பீமனை காதலித்த இடும்பி | Hidimbi's Love with Bhima in Mahabharata | Mahabharatham Episode 14

  பீமனை காதலித்த இடும்பி

 (Hidimbi's Love with Bhima in Mahabharata)

            கடந்த பாகத்தில் பாண்டவர்களை கொல்ல கௌரவர்கள் உருவாக்கிய மாளிகையைப் (Burning Palace Built by Kauravas to kill the Pandavas in Mahabharatha) பற்றி பார்த்தோம். தற்போது பாண்டவர்கள் அந்த எரியும் மாளிகையிலிருந்து எவ்வாறு தப்பித்து செல்கின்றனர் என்பது குறித்து பார்ப்போம். 

மாளிகைக்கு தீ வைத்த பீமன் (Beaman set fire to the Palace):

             பாண்டவர்கள் வாரணாவதம் சென்றது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். வாரணாவதத்தில் மிகுந்த கவனத்தோடும், ஜாக்கிரதையோடும் ஒரு வருட காலத்தை பாண்டவர்கள் கழித்தனர். பாண்டவர்களை கொல்வதற்கான சரியான நேரத்திற்காக காத்திருந்தான் புரோசனன். இந்நிலையில் அந்த மாளிகையில் இருந்து வெளியேற சரியான நேரம் வந்துவிட்டதாக பாண்டவர்கள் எண்ணினர். பாண்டவர்களின் தாயான குந்தி அன்றிரவு ஊர் மக்கள் அனைவருக்கும் உணவை தானம் வழங்கினாள். ஏராளமான மக்கள் குந்தியிடம்  தானம் பெறுவதற்காக அங்கு திரண்டனர். 

            அதில் ஒரு வேடுவப் பெண்மணி தம் ஐந்து பிள்ளைகளோடு அங்கு வந்து இருந்தாள். அனைவரும் தானம் பெற்றுகொண்டு திரும்பினர். ஆனால் அந்தப் பெண்மணியும், அவரது மகள்களும் களைப்பால் அங்கேயே உறங்கினர். அவர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் அன்று இரவு பாண்டவர்களும், குந்தியும் தப்பிக்க தயாரானார்கள். அப்போது பீமன், அந்த மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த புரோசனன் அறைக்கு முதலில் தீ வைத்தான்.  

தப்பித்த பாண்டவர்கள் :

           பிறகு பாண்டவர்கள் அனைவரும் தன் தாயோடு சுரங்கப்பாதை வழியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். பாண்டவர்கள் தங்கியிருந்த மாளிகை தீப்பற்றி எரிவதைக் கண்ட பிரஜைகள், அந்தத் தீயை அணைக்க எவ்வளவோ முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களால் அதை அணைக்க முடியவில்லை. அந்த மாளிகையானது எளிதில் எரியக்கூடிய பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் திருதராஷ்டிரன் மீதும், அவன் மகன் துரியோதனன் மீதும் கடும் சினம் கொள்கின்றனர். மாளிகையை விட்டு வெளியேறிய பாண்டவர்களால் அதிவிரைவாக அந்த நகரத்தைத் தாண்டி முன்னேற முடியவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் மிகுந்த களைப்போடு இருந்தனர். இந்த நிலையில் அதிக பலம் பொருந்திய பீமன் தனது தாயையும், சகதோரர்களையும் தனது முதுகிலும், இடுப்பிலும், தோளிலும் சுமந்து கொண்டு அதிவேகமாக முன்னேறினான். ஒரு வழியாக அவர்கள் அனைவரும் யார் கண்ணிலும் படாமல் கங்கைக் கரையை அடைந்தனர். 

விதுரர் செய்த உதவி :

            அப்போது அந்த விதுரரால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய ஒருவன் படகோடு காத்திருந்தான். அவன் தான் விதுரர் மூலம் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்க சில குறியீடுகளை சொன்னான். அதன்பிறகு பாண்டவர்களும், குந்தியும் அந்த படகில் ஏறினர். படகோட்டியின் கர பலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றாலும் விரைவில் அப்படகானது கங்கையின் அக்கரைக்கு சென்றது. அங்கு அவர்கள் அனைவரையும் இறக்கி விட்டுவிட்டு அந்த மனிதன் மீண்டும் இக்கரைக்கு திரும்பினான். இவை அனைத்தும் அன்று இரவே நடந்தது. பொழுது விடிந்ததும் எரிந்து கிடந்த அந்த அரக்கு மாளிகையின் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. 

