தமிழ்த் திரையுலகில் பொதுவாக ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினாக அறிமுகமாக வேண்டுமெனில் அவர்களுக்கு பெரிய அளவு செல்வாக்கு இருக்க வேண்டும் இல்லையெனில் பணபலம் இருக்க வேண்டும். இதனால் திறமையுடைய ஏழை எளிய கலைஞர்கள் சினிமா வாய்ப்புகளின்றி தவித்தும், பலர் இறுதிவரை வாய்ப்புகள் கிடைக்காமல் வேறு துறைகளில் பணியாற்றியும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் youtube விடீயோக்கள் மூலம் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரையில் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
அந்த வகையில் திரைக்கலைஞர்களின் திறமையை வெளிகொண்டு வருவதில் விஜய் டிவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். இதில் ஒளிபரப்பப்படும் வித்யாசமான நகைச்சுவை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பலரும் திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் தங்களது கால்த்தடத்தை பதித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி மூலம் திரையுலகில் அறிமுகமாகிய சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியோர் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கூ வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமடைத்தவர்கள் அஸ்வின், புகழ், பாலா மற்றும் ஷிவாங்கி. இவர்கள் அனைவரும் தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் "என்ன சொல்ல போகிறாய்" என்னும் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. அதோடு இப்படத்திற்கு புதுமுக நடிகையைய்த் தேர்வு செய்ய முனைப்புடன் இருந்த இயக்குனர் பல்வேறு புதுமுகங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியாக இப்படத்திற்கு தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
Youtube-இல் ஒளிபரப்பாகிவரும் பிரபல வலை தொடரான "கல்யாண சமையல் சாதம்" என்னும் தொடர் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை தேஜு அஸ்வினி. இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் இறுதியாக "பாரிஸ் ஜெயராஜ்" என்னும் திரைப்படத்தில் சந்தானத்துடன் "வலி மாங்கா வலிப் புளிப் மாங்கா புலிப்" என்னும் பாடலில் நடனமாடியிருந்த்தார். இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து Youtube-இல் இவர் நடனமாடிய "அஸ்கு மாரோ" என்னும் இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டதைத் தொடர்ந்து அஸ்வினுடன் இவர் இந்தப்படத்தில் நடிப்பது அவரது ரசிகர்களிடம் இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ஹரிஹரன் கூறுகையில் "இப்படம் நகைச்சுவை கலந்த முக்கோணக் காதல் கதையாக இருக்கும் எனவும் மேலும் இப்படத்திற்கான தலைப்பு தல அஜித் நடித்து 2000-ஆம் ஆண்டில் வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என்னும் திரைப்படத்தில் வரும் பாடல் வரியான "என்ன சொல்ல போகிறாய்" என்னும் பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். அதோடு மே மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படுவதாக இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணாமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கான துவக்கவிழா வெற்றிகரமாக நடைபெற்று மு டிந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆர் ரவீந்திரன் (Trident arts) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சிவா இசையமைக்க உள்ளார்.
