அர்ஜுனனை கொல்ல சகுனி தீட்டிய சதி
(Sakuni's plot to kill Arjuna in Mahabharata)
பரசுராமரிடம் கர்ணன் கற்றுக்கொண்ட கலைகளைப் பற்றியும், அவனுக்கு மற்றவர்களால் ஏற்பட்ட சாபம் (The curses that caused Karna's Death) பற்றியும் முந்தய பதிவில் பார்த்தோம். தற்போது அஸ்தினாபுரத்தில் இளவரசர்களுக்கிடையே ஏற்படும் சண்டையில் அர்ஜுனனை கொல்ல சகுனி தீட்டிய திட்டம் பற்றி பார்க்கலாம்.
பரசுராமரிடம் கலைகளை கற்ற பிறகு கர்ணன் துரியனைத் தேடி வருகிறான். இந்த நிலையில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணர் அஸ்தினாபுர அரண்மனைக்குச் சென்று தான் அனைத்து கலைகளையும் இளவரசர்களுக்கு கற்பித்து விட்டதாகவும், அனைவரும் தற்போது போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்றும் அனைவரது முன்னிலையிலும் கூறுகிறார்.
அதைக் கேட்டு, தனது மகனான துரியோதனன் அனைவரைக் காட்டிலும் சிறந்தவனாக விளங்குகின்றானா? என்று கேட்கிறார் திருதராஷ்டிரர். அதற்கு பதிலளித்த பீஷ்மர், அஸ்தினாபுர வழக்கப்படி இளவரசர்கள் அனைவரும் இந்நாட்டு பிரஜைகள் மற்றும் ஆன்றோர் சான்றோர் என அனைவரது முன்னிலையிலும் தங்களது திறமையை தனித்தனியாக வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படும் வகையில் அவர்களில் சிறந்தவர் யார் என்பது தெரியவரும் என்கிறார்.
அஸ்தினாபுர வழக்கம் :
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் காந்தார அரசனான சகுனி அங்கு ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதன்படி இளவரசர்கள் தனித்தனியாக திறமையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினால் தான் சரியான வீரனைத் தேர்ந்தெடுக்க முடியும். அதுவே காந்தார நாட்டு வழக்கம் என்கிறார். உங்கள் வழக்கத்தையெல்லாம் உங்கள் நாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு அஸ்தினாபுர ராஜ்யத்தின் வழக்கம்தான் பின்பற்றப்படும் என்கிறார் பீஷ்மர். ஆனால் பீஷ்மரின் பேச்சில் குறுக்கிட்ட மன்னன் திருதராஷ்டிரன் சகுனி சொல்வது கூட சரியே என்கிறார்.
அதோடு அஸ்தினாபுரத்தை அடுத்து ஆளப்போகும் மன்னன் யார் என்பதை அறிய இந்த போட்டி ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆகையால் இளவரசர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதே சரி என்கிறான் திருதராஷ்டிரன். இந்த வார்த்தைகளை திருதராஷ்டிரன் கூறுகையில் அவன் மனதில் துரியோதனன் தான் நிச்சயம் அனைவரையும் வெல்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அதனாலேயே அவர் அப்படி கூறினார். மன்னனின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் அதற்கு ஒப்புக் கொள்கிறார் பீஷ்மர்.
சகுனியின் சதி (Shakuni's plot) :
சகுனி ஒரு விடயத்தை சொன்னால் அதில் நிச்சயம் ஏதாவது ஒரு சதி இருக்கும் என்று எண்ணிய பீஷ்மர் அதுகுறித்து மகா மந்திரிகளிடம் ஆலோசிக்கிறார். அதன்பிறகு சகுனி என்ன சதி செய்தாலும் நாம் அதை முறியடிக்க வேண்டும் என்று பீஷ்மரும், துரோணரும் முடிவெடுக்கின்றனர். போட்டிக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுகிறது. துரியோதனனை எப்படியாவது இந்தப் போட்டியில் ஜெயிக்க வைத்து அவனது வீரத்தை பறைசாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான் சகுனி. அதற்கான சதி வேலைகளில் அவன் ஈடுபடத் துவங்குகிறான்.
