தமிழ் திரையுலகில் "துள்ளுவதோ இளமை" என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது நடிப்புக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். மிகவும் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் இவர் தன்னுடைய அனைத்துப் படங்களிலும் ஒரு ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் நடித்து அசத்தியிருப்பார். அந்த வகையில் இவர் நடித்து வெளிவந்த படங்களில் திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோஹினி, ஆடுகளம் மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
அதிக அளவில் வெற்றிப் படங்களை கொடுத்தாலும் அவ்வப்போது இவருடைய படங்கள் பெருத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி தோல்வியடைவதுமுண்டு. தமிழ் சினிமாவில் இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெருத்த எதிர்பார்ப்புகளுடன் Netflix இணையதள வெளியான திரைப்படம் "ஜகமே தந்திரம்". இந்த படம் வெளியானதும் இவருடைய சம்பளம் இருமடங்கு உயர்ந்து விட்டது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும் இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெறவில்லை. இந்தப்படத்திற்கு பிறகு 4 திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் தனுஷ். துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்னும் பேயரிடப்படாத படத்தில் "மாஸ்டர்" படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனனுடன் நடித்து வந்தார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிப்பு ஹைத்தராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அமெரிக்காவின் பிரபல திரைப்பட இயக்குனர்களான Russo Brothers இயக்கத்தில் The Gray Man என்னும் ஹாலிவுட் படத்தை முடித்து விட்டு திரும்பிய தனுஷ் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் இயக்குனர் கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த செய்தியை முற்றிலும் மறுத்த படக்குழுவினர் கார்த்திக் நரேன் படக்குழுவில் இருந்து விலகவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே என விளக்கம் அளித்திருந்தது.
எனினும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த நிலையில் படக்குழுவினர் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் நடிகர் தனுஷிற்கு காட்சியை விளக்குவது போன்ற புகைப்படத்தை Sathya Jyothi Films நிறுவனத்தின் Twitter பக்கத்தில் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், சேகர் கம்முலா மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கங்களில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news
