K.G.F இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
K.G.F படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் மது குருசாமி நடிக்க உள்ளார். கடந்த டிசம்பர் 2, 2020-அன்று படத்தின் தலைப்பு சலார் (Salaar) என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இது அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திரில்லர் படமாக தயாரிக்கப்பட உள்ளது என படக்குழுவாள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படம் நீலின் முதல் படமான Ugramm என்னும் படத்தின் ரீமேக் என சில வதந்திகள் பரவினாலும் இது ரீமேக் அல்ல பிரபாஸுக்காக எழுதப்பட்ட அசல் கதை என நீல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் இந்தப் படத்தின் முதன்மை கட்டப் படப்பிப்பு கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் நாள் தெலுங்கானாவில், கோதாவரிகணி என்னும் ஊரிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் First look போஸ்டரை Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். பிரபாஸ் ஒரு துப்பாக்கியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பது போல் வெளியான அந்த போஸ்டர் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தது. மேலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஏற்கனவே நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய பல்வேறு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. Shuddh Desi Romance என்னும் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தமிழில் ஆஹா கல்யாணம் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் K.G.F படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