துரியோதனனை எளிதில் வீழ்த்தும் சக்தி அர்ஜுனனுக்கு உண்டு என்பதை அறிந்து அவன் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அதற்காக போட்டி நடக்கவிருக்கும் அரங்கத்தை அமைப்பவனை வரவைத்து, அவனுக்கு பணத்தாசை காட்டித் தான் கூறுவதை கேட்கும் படி கூறுகிறான் சகுனி. அதன்படி அர்ஜுனன் எப்போது அரங்கத்திற்குள் பிரவேசிக்கிறானோ, அப்போது அரங்கத்தின் வாயில் அவன் மீது இடிந்து விழும் படி அரங்கத்தை அமைக்க வேண்டும் என்று அவனிடம் கூறுகிறான் சகுனி. பணத்திற்காக அவனும் அதை ஒப்புக் கொள்கிறான்.
போட்டியின் விதிகள் :
போட்டிக்கான நாள் வந்தது. ஆன்றோர்கள், சான்றோர்கள், வீரர்கள், பிரஜைகள் அனைவரும் அந்த மிகப்பெரிய அரங்கத்திற்குள் கூடினர். போட்டிக்கான விதியை குரு துரோணர் கூறுகிறார். அதன்படி இங்கு ஒரு மிகப்பெரிய சக்கரத்தில் இளவரசர்கள் அனைவரது பெயர்களும் எழுதப்பட்டுள்ளது. இந்த சக்கரமானது சுற்றிக்கொண்டே இருக்கும். எனது மகன் அஸ்வத்தாமன் அந்த சக்கரத்தின் மீது அம்பை எய்வான். அந்த அம்பு யார் பெயர் மேல் படுகிறதோ அந்த இளவரசன் இந்த அரங்கத்தில் பிரவேசிப்பார். அவரையடுத்து இந்த அரங்கத்தில் பிரவேசிக்கும் இளவரசரோடு முதலில் வந்த இளவரசர் போட்டியிட வேண்டும்.
இருவரில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் அடுத்து வரும் இளவரசரோடு போட்டியிட வேண்டும். இப்படி இன்று சூரியன் அஸ்தமிக்கும் வரை யார் இந்த அரங்கத்தில் நிலைக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார் என்கிறார். இந்த விதிகளோடு மேலும் சில விதிகளை சேர்க்க எண்ணிய பீஷ்மர் இளவரசர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளலாம்! ஆனால் ரத்தம் படும்படி மோதிக் கொள்ளக் கூடாது! யாராவது ரத்தம் வரும் வழியில் மோதினால் அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார் என்று கூறுகிறார்.
நகுலன் மற்றும் சகாதேவனை தோற்கடிக்கும் துரியன் : ( Nakula vs Duryodhana )
அதன் பிறகு போட்டி ஆரம்பமாகிறது. அஸ்வத்தாமன் எய்த அம்பு துரியனின் பெயரில் படுகிறது. துரியன் அந்த அரங்கத்திற்குள் பிரவேசிக்கிறான். துரியனும், அஸ்வத்தாமனும் சிறுவயது முதலே நண்பர்கள் என்பதால் அவனும் சகுனியின் சதிக்கு உறுதுணையாக இருக்கிறான். அவன் திட்டமிட்டே துரியனின் பெயரில் அம்பெய்து அவனை முதலில் வரச்செய்தான். துரியனை கண்டவுடன் பிரஜைகள் அனைவரும் கரகோஷம் எழுப்புகின்றனர். அடுத்து அஸ்வத்தாமன் எய்த அம்பு நகுலனின் பெயர்மேல் படுகிறது. அழகில் சிறந்தவனான நகுலன் அரங்கத்திற்குள் பிரவேசிக்கிறார்.
துரியனுக்கும் நகுலனுக்கும் போட்டி துவங்குகிறது. துரியனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நகுலன் தோற்றுப் போகிறான். அடுத்து அஸ்வத்தாமன் எய்த அம்பு சகாதேவன் பெயர்மேல் படுகிறது. சகாதேவனும் துரியனோடு போட்டிப்போட்டு தோற்றுப் போகிறான். அடுத்தடுத்து பாண்டவர்களின் பெயர்கள் மீதே அம்பு படுவதால் இதில் நிச்சயம் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று எண்ணுகிறார் பீஷ்மர். ஆனால் அப்போது அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
துரியோதனனும், யுதிர்ஸ்டனும் ( Yudhishthira vs Duryodhana ) :
அடுத்து அஸ்வத்தாமன் எய்த அம்பு யுதிஷ்டிரனின் பெயர் மேல் படுகிறது. தருமன் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரனுக்கும், துரியனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரும் சமமான பலத்தோடு திகழ்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் யுதிஷ்டிரனின் தாக்குதலை துரியோதனனால் சமாளிக்க முடியவில்லை. அவன் நிலை தடுமாறுகிறான். யுதிஷ்டிரனிடம் ஒரு வேலை தோற்கும் நிலை உருவானால் அவன் பிறப்பை பற்றி இழிவாகப் பேசு!
