காட்டில் பீமனுடன் சண்டையிட்ட இடும்பன் | Bhima's fight with Hidimba in Mahabharata | Mahabharata Episode 15

காட்டில் பீமனுடன் சண்டையிட்ட இடும்பன் 

      (Bhima's Fight with Hidimba in Mahabharata)

            கடந்த பாகத்தில் ராட்சசியான இடும்பி பீமன் மேல் காதல்  (Hidimbi's Love with Bhima in Mahabharata) கொண்டதைப் பற்றிப் பார்த்தோம். தற்போது பீமனுக்கும், இடும்பனுக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதம் எவ்வாறு சண்டையாக மாறியது என்பது பற்றி பார்ப்போம். 

இடும்பியின் எச்சரிக்கை (Hidimbi's warning) :

            இடும்பி காட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் திரும்பாததால் இடும்பியின் அண்ணனான இடும்பன் பாண்டவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான். இதை உணர்ந்த இடும்பி பீமனிடம் நாம் அனைவரும் இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்! உங்கள் அனைவரையும் கொல்வதற்காக எனது தமையன் இடும்பன் இங்கு விரைந்து வந்து கொண்டிருக்கிறான்! ஆகையால் உங்களது சகோதரர்களையும், தாயையும் உடனே எழுப்புங்கள்! நான் நினைத்த இடத்திற்கு செல்லும் சக்தி பெற்றவள்! உங்கள் அனைவரையும் நான் வேறு எங்காவது கொண்டு செல்கிறேன்! நீங்கள் அனைவரும் என் மீது அமர்ந்து கொள்ளுங்கள்! என்றாள் இடும்பி. 

            இதைக் கேட்டு சிரித்த பீமன் என்னை மீறி உன் தமையனால் எங்கள் நிழலைக் கூட தொட முடியாது! வைரம் பாய்ந்த எனது உடல் சக்தியற்றது என்று எண்ணினாயோ? அதோடு, ஒட்டுமொத்த ராட்சச கூட்டமே வந்தாலும் அவர்களை எதிர்க்கும் சக்தி என் கரங்களில் உள்ளது! என் சக்தியின் மீது நம்பிக்கை இல்லாததாலேயே நீ இப்படி பிதற்றுகிறாய் ! என்றான் பீமன். என் அன்பிற்குரியவரே, உங்கள் மீதும் உங்கள் பலம் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் எனது அண்ணனைப் பற்றி உங்களுக்கு தெரியாது. அவன் பல மனிதர்களை எப்படி கொடூரமாக கொன்றுள்ளான் என்பதை நான் எனது இரு கண்களாலும் கண்டுள்ளேன். நீங்கள் எவ்வளவு சக்தி பொருந்திய மாவீரனாக  இருந்தாலும், நீங்கள் சண்டையிட நினைப்பது ஒரு சாதாரண மனிதனோடு அல்ல! ஒரு மிகக் கொடிய ஒரு ராட்சசனோடு! அதனாலேயே நான் உங்களிடம் வேண்டுகிறேன், தயவுசெய்து இங்கிருந்து சென்று விடலாம் வாருங்கள் என்கிறாள் இடும்பி. 

இடும்பனின் கோபம் (Hidimban's anger) :

            இவர்கள் பேசிய அனைத்தையும் கவனித்தவாரே இடும்பன் அங்கு விரைந்து வந்தான். தனது தங்கை ஒரு சாதாரண மானுடப் பெண்ணைப் போல உருவம் மாறி, தலையில் பூச்சூடி தங்க நகைகள் அணிந்து கொண்டு ஒரு ஆண் மகனின் மனதைக் கவரும் நோக்கத்தில் இருப்பதைக் கண்ட இடும்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் தன்னுடைய தங்கையைப் பார்த்து ராட்சச இனத்தின் பெருமையையே சீர்குலைக்கும் எண்ணம் உன் மனத்தில் எப்படி தோன்றியது? உன்னைக் காண்பதற்கு எனக்கு அருவருப்பாக உள்ளது! முதலில் உன்னைக் கொன்று விட்டு அதன் பிறகு நீ எவனை மணக்க நினைக்கிறாயோ அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் கொல்கிறேன் என்று கூறிக்கொண்டே, தனது பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு இடும்பியை நோக்கி வருகிறான் இடும்பன். 

