அர்ஜுனன் பார்த்து பொறாமைபட்ட மாவீரன் ஏகலைவன்
(Legend Ekalavya in Mahabharata)
துரோணரின் சபதம் (Arjuna's Vow to Protect Drona) பற்றியும், ஏகலைவனுக்கு துரோணர் கலைகள் கற்றுத்தர மறுத்துவிட்டது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம். தற்போது ஏகலைவனைக் கண்டு எதனால் அர்ஜுனன் பொறாமை கொள்கிறான் என்பதையும் வில் வித்தையில் எவ்வாறு சிறந்து விளங்குகிறான் என்பதையும் பார்ப்போம்.
ஏகலைவனின் சாகசம் (Ekalaivan's Adventure) :
துரோணர் கலைகள் கற்றுத்தர மறுத்தாலும் ஏகலைவன் துரோணரின் பாதம் பணிந்து அவரிடம் ஆசி பெற்று அங்கிருந்து திரும்பிச் செல்கிறான். தான் தங்கியிருக்கும் இடத்தில் அவன் துரோணரைப் போல ஒரு உருவத்தை களிமண்ணால் அமைத்து, அந்த சிலையை துரோணராக பாவித்து அவன் வில் வித்தையை கற்கத் துவங்குகிறான். இந்த நிலையில் ஒரு சமயம் பாண்டவர்களும், கௌரவர்களும் வேட்டையாட காட்டிற்குச் செல்கின்றனர். அவர்களின் உதவிக்காக சென்றவர் ஒருவரின் நாயும் அவர்களோடு செல்கிறது. அனைவரும் வேட்டையாடுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
அந்த சமயத்தில் அவர்களோடு சென்ற நாய் வேறு பக்கம் சென்று ஏகலைவன் இருக்கும் இடத்தை பார்த்து தொடர்ந்து குரைக்கிறது. அங்கிருந்து வெளியில் வந்த ஏகலைவன் அந்த நாய் தனது வாயை மூடுவதற்கு முன்பே 7 அம்புகள் கொண்டு அந்த நாயின் வாயை தைக்கிறான். உடனே அந்த நாய் பாண்டவர்களிடம் செல்கிறது. நாயின் வாயில் எப்படி ஒருவனால் இவ்வளவு நேர்த்தியாக அம்பைக்கொண்டு தைத்திருக்க முடியும் என்று அவர்கள் அதிசயக்கின்றனர். அந்த நாயை பின்தொடர்ந்து ஏகலைவன் இருப்பிடத்தை அவர்கள் அறிகின்றனர்.
அர்ஜுனனின் பொறாமை (The Jealousy of Arjuna) :
அவனிடம் நீ யார்? என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு ஏகலைவன் நான் துரோணரின் சீடன் என்கிறான். இவனை விட சிறந்த வில்லாளன் அகிலத்தில் இருக்க முடியாது என்ற எண்ணத்தோடு அனைவரும் அங்கிருந்து மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு வந்து, நடந்ததைப் பற்றி துரோணரிடம் கூறுகின்றனர். அனைவரும் சென்ற உடன் அர்ஜுனன் மட்டும் தன் குருவின் முன் நின்று என்னை நீங்கள் அகிலத்தில் சிறந்த வில்லனாக மாற்றுவேன் என்று கூறினீர்கள். ஆனால் இப்போது உங்கள் சீடர்களில் ஒருவன் என்னைக் காட்டிலும் சிறந்தவராக இருப்பது எப்படி? என்று கேட்கிறான். இதைக் கேட்டு வியந்த துரோணர் உடனே அர்ஜுனனை அழைத்துக்கொண்டு ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு விரைந்து செல்கிறார்.
துரோணரை பார்த்த உடனே ஏகலைவன் மகிழ்ச்சி அடைந்து அவர் பாதம் பணிகிறான். என்னைத்தான் உன் குருவாக நீ ஏற்றாயா என்று துரோணர் கேட்கிறார். ஏகலைவன் அதற்கு ஆம் குருவே என்கிறான். அப்படியாயின் அதற்கு நிச்சயம் எனக்கு குருதட்சனை வேண்டும் என்கிறார் துரோணர். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் குருவே! நான் தருகிறேன்! என்றான் ஏகலைவன். உடனே ஏகலைவனின் வலது கை கட்டை விரலை கேட்கிறார் துரோணர். மலர்ந்த முகத்தோடு ஏகலைவன் தனது கட்டை விரலை வெட்டி துரோணரிடம் கொடுக்கிறான். அதன் பிறகு அவன் வில்லை பிரயோகிக்க முயல்கிறான்ஆனால் முன்பு போல் அவரால் பிரயோகிக்க முடியவில்லை.
