தீயிலிருந்து வெளிவந்த துருபதனின் மகன்
(The son of Drupada who came out of the fire)
முந்தய பதிவில் பீமனுக்கு பிறந்த அசுர குழந்தை கடோட்கஜன் (Birth of Ghatotkacha in Mahabharata) பற்றியும், பீமன் அந்த நரமாமிசம் உண்ணும் அசுரனுக்கு உணவு கொண்டு சென்றதைப் பற்றியும் பார்த்தோம்.தற்போது அந்த அசுரனை பீமன் எவ்வாறு கொன்றான் அதன்பிறகு என்னவாயிற்று போன்ற பல தகவல்களைப் பார்ப்போம்.
அசுரனுக்கும், பீமனுக்கும் நடந்த கடும் சண்டை (Monster vs Bhima) :
அந்த அசுரன் இருக்கும் இடத்தை அடைந்த பீமன், அவன் பெயரை சொல்லி அழைத்து விட்டு, தான் கொண்டு வந்த உணவை தானே உண்ணத் தொடங்கினான். தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்த அந்த அசுரன், தனக்கான உணவை பீமன் உண்பதைக் கண்டு பெரும் கோபம் கொண்டான். பார்ப்பதற்கே மிகக் கொடூரமாகவும், சிவந்த கண்களோடும், உறுதியான மார்போடும் இருந்த அந்த அசுரன் வேகமாக ஓடி வந்து பீமனை எட்டி உதைத்தான். ஆனாலும் அதற்கெல்லாம் அசராத பீமன், அந்த உணவை உண்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினான்.
ஒருவழியாக உணவை முழுவதுமாக உண்டு முடித்தபின், அந்த அசுரனோடு யுத்தம் புரிய தயாரானான். உடனே அந்த அசுரன் தனக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி பீமன் மீது வீசினான். உடனே பீமனும் ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி அந்த அசுரன் மீது வீசினான். இப்படியே அவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் இருந்த அனைத்து மரங்களையும் பிடுங்கி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களே இல்லாத ஒரு நிலை உருவானது. உடனே இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் கரம் கொண்டு தாக்கத் தொடங்கினர்.
அசுரனைக் கொன்ற பீமன் (Bhima killed the Monster) :
அந்தணர் கூறிய அளவிற்கு அந்த அசுரன் ஒன்றும் பெரிய பலசாலி இல்லை என்பதை உணர்ந்த பீமன், அவனோடு மிக எளிமையாகவே யுத்தம் புரிந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அந்த அசுரன் மிகவும் சோர்வடைந்த நிலையில், அவனைத் தன் கையால் தூக்கி, அவனது நெஞ்சின் மீது தன் பலம் கொண்டு தாக்கினான் பீமன். அந்த ஒரு தாக்குதல் அந்த அசுரனின் உயிரைப் பறித்தது. இதைக் கண்ட அந்த அசுரனின் உறவினர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இனி நீங்கள் யாராவது நரமாமிசம் உண்ண நினைத்தால் உங்களுக்கும் இதுதான் கதி! என்று பீமன் அவர்களை எச்சரித்தான். இனி நாங்கள் யாரும் நர மாமிசம் உண்ண மாட்டோம்! என்று அவர்கள் அனைவரும் வாக்களித்தனர். அதன்பிறகு பீமன் அந்த அசுரனின் உடலை இழுத்து வந்து, அந்த நகரத்தின் எல்லையில் போட்டுவிட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து சென்றான். தனது குடிசையை அடைந்த பீமன் நடந்த அனைத்தையும் தன் தாயுடனும், சகோதரர்களிடமும் கூறினான்.
ஊர் மக்களின் மகிழ்ச்சி (Joy of the People) :
இந்த நிகழ்வு முழுவதும் ஒரு இரவுப் பொழுதிலேயே நடந்தது. அதன் பிறகு அடுத்த நாள் பொழுது விடிந்தவுடன், அந்த அசுரன் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்ட அந்த நகர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இவ்வளவு பலம் பொருந்திய அசுரனை யார் கொன்றார்கள் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. ஆகையால் அவனுக்கு நேற்று யார் உணவு கொண்டு சென்றார்களோ, அவர்களே அவனைக் கொன்றிருக்க வேண்டும் என யூகித்த அவர்கள், நேற்றைய உணவு கொண்டு செல்லும் முறை யாருக்கானது என்பதை அறிந்து, உடனே அவர்கள் அனைவரும் அந்த அந்தணன் வீட்டிற்கு சென்று, அந்த அசுரன் எப்படி இருந்தான்? என்று கேட்டனர்.
