பீமனுக்கு பிறந்த அசுர குழந்தை கடோட்கஜன்
(Birth of Ghatotkacha in Mahabharata)
இடும்பனோடு சண்டையிட்டு பீமன் இடும்பனை கொன்றது பற்றியும் (Bhima's fight with Hidimba in Mahabharata) அதன் பிறகு இடும்பியுடன் பீமன் கூடியதால் இடும்பி கருத்தரித்தது பற்றியும் முந்தய பதிவில் பார்த்தோம். தற்போது அவர்களுக்கு பிறந்த குழந்தை பற்றி பார்ப்போம்.
பீமனுக்கு பிறந்த அசுர குழந்தை கடோட்கஜன் (Birth of Ghatotkacha):
பீமனால் இடும்பி கருத்தரித்தது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அதன்பிறகு சில நாட்களில் அவள் அதி பயங்கர சக்தி வாய்ந்த ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். சக்தி வாய்ந்த மனிதனான பீமனுக்கும், அரக்கிக்கும் பிறந்ததால் அவன் மற்றவர்களைக் காட்டிலும் பன்மடங்கு சக்தியோடு விளங்கினான். அவன் பிறந்த சில மணி நேரங்களிலேயே ஒரு இளைஞனுக்குரிய வளர்ச்சியைப் பெற்றான். அவனைப் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தான். அவனது கண்கள் சிவந்தும், பற்கள் கூர்மையாகவும், யானையின் துதிக்கையை ஒத்த கரங்களையும், வலிமைமிக்க கால்களையும், மலை போன்ற உறுதியான நெஞ்சையும் பெற்றிருந்தான்.
அவன் பிறந்த உடன் உரும்பிய சத்தம் அந்த கானகத்தையே அதிரச் செய்தது. அந்த அளவிற்கு அவன் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவன் பிறந்த சில நாட்களிலேயே பல அரிய கலைகளில் நிபுணத்துவம் பெற்று விளங்கினான். அவன் தன் தாயைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த உருவைப் பெறும் சக்தியைப் பெற்றிருந்தான். அவன் பிறக்கும் சமயத்தில் அவனது தலை பானை போலிருந்ததால் அவனுக்கு கடோட்கஜன் என்று அவன் தாய் பெயரிட்டாள். கடோட்கஜன் என்றால் பானைத்தலையன் என்று ஒரு பொருள் உண்டு. கடோட்கஜன் பிறந்த பிறகு பாண்டவர்கள் ஐவரும் அவனோடு கொஞ்சி விளையாடத் துவங்கினர்.
பீமனுக்கு கடோட்கஜன் அளித்த வாக்குறுதி (Ghatotkacha Promise to Bhima):
அதன் பிறகு சில காலத்தில் பீமன் அவர்களை விட்டுப் பிரியும் நேரம் வந்தது. அப்போது கடோத்கஜன், தந்தையே என்னுடைய உதவி உங்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் உடனே என்னை அழையுங்கள்! நான் எங்கிருந்தாலும் உங்கள் முன்பு வந்து நிற்பேன்! என்று வாக்களித்தான். அதன்பிறகு பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பல காடுகளை கடந்து அவர்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர். காடுகளில் கிடைக்கும் உணவுகளை அவர்கள் உண்டு வாழ்ந்தனர். அதோடு காட்டுவாசிகளை போல உடை தரித்திருந்தனர். குந்தியும் ஒரு துறவியைப் போல ஆடை உடுத்தி இருந்தாள். அவர்களின் இந்தப் பயணத்தில் மார்க்கசியம், திரிகார்த்தம், பாஞ்சாலம், சீக்கசம் ஆகிய நாடுகளையும் அவற்றிலிருந்த கானகங்களையும் கண்டனர். மனிதர்களின் கண்களில் பட்டு விடக்கூடாதே என்பதற்காக, அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
வியாசரை சந்தித்த பாண்டவர்கள் :
இந்த நிலையில் அவர்கள் தங்கள் பாட்டனான வியாசரை வழியில் கண்டு, அவரிடம் ஆசி பெற்றனர். அவர்களின் நிலையை கண்டு கொண்ட வியாசர், இந்த நிலை உங்களுக்கு நிச்சயம் மாறும்! யுதிர்ஷ்டன் இந்த பூமி போற்றும் அரசனாக நிச்சயம் ஒருநாள் வருவான்! என்றார். அதோடு தான் ஒரு நகரத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லப் போவதாகவும், தாங்கள் அனைவரும் அங்கு சிலகாலம் மாறுவேடத்தில் தங்கிக் கொள்ளலாம் எனவும், அங்கு அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் கூறினார். பாண்டவர்களும், குந்தியும் அதற்கு சம்மதித்தனர். அதன்படி அவர்கள் அனைவரையும் ஏகசக்ர நகரத்துக்கு அழைத்துச் சென்றார் வியாசர். அங்கு அவர்கள் அனைவரையும் ஒரு அந்தணரிடம் அறிமுகப்படுத்தி, அங்கு மாறுவேடத்தில் தங்கிக் கொள்ளுமாறும், தான் மீண்டும் வரும் வரை அங்கேயே இருக்கும் படியும் கூறிவிட்டுச் சென்றார்.
பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த பாண்டவர்கள் :
ஏகசக்ர நகரத்தில் அந்தணரின் வீட்டில் தங்கிய அவர்கள், நாடு முழுவதும் திரிந்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அனைவரும் பகல் முழுவதும் பிச்சை எடுத்து அதைக்கொண்டு வந்து இரவில் குந்தியிடம் கொடுத்தனர். அவர்கள் பிச்சை எடுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்த குந்தி, அதை இரண்டு பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை பீமனுக்கு கொடுத்து விட்டு இன்னொரு பங்கை மற்ற அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். ஒருநாள் பாண்டவர்கள் நால்வரும் பிச்சை எடுக்கச் சென்றனர். பீமனும் குந்தியும் மட்டும் வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது அந்த வீட்டில் அந்தணனும் அவரது மனைவியும் கத்தி அழும் சத்தம் கேட்டது. அந்த சத்தமானது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் உடனே குந்தி அவர்கள் இருக்குமிடம் நோக்கிச் சென்றாள்.
அப்போது அந்த அந்தணர் தனது மனைவியிடம் நான் உங்களை விட்டுப் பிரிந்து இறந்து போகும் காலம் வந்தது. நீ நமது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்! என்றான். உடனே அவனது மனைவி நீங்கள் எதற்காக இறக்க வேண்டும்? நீங்கள் இறந்தால் நமது பிள்ளைகளை நான் தனியாக எப்படி வளர்க்க இயலும்? தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு எத்தகைய துன்பங்கள் வரும் என்பதை தாம் நன்கு அறிவீர்! ஆகையால் நான் இறந்து போகிறேன் என்றாள். உடனே அவர்களது சிறுபிள்ளைகள் தந்தையே! தாயே! நீங்கள் இருவரும் இறக்க வேண்டாம்! நான் அந்த அசுரனிடம் சென்று போரிட்டு அவனை இந்த புல்லுக்கட்டால் அடித்துக் கொல்வேன்! என்றான். மழலையின் இந்தப் பேச்சை கேட்டு அவர்கள் அந்த அழுகையிலும் சிரித்தனர்.
நரமாமிசம் உண்ணும் ராட்சசன் :
இதுதான் தக்க சமயம் என்று நினைத்த குந்தி, அவர்களிடம் சென்று உங்களுடைய பிரச்சனை என்ன? எதற்காக அனைவரும் இப்படி மாறி மாறி இறப்பைப் பற்றி பேசுகிறார்கள்? என்றாள்! உடனே அந்த அந்தணன், எங்கள் வீதி அப்படி தாயே! இந்த ஊரில் பகன் என்ற ஒரு ராட்சசன் இருக்கிறான். இந்த ஊரில் அவன் வைத்ததே சட்டம்! அவன் நர மாமிசம் உண்பதை வழக்கமாகக் கொள்பவன். அவன் தனது வலிமையால் இங்குள்ள மக்களுக்கு எதிரிகளால் எந்த தீங்கும் நேராமல் காக்கிறான். அதற்குக் கூலியாக அவனுக்கு வண்டி சோறும், இரண்டு எருமை மாடுகளும், இவற்றைக் கொண்டு செல்ல ஒரு மனிதனையும் நாங்கள் அவனுக்கு அனுப்ப வேண்டும்! என்பது நாங்கள் அவனிடம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு உடன்படிக்கையாகும்.
அதன்படி தினமும் ஒரு குடும்பம் இந்தப் பணியை செய்ய வேண்டும். நாளை எனது முறை வந்துள்ளது. எங்கள் அனைவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆகையால் நாங்கள் அனைவரும் அவரிடம் சென்று, எங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டின் மன்னன் மட்டும் திறமையானவராகவும், தைரியமானவனாகவும் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது! என்று அவர்கள் அனைவரும் அழுதனர். அனைவரும் கவலைப்படாதீர்கள்! உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்! என்று அந்த அந்தணரிடம் கூறினாள் குந்தி. உங்களுக்கோ இரு பிள்ளைகள்! ஆனால் அவர்கள் இருவரும் சிறு வயது உடையவர்கள். ஆனால் எனக்கு அப்படி கிடையாது! எனக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை நான் நாளை உணவு கொண்டு செல்ல சொல்கிறேன் என்றாள். இதைக் கேட்ட அந்த அந்தணன் துடித்துப் போனான்.
