அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் நடந்த முதல் யுத்தம் | The first battle between Arjuna and Karna in Mahabharata | Mahabharatham Episode 11

அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் நடந்த முதல் யுத்தம்

   ( The First Battle Between Arjuna and Karna )

            அர்ஜுனனை கொல்ல சகுனி மேற்கொண்ட சதியை பற்றியும் (Shakuni's plot to kill Arjuna in Mahabharatha), போட்டியில் பாண்டவர்களை வீழ்த்த துரியோதனன் செய்த செயல்களை பற்றியும் முந்தய பதிவில் பார்த்தோம். தற்போது கர்ணனின் வீரத்தைப் பற்றியும், அவன் எவ்வாறு அங்க தேசத்திற்கு அரசனான் என்பது பற்றியும் பார்க்கலாம்.

சதியிலிருந்து தப்பித்த அர்ஜுனன் ;

            தருமன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் துரியோதனனுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு, அர்ஜுனன் அடுத்த போட்டியாளனாக அஸ்வத்தாமனின் அம்பால் தேந்தெடுக்கப் படுகிறான். இப்போது அனைவரும் கூடியிருக்கும் அந்த மிகப்பெரிய அரங்கத்திற்குள் அர்ஜுனன் பிரவேசிக்கிறார். சரியாக அவன் உள்ளே வரும் நேரத்தில் சகுனியின் ஏற்பாடு படி, அந்த அரங்கத்தின் நுழைவு வாயில் முழுவதும் இடிந்து அவன் மேல் விழுகிறது. 

            அந்தக் காட்சியை கண்ட பலரும் அர்ஜுனன் மாண்டான் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மை யாதெனில் அந்த நுழைவாயில் தன் மீது இடிந்துவிழும் முன்னரே அவன் தனது கணைகள் கொண்டு கொடைகள் அமைத்து அதிலிருந்து தப்பித்து வெளியில் வருகிறான். இந்த காட்சியை கண்ட பிரஜைகள் அனைவரும் மாவீரன் அர்ஜுனன் வாழ்க! வாழ்க! என்று கரகோஷம் எழுப்புகின்றனர். அர்ஜுனன் தங்களது சதிகளிலிருந்து தப்பித்ததை எண்ணி துரியனும், சகுனியும் கவலை கொள்கின்றனர். 

துரியனுடன் சண்டையிடும் அர்ஜுனன் (Duryodhana vs Arjuna) :

            அர்ஜுனனுக்கும், துரியனுக்கும் இடையே போட்டி  துவங்குகிறது. துரியனின் நிழல் அர்ஜுனனை நெருங்கும் முன்னரே, அர்ஜுனன் தனது கணைகள் கொண்டு துரியனை திக்குமுக்காடச் செய்கிறான். துரியோதனன் எவ்வளவோ முயன்றும் அவனால் அர்ஜுனனின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. இந்நிலையில் தனது கணைகள் கொண்டு துரியனின் உடல் முழுவதையும் பனிக்கட்டிகள் மூலம் உறையச் செய்கிறான் அர்ஜுனன்.  அதனால் துரியோதனன் அப்படியே அசைவற்று நிற்கிறான். அந்தப் போட்டியில் அர்ஜுனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார் துரோணர். அதோடு அவர், வில்லேந்தி நிற்கும் இந்த விஜயனை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் எவருமில்லை! தனது சீடனான அர்ஜுனனே இந்த உலகின் மிகச்சிறந்த வில்லாளன் என்கிறார். பிறகு துரியனை அந்தப் பனிச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிடுகிறார் துரோணர். 