அந்த அந்தணன் குந்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில், அந்த அந்தணர் ஒரு பொய் சொன்னார். அதன்படி நேற்று தான் துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு அந்தணர் வந்து தான் அந்த அசுரனைக் கொன்று என்னுடைய துயரை போக்குவதாகவும் கூறினார். அவரே அந்த அசுரனைக் கொன்றிருப்பார் என்று நினைக்கிறேன்! என்றார் அந்த அந்தணர். இதைக் கேட்ட அந்த நகர வாசிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த அசுரன் இறந்ததை அவர்கள் ஒரு விழாவாகக் கொண்டாடினர்.
துரோணரைக் கொல்ல துருபதன் பெற்ற குழந்தை (Drupada Got child to kill Drona):
இந்த நிலையில் மீண்டும் அந்த நகரத்தில் வழக்கம்போல பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர் பாண்டவர்கள். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஒரு அந்தணர் வந்தார். அவர் பல தேசங்களை ஆளும் மன்னர்களின் தகவல்களை அறிந்து வைத்திருந்தார். அதுகுறித்து பாண்டவர்கள் அவரிடம் கேட்டு அறிந்து கொண்டிருந்தனர். அப்போது அவனுக்கு பிறந்த மகன் மற்றும் மகளை பற்றி கூறத் துவங்கினார். துரோணரிடம் போரில் தோற்ற துருபதன் பெரும் கோபத்தோடும், வருத்தத்தோடும் இருந்தான். அவன் தனக்கு ஒரு வலிமைமிக்க புத்திரன் இருந்திருந்தால், நிச்சயம் துரோணரை வீழ்த்தியிருக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்த்தான்.
இந்த நிலையில் சக்தி வாய்ந்த இரு அந்தணர்களை அவன் சந்தித்தான். காசியவ குலத்தில் பிறந்து, கற்க வேண்டிய கல்வி அனைத்தையும் கற்று, பெரும் நோன்பு இருந்து, பல சக்திகளைப் பெற்றவர்கள் அவர்கள்! என்பதை அறிந்த துருபதன், ஒருநாள் அவர்கள் இருவரில் இளைய அந்தணரிடம் சென்று, தனக்காக ஒரு மிகப் பெரிய வேள்வி நடத்தி, அதிலிருந்து துரோணரை கொல்லும் சக்தி பெற்ற ஒரு ஆண்மகனை வரச்செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டினான். அதோடு அதை செய்து முடித்தால் தான் 10,000 பசுமாடுகளும் இன்ன பிற பொருட்களையும் தருவதாகவும் வாக்களித்தான். ஆனால் அதற்கு அந்த அந்தணர் மறுத்துவிட்டார்.
அவரால் நிச்சயம் ஒரு மகனைப் வேள்வித் தீயிலிருந்து கொண்டு வரச்செய்ய முடியும் என்று நம்பிக்கை கொண்ட துருபதன், அவரைத் தொடர்ந்து இது குறித்து கேட்டுக்கொண்டே இருந்தான். இப்படியே ஒரு வருடம் கடந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அந்த அந்தணர் தனது சகோதரருக்கு உலகப் பொருட்களை அறிவதில் ஆர்வம் அதிகம் உண்டு என்றும், ஆகையால் உங்கள் நிலையை அவரிடம் கூறினால் அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார் என்றும் கூறினார். உடனே துருபதன் அந்த அந்தணரின் அண்ணனை சந்தித்து, தனது நிலை குறித்து கூறி, அவன் தனக்கு ஒரு மகனை வரச் செய்தால் அவருக்கு பத்தாயிரம் பசுக்கள் தருவதாக வாக்களித்தான். அதோடு துரோணர் மிகவும் வலிமை மிக்கவர் என்றும், அவரைக் கொல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட பல தெய்வீக அஸ்திரங்கள் அவரிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்தையும் கேட்டறிந்த அந்த அந்தணர், துருபதனுக்கு உதவுவதாக வாக்களித்தார்.