அதனால் அவன் கோபத்தில் நிலை தடுமாறுவான்! என்று சகுனி துரியனிடம் முன்பே கூறி வைத்திருந்தான். அதன்படி தருமனின் பிறப்பைப் பற்றி இழிவாக பேசியதும், தருமனுக்கு கோபம் அதிகரிக்கிறது. கோபத்தில் துரியனை எதாவது செய்தால் போட்டியின் விதியை மீறும் நிலை உருவாகிவிடும் என்று எண்ணி தருமன் போட்டியிலிருந்து பின் வாங்குகிறான். இதுதான் சமயமென்று தர்மனை துரியன் தாக்குகிறான். இறுதியில் துரியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
துரியோதனனும், பீமனும் ( Bhima vs Duryodhana ) :
அடுத்து அஸ்வத்தாமன் எய்த அம்பு பீமனின் பெயர் மீது படுகிறது. பீமன் அந்த அரங்கத்திற்குள் பிரவேசித்ததும் அந்த அரங்கமே அதிர்கிறது. துரியனோடு கடுமையான யுத்தம் புரிய துவங்குகிறான் பீமன். பீமனின் அதிரடித் தாக்குதல்களை துரியனால் சமாளிக்க முடியவில்லை. துரியனை அவன் பந்தாடுகிறான். பீமன் அடிக்கும் வலியை தாங்க முடியாமல் திணறுகிறான் துரியன். ஆனால் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து எதிர்க்கிறான். இருவருக்குமான போட்டி யுத்தமாக மாறுகிறது. அதோடு அங்கு கூடியிருந்த மக்களும் இரு பிரிவுகளாகப் பிரிந்து, பீமன் மற்றும் துரியனுக்கு ஆதரவாக கரகோஷத்தை எழுப்புகின்றனர். இந்த போட்டியானது யுத்தமாக மாறியதைத் தொடர்ந்து பீஷ்மர் அதை நிறுத்தும்படி மன்னரிடம் கேட்கிறார்.
ஆனால் திருதராஷ்டிரனோ, துரியன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக போட்டியை நிறுத்த மறுக்கிறான். பீமனின் பலமான சில தாக்குதல்களால் துரியனின் உடம்பிலிருந்து இரத்தம் பெருக்கெடுக்கிறது. உடனே போட்டியிடையில் குறுக்கிட்ட துரோணர், நீ ரத்தம் வரும் வரை துரியனை தாக்கியதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுகிறாய் என்கிறார். அதைக் கேட்டு சிரித்த பீமன், என்ன நான் இவனிடம் போட்டியிட்டேனே! நிச்சயம் இல்லை! என்னுடைய பலத்தை சிறிதளவு இவனுக்கு காட்டவே நான் இந்த அரங்கத்திற்குள் வந்தேன். இந்த போட்டியில் வெற்றி பெறும் தகுதி என் தம்பி அர்ஜுன் ஒருவனுக்கே உண்டு! என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறான் பீமன்.
அடுத்ததாக அஸ்வத்தாமன் எய்த அம்பு அர்ஜுனனின் பெயர் மீது படுகிறது. அர்ஜுனன் இங்கு வந்தால் நான் நிச்சயம் தோற்பேன் சகுனியிடம் கூறுகிறான் துரியன். கவலைப்படாதே துரியோதனா! அர்ஜுனன் இங்கு வந்து உன்னை எதிர்க்க மாட்டான்! அதற்கு முன்பே அவன் கொல்லப்படுவான்! என்கிறான் சகுனி. இந்த நிலையில் அர்ஜுனன் எப்படி உள்ளே வருகிறான்? அவன் துரியனை என்ன செய்கிறான்? கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடக்கும் போட்டி இப்படி பலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.