மகாபாரத போருக்கு முன்பே நடந்த மாபெரும் போர்
(The Great War Before the Mahabharata War)
ஒருநாள் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்த துரோணர், எனக்கான குரு தட்சணையை நீங்கள் அனைவரும் தரும் காலம் வந்துவிட்டது! எனக்கான தட்சணையை நீங்கள் தருவீர்களா? என்று கேட்கிறார். நிச்சயம் தருகிறோம் குருவே என்று அனைவரும் உரத்த குரலில் கூறுகிறார்கள். பல வருடங்களாக தனது மனதில் இருந்து வந்த பகையை தீர்க்க எண்ணிய துரோணர், பாஞ்சால நாட்டின் மீது போர் தொடுத்து துருபதனை நீங்கள் சிறை பிடிக்க வேண்டும்! அதுவே நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் குருதட்சனை என்றார் துரோணர். உடனே அனைத்து இளவரசர்களும் போருக்கு தயாராகின்றனர். போருக்கு செல்லும் நாள் குறிக்கப்படுகிறது.
அர்ஜுனனின் திட்டம் :
துரோணரை தங்களோடு அழைத்துக்கொண்டு ஒரு பெரும் படையோடு அவர்கள் அனைவரும் பாஞ்சால தேசம் நோக்கி விரைந்தனர். பாண்டவர்களோடு துரியோதனன், துச்சாதனன், விகர்ணன், உள்ளிட்ட பல அற்புத வீரர்களும் ஒன்றிணைந்தால் இந்த யுத்தத்தில் நிச்சயம் நாம் வெல்வது உறுதி என்று எண்ணினார் துரோணர். பாஞ்சால மன்னனான துருபதனுக்கு இந்த செய்தி எட்டியது. அவனும் சாதாரண மன்னன் அல்ல.
பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட பெரும் படை ஒன்று அவரிடமிருந்தது. பாஞ்சால தேசத்தின் எல்லையை அனைவரும் அடைந்ததும் தனது குருவான துரோணரை தனித்து அழைத்த அர்ஜுனன், அந்தப் போரில் கௌரவர்கள் தங்களது வீரத்தை முதலில் காட்டட்டும். அதன்பிறகு நாங்கள் எங்கள் வீரத்தை காட்டுகிறோம். அதற்கு உங்கள் அனுமதி எங்களுக்கு வேண்டும் என்கிறான் அர்ஜுனன். துரோணரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அதன் காரணமாக பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தின் எல்லையிலேயே நின்று விடுகின்றனர்.
துருபதனுடன் சண்டையிடும் கௌரவர்கள் (Drupada vs Kouravas) :
கௌரவர்கள் 100 பேரும் தங்களது படையோடு பாஞ்சால தேசத்திற்குள் நுழைந்து, பெரும் ஆரவாரத்தோடு போரிடத் துவங்குகின்றனர். அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாஞ்சால தேசத்து வீரர்கள் பலர் மாண்டு போகின்றனர். அதே சமயத்தில் துருபதனின் தாக்குதலும் மிகக் கடுமையாக இருக்கிறது. போரிடுவது ஒரு துருபதனா? அல்லது பல துருபதரர்கள் போரிடுகிறார்களா? என்று வியக்கும் அளவிற்கு போர்க்களத்தில் அவன் சுற்றி சுற்றி போரிடுகிறான். அவன் வில்லில் இருந்து எழுந்த நாணின் ஒலியானது இந்த விண்ணுலகத்தையே பிளக்கும் அளவிற்கு இருக்கிறது. துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஒன்றிணைந்து துருபதனை தாக்க முற்படுகின்றனர்.