திருஷ்டத்யுமன் மற்றும் திரௌபதியின் பிறப்பு (Birth of Dhrishtadyumna and Draupadi) :
அதன்பிறகு தனது சகோதரனை அழைத்து, இந்த யாகத்தில் தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார் அந்த அந்தணர். தன் சகோதரன் மீது கொண்ட பாசத்தால் அவரும் அதற்கு சம்மதித்தார். அதன்பிறகு அந்த வேள்விக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் துருபதனிடமிருந்து பெற்று அவர்கள் யாகத்தை துவங்கினர். அந்த யாகத்திலிருந்து ஒரு அற்புதமான அழகும், திறமையும் கொண்ட ஒரு இளவரசன் வெளிப்பட்டான். பிறக்கும்போதே வில்லையும், அம்பையும் கையில் ஏந்தியவாறே அவன் வேள்வித் தீயில் இருந்து வெளியில் வந்தான். அதை கண்ட அனைவரும் ஆரவாரம் செய்தனர். அதன் பிறகு அந்த வேள்வித்தீயில் இருந்து பெரும் அழகு பொருந்திய ஒரு பெண் வந்தாள். கரிய நிறத்தோடும் அழகிய தோற்றத்தோடும் அவள் இருந்தாள்.
அவர்கள் இருவருக்கும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பிறக்கும்போதே ஆயுதங்களோடு பிறந்ததால் அந்த ஆண்மகனுக்கு திருஷ்டத்யுமன் என்று பெயரிட்டார்கள். அதோடு கரிய நிறத்தில் அந்த பெண் இருந்ததால் அவளுக்கு கிருஷ்ண என்று பெயரிட்டனர். இந்த செய்தி துரோணரின் காதுகளுக்கும் எட்டியது. ஆனால் அவரோ தன்னைக் கொல்வதற்காக பிறந்த திருஷ்டத்யுமனை, தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து விதமான போர்க் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். விதியின் விளையாட்டை யாராலும் மாற்ற இயலாது என்பது துரோணரின் அப்போதைய நம்பிக்கையாக இருந்தது. இந்தத் தகவல் அனைத்தையும் அந்த அந்தணர் பாண்டவர்களிடமும், குந்தியிடமும் கூறி முடித்தார்.
கந்தர்வனிடம் போரிட்ட அர்ஜுனன் (Arjuna vs Gandharva) :
இவற்றைக் கேட்ட பாண்டவர்களின் மனமானது வேதனையில் வாடியது. இந்த நிலையில் அங்கு வந்த வியாசர் பாண்டவர்களை பாஞ்சால தேசம் நோக்கி விரையும் படியும், அங்கு அவர்களுக்கான மணப்பெண் இருப்பதாகவும் கூறி விட்டு அங்கிருந்து சென்றார். தங்களது பாட்டனாரின் சொல்லை மதித்து அவர்கள் அனைவரும் பாஞ்சாலம் நோக்கி விரைந்தனர். இரவு பகல் பாராமல் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் அவர்கள் கங்கைக் கரையை வந்தடைந்ததும், அந்தக் கரையில் ஒரு கந்தர்வன் அவன் மனைவியோடு விளையாடிக் கொண்டிருந்தான். பாண்டவர்களின் காலடி ஓசை கேட்டு அவன் கடும் சினம் கொண்டான். இதனால் அவன் பாண்டவர்களை நோக்கி அஸ்திரங்களை பிரயோகித்தான். உடனே அர்ஜுனன் அந்த அஸ்திரங்கள் அனைத்தையும் தடுத்து விட்டு, அந்த கந்தர்வனை எச்சரித்தான்.
ஆனால் அந்த கந்தர்வன் அர்ஜுனனின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் போர் மூண்டது. அதில் அர்ஜுனன் தன் கணைகள் கொண்டு அந்த கந்தர்வனின் தேரை எரித்து, அவனை வீழ்த்தினான். இதைக் கண்ட அந்த கந்தர்வனின் மனைவி யுதிர்ஷ்டனின் பாதம் பணிந்து, தனது கணவனுக்கு உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினாள். உடனே யுதிஷ்டிரன், அந்த கந்தர்வனை விட்டுவிடும்படி அர்ஜுனனுக்கு ஆணையிட்டான். தனக்கு உயிர் பிச்சை அளித்த அர்ஜுனனுக்கு அந்த கந்தர்வன் தலை வணங்கினான்.