கர்ணனின் பிரவேசம் (Karna's Entry) :

              துரியோதனனை விடுவிக்க அர்ஜுனன் தனது கணைகளைத் தொடுக்கும் முன்னரே எங்கிருந்தோ ஒரு அம்பு அதி வேகமாக வந்து துரியோதனனை அந்தப் பனிச் சிறையிலிருந்து விடுவிக்கிறது. அந்த அம்பு எங்கிருந்து வந்தது என அனைவரும் குழம்புகின்றனர். அந்த நிலையில் அங்கு பிரவேசிக்கிறான் கர்ணன். கர்ணனை கண்ட துரோணர் அவனிடம் நீ யார்? என்று கேட்கிறார். அதோடு இந்த அரங்கமானது ராஜகுமாரர்கள் தங்களது திறமையை நிரூபிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரங்கம். இந்த அரங்கத்திற்குள் கணையைத் தொடுக்கும் அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது? என்கிறார் துரோணர். அதற்கு கர்ணன், நான் ஒரு பார்வையாளனாகவே வந்தேன். 

            அனால் உங்கள் சீடனான அர்ஜுனன் செய்து காட்டிய  சாகசங்களை கண்ட பின், அவனே இந்த அகிலத்தின் சிறந்த வில்லாளன் என்று நீங்கள் அறிவித்தீர்கள்! நானும் இந்த அகிலத்தில் ஒரு அங்கம் ஆவேன்! நீங்கள் அப்படி தெரிவித்தது என்னைப் போன்ற வீரர்களின் வீரத்தை குறைவாக எடை போடச் செய்கிறது! உங்கள் சீடன் அர்ஜுனனை விடவும் சிறந்த வில்லாளன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்பதை நிரூபிக்கவே இந்த அரங்கத்திற்குள் நான் வந்தேன்! உங்கள் சீடனான அர்ஜுனன், அவன் பிறந்த குலத்தில் சிறந்த வில்லாளன் என்று மாற்றி அறிவியுங்கள்! என்கிறான் கர்ணன். 

கர்ணனை கண்டு பயந்த பீஷ்மர் மற்றும் துரோணர் :

            இதுதான் அர்ஜுனனை தோற்கடிக்க தக்க சமயம் என்று எண்ணிய சகுனி, அர்ஜுனனிடம் வந்து அந்த சவாலை ஏற்கும் படி அவனைத் தூண்டுகிறான். இதற்கிடையில் யாரென்று தெரியாத ஒருவன் ராஜகுமாரனோடு போட்டியிடுவது சரியான செயல் அல்ல. அதோடு இதில் அர்ஜுனன் ஒருவேளை தோற்றால், அது இந்த நாட்டிற்கு பெருத்த அவமானமாகும் என்று எண்ணிய பீஷ்மரும், விதுரரும் அந்தப் போட்டியை நிறுத்த வழி செய்யும்படி கிருபாச்சாரியாரிடம் கூறுகின்றனர். உடனே அரங்கத்தில் பிரவேசித்த கிருபாச்சாரியார், வீரனே! நீ இதுவரை உன்னை பற்றி எதையும் கூறவில்லை! முதலில் நீ யார்? எந்த சத்ரிய வம்சத்தை சேர்ந்தவன்? என்று கூறு! அதன் பிறகு போட்டி பற்றி முடிவு செய்யலாம் என்கிறார். அதற்குக் கர்ணன் நான் தேரோட்டியின் மகன் என்று கூறுகிறான்.  

கர்ணனுக்கு உதவிய துரியன் (Duryodhana helps Karna):

            இதைக் கேட்ட கிருபாச்சாரியார், போர் தர்மத்தின்படி ஒரு ராஜகுமாரன் தேரோட்டியின் மகனிடம் தனது வீரத்தைக் காட்டுவது என்பது முறை ஆகாது! என்று கூறி அங்கிருந்து கர்ணனை செல்லும்படி கூறுகிறார். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் அர்ஜுனனுக்கு ஆதரவாக இருக்கும் வகையில், இங்கிருந்து சென்றுவிடு தேரோட்டியின் மகனே! என்று தொடர்ந்து ஆரவாரம் செய்கின்றனர். உடனே அங்கு வந்த அவனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன், கர்ணனை சமாதானப்படுத்தி அவனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில் துரியோதனன் அவனை தடுத்து நிறுத்துகிறான். இங்கிருக்கும் கர்ணன் ஒரு அரசனாக இருந்தால் அவன் அர்ஜுனனோடு போட்டியிடலாம் அல்லவா என்று கிருபாச்சாரியாரிடம் கேட்கிறான் துரியோதனன். அதற்கு ஆம் என்று கூறுகிறார் கிருபாச்சாரியார். 