            இதைக் கண்ட பீமன் நில்! என்று கூறுகிறான். பாவம் செய்தவன் நீ! ஆனால் அவளோ ஒரு பாவமும் அறியாதவள். அதோடு ஒரு பெண் ஒரு அழகிய ஆண்மகனை கண்டால் காதல் வயப்படுவது இயற்கை. இதில் அவள் மீது எந்த தவறும் இல்லை! உன் வீரத்தை ஒரு பெண்ணிடம் காட்ட நினைக்கிறாயே! நீ என்ன கோழையா? உன்னை நான் இன்று நிச்சயம் கொன்று இந்தக் காட்டில் உள்ள விலங்குகளுக்கு உனது உடலை இரையாக்குவேன்.  இந்தக் காட்டில் நர மாமிசம் உண்ணும் உன்னை அழித்து, இனி இந்தக் காட்டை மனிதர்கள் நடமாடுவதற்கு ஏதுவாக மாற்றுவேன்! உன்னிடம் துளி அளவேனும் துணிச்சல் இருந்தால், என்னோடு நேருக்கு நேர் நின்று மோதி என்னை வென்ற பிறகு உன் வீரத்தை உன் தங்கையிடம் காட்டு! என்றான் பீமன். 

பீமனை தாக்கும் இடும்பன் (Bhima vs hidimba) :

            உடனே இடும்பன், வீண் வார்த்தைகளில் உன் வீரத்தை காட்டாமல் என்னோடு வந்து மோதி உனது உண்மையான பலம் என்ன என்பதை நீ தெரிந்து கொள்! உனது பலத்தின் மீது உண்மையில் உனக்கு நம்பிக்கை உண்டெனில், நீ நிச்சயமாக என் பலத்தைப் பற்றி துளியும் அறிய வாய்ப்பில்லை! உன்னை முதலில் கொன்றுவிட்டு, அதன்பிறகு உன்னோடு வந்தவர்களையும், எனது தங்கையையும் கொல்கிறேன் என்று கூறிக்கொண்டே பெரும் பலத்தோடு பீமனை தாக்க முற்பட்டான் இடும்பன் அவனை தனது கரங்கள் கொண்டு தடுத்த பீமன், இங்கு சண்டையிட்டால் தனது தாய் மற்றும் சகோதரர்களின் உறக்கம் களைந்து விடும் என்று எண்ணி அவனை ஒரே உதை உதைத்து கீழே தள்ளி தரதரவென இழுத்துக் கொண்டு வேறு இடத்திற்கு ஓடினான். அதன்பிறகு தரையிலிருந்து எழுந்து நின்ற  இடும்பன் அவனை இறுக்கி கட்டி அவனது கழுத்தை முறுக்கினான். ஆனால் பீமன், அவனை தன் கரம் கொண்டு முதுகில் வலுவாகத் தாக்கி மீண்டும் கீழே சாய்த்தான். 

தூக்கத்திலிருந்து விழித்த பாண்டவர்கள் :

            இந்தச் சண்டையானது மதம் பிடித்த யானைகள் மோதிக் கொள்வதைப் போல மிகவும் பயங்கரமாக இருந்தது. இந்தச் சண்டையால் உருவான சத்தமானது அந்த கானகத்தையே அதிரச் செய்தது. இந்த நிலையில் அங்கு எழுந்த சத்தம் கேட்டு குந்தியும், பீமனின் சகோதரர்களும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர். அவர்கள் எழுந்தவுடன் அவர்களுக்கு எதிரே இடும்பி நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்ட குந்தி, அழகில் சிறந்த பெண்ணே! யார் நீ? தேவலோக மங்கை போல உள்ளாயே! உண்மையில் நீ யார்? இங்கு ஏன் நிற்கிறாய்? என்று கேட்டாள்.

