மன்னிப்பு கேட்ட சமந்தா - தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான The family Man 2 web series | Samantha apologizes - The family Man 2 web series released in Tamil and Telugu -

            விண்ணைத் தாண்டி வருவாயா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா (Samantha Akkineni). இவர் தற்போது தெலுங்கில் சாகுந்தலம் (Shaakuntalam) என்னும் வரலாற்று திரைப்படத்திலும் தமிழில் விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்திலும் (Kaathu Vaakula Rendu Kaadhal) நடித்து வருகிறார். 

            இந்நிலையில் இவர் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் (Manoj Bajpayee), பிரியாமணி (Priyamani) ஆகியோருடன் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளிவந்த வலைத்தொடர் தி ஃபேமிலி மேன் 2 (The Family Man 2). பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் வெளிவந்த இந்த வலைத்தொடர் தமிழர்களையும், விடுதலை புலிகளையும் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கூறி தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

            இதனால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுவதை தவிர்த்து OTT-யில் அமேசான் தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியிட்டனர் படக்குழுவினர். ஆனால் இந்த வலைத்தொடர் வெளியான பின்பு மக்களிடம் சமந்தா மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. சமந்தாவின் துணிச்சலான நடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டியதோடு பல்வேறு நூல் இதழ்களும் சமந்தாவின் நடிப்பை பற்றி பாராட்டி எழுதி இருந்தனர். 

            இந்நிலையில் கடந்த வாரம் மெல்போர்னில் நடந்த (IFFM) திரைப்பட விழாவில் இந்தியாவில் எடுக்கப்பட்ட பல்வேறு திரைப் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் வலை தொடர் பிரிவில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 என்னும் வலைத்தொடரில் நடித்ததற்காக சமந்தா மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகர் (Best actors in a Web Series) விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் பெற்ற இந்த வெற்றி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டதோடு அனைவராலும் பாராட்டப்பட்டது.

            கடந்த சில தினங்களுக்கு முன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படப்பிடிப்புத் தளத்தில் சமந்தாவுடன் நடித்து வரும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), நயன்தாரா (Nayanthaara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) ஆகியோருடன் சமந்தா இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

            இந்நிலையில் இந்த வலைத்தொடருக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இத்தொடர் வெளியாகியுள்ளது. இது குறிித்து பேட்டி ஒன்றில் பதிலளித்த சமந்தா, "மக்கள் தங்களது சொந்த கருத்துக்களை கூற நான் அனுமதிக்கிறேன். இந்த வலைத்தொடர் குறித்து அவர்களுடைய கருத்துக்கள் சரி என நினைத்தால், அவர்களுடைய மனதை புண்படுத்தியற்காக நான் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.  

            இந்த வலைத்தொடரில் யாரையும் புண்படுத்துவதாக தெரிந்தே நான் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே அப்படி செய்திருந்தால் நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன். எனினும் இத்தொடர் வெளியான பின்பு எதிர்ப்புகள் குறைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த வலைத்தொடரில் பெரிதாக எதுவும் தவறுதலாக காட்டப்படவில்லை என நான் நினைக்கிறேன்.  இந்த வலைத்தொடரை தொடர்ந்து எதிர்த்து வரும் மக்களிடம் நான் உண்மையாக என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

            அதேசமயம் ஃபேமிலி மேன் 2 தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளதாலும், தமிழில் அடுத்தடுத்து சமந்தா நடித்துள்ள படங்கள் வெளிவர உள்ளதாலும் அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த மன்னிப்பை இத்தொடர் வெளியான போதே கேட்டிருந்தால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்திருக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post