பாண்டவர்களின் இறப்பை உறுதி செய்த குழுவினர் :

            அனைவரும் பெரும் ஒப்பாரியை வைக்கத் தொடங்கினர். மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியின் மகன்களை இப்படி சூழ்ச்சி செய்து கொன்று விட்டானே என அனைவரும் புலம்பினர். அதோடு பீஷ்மர், விதுரர் உள்ளிட்ட பலர் தங்களது கடமையை சரியாக செய்திருந்தால் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்காது என்று மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இந்த நிலையில் அந்த மாளிகையில் சுரங்கம் அமைத்த கனகன் என்பவன் யாரும் அறியா வண்ணம் அந்த சுரங்கத்தில் சாம்பலை போட்டு மூடினான்.

             அதன்பிறகு மாளிகையில் உண்மையில் பாண்டவர்கள் மாண்டனரா? என்பதை சோதிக்க அங்கு சிலர் வந்தனர். மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த வேடுவ பெண்ணும் அவளது 5 மகன்களும் தீக்கிரையாகி இருந்தனர். அதோடு அந்த மாளிகையை அமைத்த புரோசனனும் இறந்து கிடந்தான். இதைக் கண்ட அவர்கள் அந்தப் பெண்ணைக் குந்தி என்று எண்ணினர். அதோடு அவளது 5 புத்திரர்களை, பாண்டவர்கள் என்று எண்ணினர். இதனால் பாண்டவர்கள் மாண்டனர் என்ற உறுதியான தகவல் அஸ்தினாபுரத்தை எட்டியது. 

கௌரவர்களின் மகிழ்ச்சி :

            இதைக் கேட்ட திருதராஷ்டிரன் மிகுந்த துயரம் கொண்டான். பாண்டவர்களுக்கும், குந்திக்கும் செய்ய வேண்டிய ஈமச் சடங்கினை முறையாக செய்ய ஆணையிட்டான். நாடே சோகத்தில் மூழ்கியது. பாண்டவர்கள் மீதும் குழந்தையின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருந்த மக்கள் அனைவரும் செய்வதறியாது தவித்தனர். அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உண்மையை அறிந்திருந்ததால் விதுரர் மட்டும் பெரும் சோகத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார். கௌரவர்களும், சகுனியும் பாண்டவர்கள் மாண்டதை எண்ணி மகிழ்ந்தனர். கர்ணனுக்கு இந்த சூழ்ச்சியில் விருப்பமில்லை என்றாலும், அவன் தனது வெறுப்பை வெளிப்படுத்தாமல் அவர்களோடு மகிழ்ச்சியாகவே இருந்தான். 

காட்டிற்கு செல்லும் பாண்டவர்கள் :

            இதற்கிடையில் கங்கையின் அக்கரையை அடைந்த பாண்டவர்களும், குந்தியும் ஒருவழியாக பெரும் சிரமப்பட்டு கானகத்தை அடைந்தனர். அவர்கள் அனைவரும் தங்களது பலத்தை இழந்தவர்களாக இருந்தனர். குந்தியால் நகரக் கூட முடியவில்லை. எந்த திசையில் எங்கு செல்வது என்று எதுவுமே அவர்களுக்கு புரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் பீமன் அவர்கள் அனைவரையும் சுமந்துகொண்டு அதி வேகமாக நடக்கத் துவங்கினான். அவன் அந்த கானகத்தில் நடப்பதற்கு இடையூறாக இருந்த அத்தனை மரங்களையும் ஒரே அடியில் சாய்த்துவிட்டு முன்னேறினான். கானகத்தில் இருந்த கிழங்குகளையும் பழங்களையும் சுவைத்தவாறே முன்னேறினான். அன்றைய நாள் முழுவதும் இப்படியே அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். 

            சூரியன் அஸ்தமித்து இருள் சூழத் தொடங்கியது. அந்த கானகத்தில் ஆந்தையின் அலறல் சத்தமும், இன்ன பிற உயிரினங்களின் சத்தமும் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் குந்திக்கு அதிகப்படியான தாகம் ஏற்பட்டது. அதை அவள் தன் புதல்வர்களிடம் கூறினாள். உடனே பீமன் அவர்கள் அனைவரையும் ஒரு ஆலமரத்தடியில் இறக்கி விட்டுவிட்டு, தாய்க்காக நீரைத் தேடிச் சென்றான். ஒரு குலத்தை கண்டறிந்து அதில் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு, தனது ஆடைகளை அந்த குளத்தில் நனைத்து அந்த நீரை அவன் கொண்டு வந்தான். அவன் வருவதற்குள் அனைவரும் அந்த ஆலமரத்தடியில் அசதியில் உறங்கி விட்டனர். அதனால் பீமன் மட்டும் விழித்துக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் காவலாய் இருந்தான். 