குந்தியிடம் அந்தணர் அளித்த வாக்கு :
நான் இதற்கு நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டேன்! நான் சென்று அந்த ராட்சசனுக்கு உணவானால் அதனால் எனக்கு எந்த பாவமும் நேராது! ஆனால் நான் எனக்கு பதிலாக உங்கள் பிள்ளையை அனுப்புவது என்பது கொலைக்குச் சமமாகும். அதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேரும். இதனை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது! என்றான். உடனே குந்தி நீங்கள் பயப்படவேண்டாம்! எனது மகன்கள் அனைவரும் மந்திரசக்தி பெற்றவர்கள். அவர்கள் என் கண்முன்னே பல அசுரர்களை கொன்றுள்ளனர். ஆகையால் எனது பிள்ளைகளில் ஒருவனை அனுப்பினால், அவன் நிச்சயம் அந்த அசுரனை கொள்வேனே தவிர மாண்டு போக மாட்டான்! ஆனால் இந்த ரகசியத்தை நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது!
எனது பிள்ளைகளுக்கு இப்படி ஒரு மந்திர சக்தி இருப்பதை எவரேனும் அறிந்தால், அவர்களால் என் பிள்ளைகளுக்கு தொல்லை ஏற்படும்! அந்த மந்திரத்தை தங்களுக்கும் கற்றுத் தரும்படி அனைவரும் என் பிள்ளைகளை தொல்லை செய்வர்! ஆனால் அப்படி அந்த மந்திரத்தை அவர்கள் எவருக்கேனும் கற்றுக்கொடுத்தால் பிறகு அந்த மந்திரம் அவர்களுக்குப் பயனளிக்காமல் போகும்! என்று அவர்களின் குரு அவர்களிடம் கூறியுள்ளார். என்றாள் குந்தி. இதைக் கேட்ட அந்த அந்தணனும், அவரது குடும்பத்தாரும் அதைத் தாங்கள் யாரிடமும் கூற மாட்டோம்! என்று கூறினார்கள்.
குந்தியிடம் கோபித்துக் கொண்ட யுதிர்ஷ்டன் (Yudhisthira angry with Kunti) :
பிறகு அவர்கள் அனைவரும் பீமனிடம் சென்று நடந்ததைக் கூறினர். பீமனும் அந்த அரக்கனுக்கு உணவு எடுத்துக் கொண்டு செல்ல ஒப்புக் கொண்டான். இந்த நிலையில் அன்றைய இரவு வந்தது. அனைவரும் பிச்சை பெற்று வீடு திரும்பினர். அப்போது பீமனின் முகத்தைக் கவனித்த யுதிஷ்டிரன், அவன் ஏதோ செய்யக் காத்திருக்கிறான் என்பதை உணர்ந்து, அவரிடமே அதுகுறித்து வினவினான். பீமனும் அனைத்தையும் யுதிஷ்டிரனிடம் கூறினான். அதைக் கேட்டு அதிர்ந்து போன யுதிஷ்டிரன், தன் தாயை தனிமையில் அழைத்து அவளிடம் கோபித்துக் கொண்டான். பீமனை எப்படி நீங்கள் ஒரு அரக்கனோடு போரிடத் தனியாக அனுப்பலாம்? அவனுக்கு ஒருவேளை ஏதேனும் நேர்ந்தால் என்ன ஆவது? அவன் இல்லையேல் நம்மால் ஒரு இரவு கூட இங்கு நிம்மதியாக உறங்க முடியாது! அதோடு துரியோதனனையும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது! என்றான்.
குந்தியின் நல்லெண்ணம் (The goodwill of Kunti):
அதைக் கேட்ட குந்தி, பீமனின் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது! அவன் கரங்களில் உள்ள ஆயிரம் யானை பலத்தைக் கொண்டு அந்த அசுரனை அவன் நிச்சயம் அழிப்பான்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு யானை பலம் பொருந்தியவர்கள்! ஆனால் உங்கள் நால்வரையும் அவன் மிக எளிதாக வாரணாவதத்திலிருந்து சுமந்து வந்தான்! அதோடு அவன் இடும்பனோடு சண்டையிட்ட காட்சியையும் நான் நேரில் கண்டவள்! அதை வைத்தே கூறுகிறேன் நிச்சயம் அந்த அசுரனை வெல்வான்! அதோடு அந்த அந்தணர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், நமக்கு இன்று வரை தங்க இடம் கொடுத்து உதவி வருகிறார். அவருக்கு நாம் உதவ இதுவே தக்க தருணம்! என்றாள் குந்தி.
என்னை மன்னியுங்கள் தாயே! உங்களது நல்லெண்ணத்தையும் நம்பிக்கையும் புரிந்து கொள்ளாமல் உங்கள் மீது நான் கோபித்துக் கொண்டேன்! ஆனால் தாயே பீமன் அந்த அசுரனை வென்ற பிறகு, பீமனைப் பற்றி அந்த அந்தணர் யாரிடமும் சொல்லாமல் தனது சத்தியத்தை காக்குமாறு அவரிடம் மீண்டும் ஒரு முறை கூறுங்கள் என்றான். அன்றைய பொழுது விடிந்தது. பீமன் அந்த ராட்சசனுக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் எடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான். அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.