             இடும்பி தன்னைப் பற்றிய முழு விவரத்தையும், தனக்கு பீமன் மீது ஏற்பட்ட காதல் பற்றியும் , பீமனுக்கும், இடும்பனுக்கும் நடந்து கொண்டிருக்கும் சண்டை பற்றியும் கூறினாள். உடனே அனைவரும் அந்த சண்டையை காணத் துவங்கினர். அவர்களின் சண்டையால் அந்தக் காடு முழுவதும் புழுதிப் புயல் வீசியது. ஒரு கட்டத்தில் அந்த ராட்சசன் கை ஓங்கியது. நிலை தடுமாறினான். 

இடும்பனை கொல்லும் பீமன் (Bhima kills Hidimban) :

            இதைக் கண்ட அர்ஜுனன், பீமன் அண்ணா நீங்கள் களைப்பாக உள்ளீர்கள். ஆகையால் சற்றுநேரம் ஒதுங்கி அந்த ராட்சசனை கொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்! நான் அவனை கொல்கிறேன் என்றான். இதைக் கேட்ட பீமன் அஞ்சாதே அர்ஜுனா! ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார். இவனை நான் என் கரங்களால் வீழ்த்திக் காட்டுகிறேன் . இவனுக்காக ஏன் உன்  அஸ்திரங்களை  வீணடிக்க எண்ணுகிறாய்? என்று கூறியவாரே அந்த அரக்கனுடன் கடுமையாக சண்டையிட்டான் பீமன். அவர்கள் இருவருக்கும் இடையேயான யுத்தமானது பொழுது விடியும் வரை தொடர்ந்தது. உடனே அர்ஜுனன், பீமன் அண்ணா அந்த அரக்கனை கொல்ல நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்? பொழுது விடியப்போகிறது! 

            பொழுது விடிந்தால் அவனது பலம் கூடும்! அதன் பிறகு அவனைக் கொல்வது கடினமாகி விடும்! ஆகையால் இப்பொழுதே அவனைக் கொன்று விடுங்கள்! என்றான். இதைக் கேட்ட பீமன் தன் முழு பலத்துடன், அந்த ராட்சசனை தன்னுடைய பலம் கொண்டு தாக்கினான். பீமனின் அதிரடி தாக்குதல்களை இடும்பனால் சமாளிக்க இயலவில்லை. இறுதியாக அந்த ராட்சசனை தூக்கி , அவனது உடலை மடக்கி நெஞ்சை இரண்டாகப் பிளந்து, அவனைக் கொன்றான் பீமன். அந்த சமயத்தில் அந்த ராட்சசன் எழுப்பிய சத்தமானது, அந்த கானகத்தையே  அதிர வைத்தது. இதைக் கண்ட அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

பாண்டவர்களை பின்தொடர்ந்த இடும்பி :

            அதன் பிறகு அந்த கானகத்திற்கு அருகே ஒரு நகரம் இருப்பதாக உணர்வதாய் கூறுகிறான் சகாதேவன். சகாதேவன் கூறினால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்பதை நன்கு அறிந்த அவர்கள் அனைவரும், அந்த நகரம் இருக்கும் திசை நோக்கி விரைந்தனர். ராட்சசியான இடும்பியும் அவர்களைப் பின்தொடர்ந்தாள். இடும்பி பின் தொடர்வதைக் கண்ட பீமன், ராட்சசர்கள் எப்போதும் பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்கள்! இவளும் தனது சகோதரனின் இறப்பிற்குக் காரணமான என்னைப் பழி வாங்கவே நம்மைப் பின் தொடர்கிறாள்! என்று தனது சகோதரர்களுடன் கூறிக்கொண்டே இடும்பி வரும் திசை நோக்கி திரும்பி, நீ எங்களை பின் தொடர்வதை விடுத்து உடனே இங்கிருந்து சென்றுவிடு! இல்லையேல் உன் சகோதரனுக்கு ஏற்பட்ட கதி தான் உனக்கும்! என்று கூறிவிட்டு மீண்டும் நடக்கத் துவங்கினான் பீமன். ஆனால் மீண்டும் இடும்பி அவர்களைப் பின்தொடர்ந்தாள். அதைக்கண்டு அவளைக் கொல்ல தீர்மானித்தான் பீமன். உடனே அவனைத் தடுத்த யுதிர்ஷ்டன் பலம் வாய்ந்த ஆண்மகன் ஒரு பெண்ணைக் கொல்வது என்பது எந்த விதத்திலும் தர்மமாகாது! உன் பலத்தை இவள் நன்கு அறிவாள்! ஆகையால் அவள் நினைத்தாலும் உன்னை அவளால் கொல்ல முடியாது என்றான்.