அதன் காரணமாக துருபதனுக்கு சில காயங்கள் ஏற்படுகிறது. ஆனால் அவன் தனித்து நின்றே அவர்கள் அனைவரையும் சமாளிக்கிறான். பாஞ்சால தேசத்து வீரர்களோடு சேர்ந்து அந்நாட்டு குடிமக்களும் போர்க்களத்தில் பிரவேசித்து கௌரவர் படையைத் தாக்குகின்றனர். அவர்கள் கையில் எந்த ஆயுதம் கிடைத்தாலும் அதைக் கொண்டு அவர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத கௌரவர்களின் படை பின்வாங்கத் துவங்குகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கௌரவர்களால் அந்தப் போரை சமாளிக்க இயலவில்லை. அதனால் அவர்கள் போர்க்களத்திலிருந்து வெளியே தப்பித்து ஓடி வருகின்றனர்.
துருபதனுடன் சண்டையிடும் பாண்டவர்கள் (Drupada vs Pandavas ):
இதைக்கண்ட பாண்டவர்கள் போர்க்களத்தில் புகுந்து தாக்க ஆயத்தம் ஆகின்றனர். தருமன் அந்த போருக்கு வந்து அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், கௌரவர்களே நாட்டை ஆள நேரிடும் என்று எண்ணிய அர்ஜுனன், தருமனிடம் தாங்கள் போர்க்களத்திற்கு வரவேண்டாம் என்று வேண்டிக்கொண்டான். அதனால் அவனை விடுத்து மற்ற நால்வரும் தங்களது குருவான துரோணரை வணங்கிவிட்டு போர்க்களத்தில் பிரவேசித்தனர். இந்தப் போரில் குரு துரோணரும், அவரது மகன் அஸ்வத்தாமனும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிரிப்படையை கண்டு வீர முழக்கத்தோடு பாண்டவர்கள் முன்னேறினர்.
படைகளை நொறுக்கிய பீமன் (Drupada vs Bhima):
பாண்டவர்களின் வலிமை மிக்கவனான பீமன் தனது கதையை கொண்டு தாக்கி சில நொடிகளிலேயே பல நூறு பேர்களுக்கு எமனாய் மாறினான். ஒருபுறம் பாண்டவர்கள் சிறப்பாய் போரிட, மறுபுறம் துருபதனின் யானைப்படை தனது எதிரிகளை பந்தாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கண்ட பீமன் அந்த யானைககளுக்குள் புகுந்து அங்கிருந்த யானைகளை திக்குமுக்காடச் செய்தான். பாண்டவர்கள் போர்க்களத்தில் புகுந்து பிறகு அந்தப் போர்க்களத்தின் நிலைமையானது சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு சாதகமாக மாறியது. அவர்களோடு வந்த வீரர்கள் அனைவருக்கும் அது உற்சாகத்தை தந்தது. பீமன் ஒருவனே தனித்து நின்று ஒரு பெரும் எதிரி கூட்டத்தை சமாளித்துக் கொண்டிருந்தான். நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு புறம் சிறப்பாக போரிட்டுக் கொண்டிருந்தனர்.
இது ஒருபுறமிருக்க அர்ஜுனனின் கணை மழையை சமாளிக்க முடியாமல் எதிரிப் படையினர் செய்வதறியாது தவித்தனர். அவன் வில்லிலிருந்து சீறிப் பாய்ந்த அம்பு குதிரைப் படையை சின்னாபின்னமாக்கியது. இதைக் கண்டு சினம் கொண்ட பாஞ்சாலர்கள் அவனை மூர்க்கமாகத் தாக்க முற்பட்டனர். உடனே அர்ஜுனன் தனது வில்லிலிருந்து தொடர்ந்து கணைகளை செலுத்தினான். அவன் எந்த நொடியில் அம்பை எடுத்து வில்லில் வைக்கிறான்? அதை எப்போது ஏவுகிறான் என்று யாரும் அறியவில்லை! அந்த அளவிற்கு அதிவிரைவாக அவன் வில்லிலிருந்து கணைகள் பாய்கின்றன.