அர்ஜுனனுக்கு கந்தர்வன் கொடுத்த பரிசு (Gandharvan's gift to Arjuna) :
அதோடு அவரிடம் இருக்கும் சக்தி வாய்ந்த நூறு குதிரைகளையும், ஹாசுஷி எனும் மாய அறிவியலையும் அவனுக்குத் தருவதாக வாக்களித்தான். அந்த அறிவியலைக் கொண்டு ஒருவன் விரும்பியதை விரும்பியவாறே பார்க்கலாம். அத்தகைய சக்தி அந்த மாதிரி அறிவியலுக்கு உண்டு என்றான் அந்த கந்தர்வன். அதற்கு பதிலளித்த அர்ஜுனன் எனக்கு இலவசமாக எதுவும் வேண்டாம் என்றான். உடனே அந்த கந்தர்வன், அப்படியாயின் நீ என் மீது பிரயோகித்த அஸ்திரத்தை எனக்குக் கொடு! அதற்கு பதிலாக நான் உனக்கு கொடுக்க எண்ணியதை கொடுக்கிறேன் என்றான்.
அதன்படி அர்ஜுனன் தனது அஸ்திரத்தை அந்த கந்தர்வனுக்கு முறையாக கொடுத்தான். அதோடு அவரிடமிருந்து அந்த மாய அறிவியலை மட்டும் பெற்றுக்கொண்டு, பிறகு ஒருநாள் தங்களுக்கு தேவைப்படும் போது அந்த குதிரையை பெற்றுக் கொள்கிறேன்! அதுவரை அவைகள் உன்னிடமே இருக்கட்டும்! என்று கூறிவிட்டான். இந்த நிலையில் அந்த கந்தர்வன் பாண்டவர்களுக்கு தௌமியர் என்ற ஒரு புரோகிதரைப் பற்றிக் கூறி அவர் உங்களோடு இருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்றான். கந்தர்வனிடமிருந்து விடைபெற்ற பாண்டவர்கள், அந்த புரோகிதர் இருக்கும் இடத்தை அறிந்து அவரையும் தங்களோடு அழைத்துக் கொண்டு பாஞ்சால தேசம் நோக்கி விரைந்தனர்.
பாஞ்சால தேசம் நோக்கி செல்லும் பாண்டவர்கள் (Pandavas heading towards Panchala) :
அவர்கள் செல்லும் வழிநெடுக்க பெரும் அந்தணர் கூட்டம் பாஞ்சால தேசம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இதை கவனித்த யுதிர்ஷ்டன் அவர்களில் ஒருவரை அழைத்து, நீங்கள் அனைவரும் எங்கு செல்கிறீர்கள்? என்றான். அதற்கு அந்த அந்தணர், நாங்கள் அனைவரும் பாஞ்சால தேசம் நோக்கி செல்கிறோம்! அங்கு திரௌபதி என்றழைக்கப்படும். கிருஷ்ணைக்கு சுயம்வரம் நடக்கவுள்ளது. பெரும் அழகு வாய்ந்த அந்த மங்கையின் சுயம்வரத்திற்கு பல அரச குமாரர்கள் வருவார்கள்.
அவர்கள் பெரும் செல்வத்தை தானமாக அளிப்பார்கள். அதைப் பெறுவதற்காகவும், அங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காகவும் நாங்கள் அங்கு செல்கிறோம்! நீங்களும் அங்கு வாருங்கள்! உங்களுக்கும் அனைத்தும் கிடைக்கும்! என்றார் அந்த அந்தணர். இதைக் கேட்ட யுதிஷ்டிரன், அப்படியே ஆகட்டும்! நாங்களும் உங்களோடு அங்கு வருகிறோம்! என்றான். அதன் பிறகு பாண்டவர்கள் அங்கு சென்றார்களா? திரௌபதியின் சுயம்வரத்தில் எதுபோன்ற போட்டி நடத்தப்பட்டது? என்பது போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.