துரோணருக்கு உதவிய அர்ஜுனன் (Arjuna helped Drona) :
அதைக் கண்டவுடன் அர்ஜுனனின் பொறாமை அவனை விட்டு நீங்குகிறது. அதோடு துரோணர் அர்ஜுனனுக்கு அளித்த வாக்குறுதி மெய்யானது போல் இருவரும் உணர்கின்றனர். இந்த நிலையில் ஒரு சமயம் துரோணர் தனது சீடர்களோடு ஆற்றைக் கடக்க முற்படுகிறார். அப்போது அவர் அந்த ஆற்றிலிருந்த ஒரு முதலையின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். அந்த முதலையிடமிருந்து தப்பிக்கும் திறன் அவரிடம் இருந்தாலும், தனது சீடர்களிடம் தன்னைக் காப்பாற்றுமாறு பெருங்கூச்சலிடுகிறார். இதைக் கண்டு அனைவரும் வியப்பாய் பார்த்துக் கொண்டு அப்படியே நிற்கின்றனர்.
ஆனால் அர்ஜுனன் மட்டும் தனது வில்லை எடுத்து கணையைத் தொடுத்து அந்த முதலையின் உடலை இரண்டாக கிழித்து தனது குருவை காப்பாற்றுகிறான். இதனால் துரோணர் அர்ஜூனனின் சமயோஜித புத்தியைக் கண்டு வியக்கிறார். இப்படி அங்கு அர்ஜுனன் பல சாகசங்களை புரிகிறான். துரோணரிடம் கல்வி கற்றவர்களில் துரியனும் பீமனும் கடாயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர்களாக இருக்கின்றனர். யுதிர்ஷ்டன் தேர் போரில் சிறந்தவனாக இருக்கிறான். நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் வால் போரில் சிறந்து விளங்குகின்றனர். அஸ்வத்தாமன் மந்திர ஆயுதங்களில் சிறந்தவனாக இருக்கிறான்.
பிரம்மாஸ்திர பிரயோகம் (Brahmastra Practice) :
ஆனால் இவர்களைக் காட்டிலும் அனைத்திலும் சிறந்து விளங்கினான் அர்ஜுனன். இதனால் கௌரவர்கள் அவன் மீது பெரும் பொறாமை கொள்கின்றனர். அனைவருக்கும் பொதுவாக கற்பிக்கப்பட வேண்டிய அனைத்தையும் கற்பித்த துரோணர், அனைவருக்கும் பலவிதமான போட்டிகளை வைக்கிறார். அதில் அனைத்திலும் அர்ஜுனன் முதன்மையானவனாகத் திகழ்கிறான். பிறகு அர்ஜுனனை அழைத்த துரோணர், அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை ஏவவும், திரும்பப் பெறவும் கற்றுக்கொடுக்கிறார். அதன் பிறகு அந்த பிரம்மாஸ்திரத்தை எப்போதும் மனித எதிரியின் மீது பயன்படுத்தக்கூடாது என்றும், தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது ஏவப்படக்கூடாது என்றும் உலகையே அழிக்கும் சக்தி அந்த அஸ்திரத்திற்கு உண்டு என்று கூறி அதை பத்திரமாக வைத்துக்கொள்ள சொல்கிறார்.
அதோடு அந்த அஸ்திரத்தை மனிதனல்லாத எதிரியோடு போர்புரியும் சமயத்தில் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். சக்தி வாய்ந்த அந்த அஸ்திரத்தை தன் குரு துரோணரிடமிருந்து இருந்து அர்ஜுனன் பெறுகிறான். அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த இளவரசர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு திரும்பும் நாள் வருகிறது. அப்போது அவர்கள் தங்களின் திறமையை அந்த நாட்டு மக்களின் முன்பும், ஆன்றோர்கள் முன்பும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு மிகப் பெரிய மைதானம் அமைக்கப்படுகிறது.
பாண்டவர்கள் இப்படி வளர்ந்து நிற்கும் சமயத்தில், சூரிய புத்திரனான கர்ணனும் வளர்ந்து நிற்கிறான். அவன் இது வரை என்ன செய்து கொண்டிருந்தான்? எப்படி யாரிடம் கலைகளை கற்றான்? அவன் பெற்ற சாபம் என்ன? இப்படி பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.