இடும்பியின் காதலை உணர்ந்த பாண்டவர்கள் :

            இதை கேட்ட இடும்பியின் கண்களில் கண்ணீர் ததும்ப, குந்தியிடமும், தர்மனிடமும் தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தாள். பீமன் மீது தான் கொண்ட அன்பு புனிதமானது என்றும், அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை இனி அவளால் வாழ இயலாது என்றும், அவன் தனக்கு கிடைக்கவில்லை என்றால் இப்போதே தான் மாண்டு விடுவேன் என்றும் அவள் கூறினாள். அதோடு குந்தியிடம், நீங்கள் என் நிலையை பீமனிடம் எடுத்துரைத்தால், நிச்சயம் அவர் என்னை மணப்பார். அவர் என்னை மணந்த பிறகு நீங்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் உங்கள் முன்பு வந்து நிற்பேன்!

             அதோடு நான் எந்தவொரு இடத்திற்கு வேண்டுமானாலும் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டவள்! ஆகையால் நீங்கள் அனைவரும் எங்கு செல்ல வேண்டும் என்று அழைத்தாலும் உங்கள் அனைவரையும் நான் அங்கு கொண்டு சேர்ப்பேன்! இது உங்களுக்கு நான் அளிக்கும் வாக்காகும் என்றாள். அனைத்தையும் கேட்ட யுதிஷ்டிரன், இடும்பி, பீமன் மீது வைத்திருந்த உண்மையான அன்பை உணர்கிறான். உடனே யுதிஷ்டிரன் தன் தாயோடும், சகோதரர்களோடும் கலந்து பேசி பீமனை அவளுக்கு மணமுடித்துத் தர முடிவு செய்து அந்த முடிவை இடும்பியிடம் கூறினான். 

இடும்பியுடன் பீமனுக்கு நடந்த திருமணம் (Bhima weds Hidimbi):

            அதோடு அந்த திருமணத்தில் ஒரு நிபந்தனையையும் அவன் விதித்தான். அதன்படி காலை நேரங்களில் பீமன் உன்னோடு இருப்பான். ஆனால் மாலை வந்ததும் அவன் எங்களோடு வந்து விட வேண்டும்! இதுவே என் நிபந்தனை என்றான் தர்மன். அதை இடும்பியும் ஏற்றுக் கொண்டாள். அதன் பிறகு பீமனும் ஒரு நிபந்தனை விதித்தான். அதன்படி நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும் வரை மட்டுமே உன்னோடு நான் வாழ்வேன்! அதன் பிறகு உன்னை விட்டு நான் பிரிவேன்! என்றான். பீமன் மேல் கொண்ட தீராத அன்பு காரணமாக அவள் அனைத்து நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டாள். 

            அதன் பிறகு பீமனை அவள் தனது முதுகில் சுமந்து கொண்டு, தான் விரும்பிய இடத்திற்கெல்லாம் அவனை அழைத்துச் சென்று அவனோடு கூடி மகிழ்ந்தாள். மனிதர்கள் புக முடியாத காடுகள், குகைகள், மலர்கள் மற்றும் பழம் நிறைந்த பகுதிகள் என பல பகுதிகளுக்கு அவர்கள் இருவரும் சென்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். பகல் முழுவதும் பீமனுக்காக அவள் தனது உண்மையான உருவத்தை அழகிய பெண் போல் மாற்றி ஒரு அழகிய பெண் வடிவம் கொண்டு அவனோடு மகிழ்ந்திருந்தாள். இந்த நிலையில் இடும்பி கர்ப்பம் தரித்தாள். அதன் பிறகு என்ன ஆனது? அவர்கள் இருவருக்கும் எது போன்ற மகன் பிறந்தான்? பீமன் அவர்களை பிரிந்தானா? போன்ற பல தகவல்களை அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம். 

Post a Comment

Previous Post Next Post