சத்யஜித்துடன் போரிடும் அர்ஜுனன் (Drupada vs Arjuna):
துருபதனன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். அதைக்கண்ட பாஞ்சால தேச தளபதியான சத்தியஜித், அர்ஜுனனை நோக்கி விரைந்து வந்து அவனோடு போரிடத் தொடங்குகிறான். அவர்கள் இருவருக்குமான போர் நீண்ட நேரம் நடக்கிறது. சத்தியஜித்தின் சில கணைகள் அர்ஜுனனின் உடலை காயப்படுத்துகிறது. கடும் சினம் கொண்ட அர்ஜுனன் தனது அஸ்திரத்தைக் கொண்டு சத்தியஜித்தின் வில்லை முறித்தான்.
அதைத்தொடர்ந்து சத்யஜித் புதிதாக வேறொரு வில்லை எடுத்து தனது வலிமை முழுவதையும் பயன்படுத்தி அர்ஜுனனைத் தாக்கினான். இதனால் அர்ஜுனனின் தேர்க்குதிரைகள், தேர்ப்பாகன் என அனைவரும் காயமடைந்தனர். அதனால் சத்யஜித்தை கொல்வதென முடிவெடுத்த அர்ஜுனன், தனது அஸ்திரம் கொண்டு சத்யஜித்தின் குதிரைகளையும், தேர்ப்பாகனையும் முதலில் கொன்றான். இதனால் சத்யஜித் போரிலிருந்து பின்வாங்கினான்.
துருபதனை சிறைபிடிக்கும் அர்ஜுனன் (Arjuna defeats Drupada):
அதைக் கண்ட துருபதன், அர்ஜுனனோடு நேருக்கு நேர் போராடத் துவங்கினான். அவர்கள் இருவருக்கும் இடையேயான போரானது மிக பயங்கரமாக இருந்தது. போரனுபவமிக்க அர்ஜுனனின் தாக்குதல்கள் பல அர்ஜுனனை வியப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் அர்ஜுனன் தனது முயற்சியில் சற்றும் தளராமல் தொடர்ந்து போரிட்டான். ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் கை ஓங்கத் துவங்கியது. அர்ஜுனனின் தாக்குதல்களை துருபதனால் வெகுநேரம் சமாளிக்க முடியவில்லை. அர்ஜுனன் எய்த அம்பால் துருபதனின் தேர் குதிரைகளும், தேரோட்டியும் காயமடைந்தனர். அதோடு வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கணைகள் கொண்டு அழித்தான் அர்ஜுனன். அதன்பிறகு தனது தேரிலிருந்து எகிறி துருபதனின் தேருக்கு சென்ற அர்ஜுனன், துருபதனனை சிறைபிடித்தான். இதைக் கண்ட பாஞ்சால தேசத்து வீரர்கள் ஆளுக்கொரு திசையாய் ஓடினர்.
துருபதனின் பழி உணர்வு :
துருபதனை சிறை பிடித்து தனது குருவின் முன் கொண்டு சென்று நிறுத்தினர் பாண்டவர்கள். உனது அதிகாரமும் உனது உயிரும் இப்போது என் கையில் உள்ளது துருபதா என்றார் துரோணர். ஆனால் நான் உன் உயிரைப் பறிக்க போவது கிடையாது. மாறாக இன்றும் நான் உன்னோடு நட்பு கொள்ளவே எண்ணுகிறேன். ஆகையால் நீ ஆண்ட இந்த பாஞ்சால தேசத்தின் பாதியை நான் எடுத்துக் கொண்டு மீதியை உனக்கே தருகிறேன். அதன்படி கங்கை ஆற்றின் தெற்கில் உள்ள நாட்டிற்கு நீயே மன்னனாவாய். கங்கை ஆற்றின் வடக்கே உள்ள நாட்டிற்கு இனி என் மகன் அஸ்வத்தாமனே அரசனாவான் என்கிறார். துரோணர் கூறியதை துருபதன் ஏற்கிறான்.
அதன் பிறகு துரோணர் தன்னை தோற்கடித்ததை எண்ணி தினம் தினம் வருந்தியவாறே தனது ஆட்சியை தொடர்கிறான். எப்படியாவது துரோணரைப் பழி தீர்த்து தன் நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று எண்ணிய துருபதன் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க எண்ணினான். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? பாண்டவர்களைக் கொல்ல அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதைப் பற்றி அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்.