இடும்பனின் உத்தரவு (Hidimba's Order) :

               இந்த நிலையில் அந்தக் காட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராட்சசனான இடும்பன் அவர்கள் அனைவரையும் கண்டான். மனித மாமிசம் என்பது அவனுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இவர்கள் அனைவரையும் பார்த்தவுடன் அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது. கோரைப் பற்களோடும், சிவந்த கண்களோடும், பெருத்த வயிறோடும், வலிமை மிக்க தோல்களோடும், காண்பவரை அச்சமடைய செய்யும் தோற்றத்தோடும் அவன் இருந்தான். நீண்ட நாட்களாக பசியோடு இருந்த அவனுக்கு இவர்களின் வருகை மகிழ்ச்சி தந்தது. உடனே அவன் தனது தங்கை இடும்பியிடம் சென்று இது குறித்து கூறி அவர்கள் அனைவரும் யார் என்பதை அறிந்து அவர்களை கொன்று இங்கு கொண்டு வா! அந்த மனிதர்களின் சூடான ரத்தத்தை குடித்து அவர்களை நாம் உண்டு மகிழ்வோம்! என்றான். 

பீமனிடம் காதல் வயப்பட்ட இடும்பி (Hidimbi's Love) :

            இடும்பனின் ஆணையை ஏற்று அவர்கள் அனைவரையும் கொல்வதற்காக இடும்பி புறப்பட்டாள். அங்கு ஒரு வயதான பெண்ணும், நான்கு ஆண் மக்களும் உறங்கிக் கொண்டிருப்பதை அவள் கண்டாள். அதோடு மிகுந்த பலமும், அழகும் பொருந்திய பீமசேனன் அவர்கள் அனைவருக்கும் காவலாய் அங்கே அமர்ந்திருப்பதை அவள் கண்டாள். பீமனை கண்ட உடனே அவளை அறியாமல் அவன் மேல் காதல் கொண்டாள். இவ்வளவு அழகும், வளமும் பொருந்திய ஒரு ஆண்மகனை நாம் எப்படி கொல்ல முடியும்? அப்படி நாம் கொன்றாலும் இவனை நாம் சில நொடிகளில் சுவைத்து முடித்து விடுவோம். 

            ஆனால் இவனை நாம் திருமணம் செய்தால், நாம் பல காலம் இவனோடு மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவள் எண்ணினாள். அதனால் நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை எடுக்கும் சக்தி கொண்ட அவள், ஒரு அழகிய பெண்வடிவத்தை எடுத்து பீமனை நோக்கி விரைந்தாள். பீமனிடம் சென்ற அவள் அழகும் வலிமையும் பொருந்திய நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றாள். அதோடு தேவர்களை ஒத்த அழகு கொண்ட இவர்கள் இங்கு ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்றாள். இங்கு ஒரு கொடிய ராட்சசன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். உங்களை அவன் உணவாகக் கொள்ள எண்ணுகிறான் என்றாள். 

இடும்பியின் வேண்டுகோள்  (Hidimbi's Request) :

            உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே உங்கள் மீது காதல் வயப்பட்டேன். உங்கள் மீது உள்ள உண்மையான காதலால் கூறுகிறேன்! நான் அந்த ராட்சசனின் தங்கையாவேன்! உங்களை மணந்து இப்போதே உங்களோடு வாழ்க்கையைத் துவங்க எண்ணுகிறேன்! என்னோடு வருவீர்களா? என்றாள் இடும்பி. எந்த ஒரு ஆண்மகனும் தனது சகோதரர்களும், தாயும் ராட்சசனின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கையில் அவர்களை நிர்க்கதியாக விட்டு விட்டு வெறும் காமத்திற்காக பெண்ணின் பின்பு செல்லமாட்டான்! அப்படியிருக்க நான் மட்டும் எப்படி அதை செய்வேன் என்று நீ எண்ணுகிறாய்? என்று கேட்டான். 

            அப்படியானால் இவர்கள் அனைவரையும் இப்போது எழுப்புங்கள்! நான் உங்கள் அனைவரையும் என் தமையனிடமிருந்து நிச்சயம் காப்பேன் என்று இடும்பி கூறுகிறாள். உடனே பீமன் கூறுகிறான், அழகில் சிறந்த பெண்ணே உன் தமையனுக்கு பயந்தெல்லாம் அசதியில் தூங்கும் என் தாயையும், சகோதரர்களையும் என்னால் எழுப்ப இயலாது. உனது சகோதரன் என்னை எதிர்க்க இங்கு வந்தாலும் அதைப்பற்றி துளியும் எனக்கு கவலை இல்லை என்றான். இந்த நிலையில் பாண்டவர்கள் எப்படி அந்த அரக்கனிடம் இருந்து தப்பிக்கிறார்கள்? இடும்பியின் காதலை ஏற்று அவளை மணந்து கொள்வானா பீமன்? போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Post a Comment

Previous Post Next Post