துரோணரின் சபதமும் அர்ஜுனன் கொடுத்த வாக்கும் | Arjuna's Vow to Protect Drona | Mahabharatham Episode 7

       துரோணரின் சபதமும், அர்ஜுனன் கொடுத்த வாக்கும் 

(Arjuna's Vow to Protect Drona)

            கடந்த பாகத்தில் துரியன் பீமனுக்கு செய்த பெரும்  சதியைப் பற்றியும் (பீமனை கொல்ல துரியோதனன் செய்த பெரும் சதி) அதிலிருந்து பீமன் எவ்வாறு மீண்டு வந்தான் என்பது பற்றியும் பார்த்தோம். தற்போது துரோணரின்  சபதம் பற்றியும், அர்ஜுனன் அவருக்கு அளிக்கும் வாக்கைப் பற்றியும் பாப்போம். 

துரோணரின் பிறப்பும், இளமையும் (Drona's Birth) :

            ராஜகுமாரர்கள் போர்க் கலைகளைக் கற்கும் நேரம் வந்ததை அறிந்த பீஷ்மர், கிருபாச்சாரியாரை  அவர்களுக்கு குருவாக நியமிக்கிறார். பாண்டவர்களும், கௌரவர்களும் அவரிடம் ஆயுதக் கல்வியை கற்கின்றனர். அந்த சமயத்தில் குரு துரோணர் மிகவும் நலிவுற்ற நிலையில் கிருபாச்சாரியாரின் இல்லத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இப்போது நாம் துரோணரைப் பற்றி சுருக்கமாக சிலவற்றைப் பார்ப்போம். பரத்வாஜ முனிவரின் பிள்ளையான துரோணர் தன் தந்தையிடம் பல கலைகளை கற்றுத் தேர்ந்தார். துரோணரின் தந்தையான பரத்வாஜ முனிவரும் பிருஷதன் என்ற மன்னனும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

            பிருஷதனுக்கு துருபதன் என்ற ஒரு மகன் பிறந்தான். பிருஷதன் தன் நண்பனான பரத்வாஜனிடமே, துருபதனை போர்க் கலைகளை கற்க செய்தார். துரோணரும், துருபதனும் ஒரே சமயத்தில் தான் பரத்வாஜரிடம் கலைகள் பல கற்றனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் மிக சிறந்த நண்பர்களாக இருந்தனர். அப்போது துருபதன், துரோணருக்கு ஒரு வாக்களித்தான். அதன்படி நான் எப்போதும் நாட்டிற்கு அரசனாகிறேனோ, அப்போது என் ஆட்சிக்கு உட்பட்ட சரி பாதி பகுதியை உன்னிடம் கொடுப்பேன் என்பதே அந்த வாக்கு. காலங்கள் கடந்தன இருவரும் கல்வி படிப்பை முடித்தனர். 

துரோணரின் சபதம் (Drona's vow) :

            தந்தை இறந்த பிறகு துருபதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இதற்கிடையில் குரு துரோணர் அற்புதமான பல கலைகளை பரசுராமரிடம் இருந்து கற்றறிந்தார். அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்து குழந்தையும் பிறக்கிறது. துரோணர் மிகவும் நலிவுற்றிருந்த காலம் அது. ஒரு வேலை சோற்றுக்குக் கூட வழியில்லாத நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவரின் குழந்தையோ தாய் பாலும் பசும்பாலும் இல்லாமல் பசியால் வாடியது. முன்னொரு காலத்தில் தன் நண்பனான துருபதன், தனக்கு கொடுத்த வாக்கு அவருக்கு நினைவிற்கு வருகிறது.

            உடனே அவரிடம் சென்று ஒரு பசுமாட்டை தானமாகப் பெற்று வருவோம் என்று எண்ணி துருபதனிடம் செல்கிறார் துரோணர். தன்னை நண்பன் என்று அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் துரோணரை, துருபதன் மிகவும் அவமதிக்கிறான். அதனால் பெரும் சினம் கொண்ட துரோணர் உனது நாட்டின் சரிபாதியை நான் பெற்று உன்னை சிறை பிடிப்பேன் என்று சபதம் மேற்க்கொண்டு அங்கிருந்து அஸ்தினாபுரம் நோக்கி விரைந்த அவர் கிருபாச்சாரியார் இல்லத்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 

துரோணரின் சாகசம் (Drona's Adventure) :

            அப்போது ஒருநாள் இளவரசர்கள் அனைவரும் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில், அந்த பந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறது. அந்த கிணற்றில் இருந்து எடுப்பதற்காக அவர்கள் பெரும் முயற்சி செய்கின்றனர். ஆனாலும் அவர்களால் பந்தை எடுக்க இயலவில்லை. அப்போது அங்கு வந்த துரோணர் தான் அந்தப் பந்தை புட்கள் கொண்டே எடுத்துத் தருவதாகவும், அதற்குப் பரிசாக அன்றைய இரவு உணவை அவர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

            இளவரசர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு தனது கையிலிருந்த மோதிரத்தையும் கழற்றி அந்தக் கிணற்றுக்குள் வீசி விட்டு இதையும் நான் இப்போது உங்கள் கண்முன்னே எடுத்துக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டு தனது கையில் வைத்திருந்த புட்களை தனது மந்திர சக்தி மூலம் சங்கிலி போலக் கோர்த்து அதனை கிணற்றில் விட்டு பந்தை வெளியில் எடுக்கிறார் துரோணர். அதோடு ஒரு வில்லையும் அம்பையும் கொண்டு தனது மோதிரத்தையும் வெளியில் எடுக்கிறார். 