அங்கதேசத்திற்கு அரசனாகும் கர்ணன் (Karna become the king):

             உடனே துரியன், இவனுக்கு நான் இந்த கனமே அரசபதவியை வழங்குகிறேன். பல வருடங்களுக்கு முன்பு பிதாமகர் பீஷ்மர் அங்கதேசத்தை போரிட்டு வென்று அதை நம் வசமாக்கினார். ஆனால் இப்போது அதை ஆள அரசனில்லை. ஆகையால் என் மித்ரனான கர்ணனை இப்போதே  அங்க தேசத்தின் அரசனாக நான் அறிவிக்கிறேன்! என்கிறான் துரியோதனன். உடனே  பீஷ்மர் எழுந்து நின்று துரியோதனா! அந்த உரிமை உனக்கில்லை! அஸ்தினாபுரத்தின் மீதோ அல்லது அங்க தேசத்தின் மீதோ எந்த வகையிலும் தற்போது நீ உரிமை கோர முடியாது! நீ இப்போது வரை ராஜகுமாரனே தவிர, அரசன் அல்ல என்கிறார். உடனே குறுக்கிட்ட சகுனி, அப்படியாயின் அஸ்தினாபுர அரசருக்கு அந்த உரிமை இருக்கிறதல்லவா? தனது புதல்வனின் ஆசையை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்.

            அதற்கேற்ப திருதராஷ்டிரனும், கர்ணனை அங்கதேசத்தின்  அரசனாக அறிவிக்கிறார். மக்கள் அனைவரும் தாழ்ந்த குலத்தான் என்று தன்னை இழிவு படுத்திக் கொண்டிருந்த நிலையில், தனக்கு அரசு பதவி கிடைக்கக் காரணமாயிருந்த துரியனைக் கண்டு, அவன் கை கூப்பி வணங்குகிறான். எனது அருமை நண்பா! எனக்காக நீ எவ்வளவு பெரிய செயலை ஆற்றியுள்ளாய் என்பதை நீ அறியமாட்டாய்! இனி நான் பெறப்போகும் வெற்றிகள் அனைத்தும், என் உயிரும் இனி உனக்கே என்கிறான் கர்ணன். 

அர்ஜுனனுடன் போட்டியிடும் கர்ணன் (Arjuna vs Karna ) :

           அதன்பிறகு கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே  போட்டி துவங்குகிறது. கர்ணனும், அர்ஜுனனும் மாறி மாறி கணை மழையை பொழியச் செய்கின்றனர். இருவரின் தாக்குதலும் சமமாகவே இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது அவர்களின் திறன். அங்கு கூடியிருந்த பிரஜைகள் அனைவரும் அவர்கள் செய்யும் சாகசத்தைக் கண்டு வாய் பிழக்கத் துவங்கினர். அர்ஜுனன் விடும் அம்புகள் அனைத்தையும் கர்ணன் முறியடித்தாலும், அதில் ஒரு பானம் மட்டும் அவனது நெஞ்சை கிழித்தெறிய அவனிடம் செல்கிறது.  

            அப்போது அவன் உடலில் இயற்கையாக இருந்த கவசத்தைத் தாண்டி அந்த கணையால் கர்ணனின் மார்பை துளைக்க இயலவில்லை. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் கொண்டனர். ஆனால் குந்திதேவி மட்டும் அதிர்ச்சி கொண்டாள். ஒருவேளை இவன் நம் மகன் கர்ணனாக இருப்பானோ? என்று எண்ணுகிறாள் குந்தி. இந்த நிலையில் சூரியதேவன் அஸ்தமிக்கிறார். அதனால் போட்டி நிறுத்தப்படுகிறது. இருவருமே சமமாக சண்டையிட்டதால் யாரும் அதில் வெற்றியாளராக அறிவிக்கப்படவில்லை. இனி பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நிகழப்போகும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

Post a Comment

Previous Post Next Post