இளவரசர்களுக்கு குருவாகும் துரோணர் :

            இதையெல்லாம் பார்த்து அசந்துபோன இளவரசர்கள் துரோணரை வணங்கிவிட்டு உண்மையில் நீங்கள் யார்? என வினவுகின்றனர். அதற்கு அவர் நீங்கள் அனைவரும் பீஷ்மரிடம் சென்று எனது திறமையை பற்றிக் கூறுங்கள். நான் யார் என்று அவர் அறிவார் என்று கூறுகிறார். உடனே பீஷ்மரிடம் அந்த இளவரசர்கள் நடந்தவை அனைத்தையும் அவரிடம் கூறுகின்றனர் இத்தகைய செயலை நிச்சயம் துரோணரால்தான் செய்திருக்க முடியும் என்று யோசித்த பீஷ்மர் அவரே இந்த இளைஞர்களுக்கு மிகச்சிறந்த குருவாக இருக்கும் தகுதியை பெற்றவர் என்று எண்ணி, அவரை நேரில் சென்று சந்தித்து தனது அரண்மனைக்கு வரச் சொல்லி அழைக்கிறார் பீஷ்மர். துரோணர் அரண்மனைக்கு வந்த பிறகு அவரை சிறப்பாக கவனித்த பீஷ்மர், அவர் அஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தை அவரிடம் சாதுரியமாக கேட்கிறார். 

            நடந்த அனைத்தையும் சோகத்தோடும், கோபத்தோடும் கூறிய துரோணர் இப்போது நான் மிகச் சிறந்த அறிவும் ஆற்றலும் கொண்ட குருகுல இளவரசர்களை என்னுடைய சீடர்களாக ஏற்றுக் கொள்ள எண்ணி இங்கு வந்துள்ளேன். இனி நாம் செய்யவேண்டியதை நீங்களே கூறுங்கள் என்றார் துரோணர். உடனே பீஷ்மர் இது எங்கள் பாக்கியம் எங்களது இளவரசர்கள் அனைவருக்கும் நீங்களே குருவாய் இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுத் தாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்கிறேன். இன்றிலிருந்து நீரே இந்த நாட்டிற்கு உண்மையான தலைவராவீர் என்கிறார். பீஷ்மரின் வார்த்தைகள் துரோணரை மகிழ்விக்கிறது. அதன்பிறகு பீஷ்மர் தன் பேரப் பிள்ளைகளை அழைத்து, இனி இவரே உங்களுக்கு குரு என்று கூறி துரோணரிடம் அவர்களை சீடராய் கொடுக்கிறார். இளவரசர்கள் அனைவரும் துரோணரின் பாதம் பணிகின்றனர். 

அர்ஜுனனின் குருபக்தி (Arjuna's kindness) :

            ஒரு நாள் தனது சீடர்களிடம் நான் என் மனதில் ஒரு பெரும் காரியத்தை ஆற்ற எண்ணி உள்ளேன். நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து அனைத்து கலைகளையும் கற்ற பிறகு, அந்த காரியத்தை எனக்காக ஆற்றி தர உறுதி கூறுவீர்களா ?என கேட்கிறார். இளவரசர்கள் அனைவரும் இதைக் கேட்டு மௌனம் காத்தனர். ஆனால் அர்ஜுனன் மட்டும் மௌனத்தை கலைத்து நிச்சயம் நான் அதை உங்களுக்காக ஆற்றுவேன் என்கிறான். அதைக் கேட்டவுடன் துரோணர் மனதில் ஆனந்தம் பொங்குகிறது. துருபதனை வீழ்த்துவதே துரோணரின் அப்போதைய லட்சியமாக இருந்தது. ஆனால் அர்ஜுனனுக்கு இதைப் பற்றியெல்லாம் அப்போது எதுவும் தெரியாது. ஆனாலும் அவன் குருவின் லட்சியத்தை தனது லட்சியமாக எண்ணி அவரிடம் அப்போது ஒப்புக்கொண்டான். 

            பின்னர் அரசகுமாரர்கள் கலைகள் பல கற்கத் துவங்கினர். அனைவரிலும் அர்ஜுனன் சிறந்து விளங்கினார். துரோணரின் மகன் அஸ்வத்தாமனும் அவர்களோடு சேர்ந்து அனைத்துக் கலைகளையும் கற்று வந்தான். மற்றவர்களைக் காட்டிலும் தனது மகனே சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணிய துரோணர், அஸ்வத்தாமனுக்கு சில சிறப்பு பயிற்சிகளை கொடுத்து வந்தார். ஆனாலும் அர்ஜுனனின் குருபக்தி துரோணரின் மனதை மாற்றியது. இயற்கையாகவே அவனிடம் இருந்த சில திறன்கள் துரோணரை வெகுவாகக் கவர்ந்தது. அகிலத்தில் ஒரு மிகச் சிறந்த வில்லாலனான உன்னை மாற்றுவேன் என்று அர்ஜுனனிடம் துரோணர் கூறுகிறார். 

            இதற்கிடையில் துரோணரிடம் கல்வி கற்க மற்ற நாட்டு இளவரசர்களும் வரத் துவங்கினர். அந்த சமயத்தில் கிரண்யதனுசன் என்னும் நிசாத மன்னனின் மகன் ஏகலைவனும் துரோணரிடம் வித்தைகள் பல கற்க வந்தான். ஆனால் அவனை சீடனாக ஏற்க துரோணர் மறுக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது ஏகலைவன் எப்படி ஒரு மிகச் சிறந்த வில்லாலனாக மாறுகிறான் போன்ற தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம். 


Post a Comment

Previous Post Next Post