பாண்டவர்களைக் கொல்ல கௌரவர்கள் உருவாக்கிய எரியும் மாளிகை
(Burning Palace Built by Kauravas to kill the Pandavas in Mahabharatha)
கடந்த பாகத்தில் மகாபாரத போருக்கு முன் நடந்த மாபெரும் போரில் பாண்டவர்களும், கௌரவர்களும் எவ்வாறு துருபதனை எதிர்கொண்டனர் (The Great War Before the Mahabharata War) என்பதைப் பார்த்தோம். தற்போது பாண்டவர்களை கொல்ல கௌரவர்கள் செய்யும் சதியைப் பற்றி பார்க்கலாம்.
அர்ஜுனன் பெற்ற அகத்திய சீடர் ஆயுதம் :
துருபதனை வென்று சிறைபிடித்த பின்னர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் அஸ்தினாபுரம் நோக்கி செல்கின்றனர். பாண்டவர்கள் மூலமே அந்த போரில் துருபதன் வீழ்த்தப்பட்டதால் திருதராஷ்டிரன் மிகுந்த துயர் கொள்கிறான். சில நாட்களுக்குப் பிறகு பல சூழ்ச்சிகளை கடந்து யுதிஷ்டிரனுக்கு சான்றோர் முன்னிலையில் இளவரசர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. குறுகிய காலத்திலேயே யுதிஷ்டிரன் தனது ஆட்சி திறமையினாலும், நன் நடத்தையினாலும் மக்களின் மனதைக் கொள்ளை கொள்கிறான். யுதிஷ்டிரன் அரசனான சில நாட்களிலேயே நாட்டில் நல்ல மழை பொழிந்து அமோகமான விளைச்சல் இருந்தது.
துரோணரின் குருதட்சணை :
அதைத் தாம் அகத்தியரின் சீடரான அக்னி வேசரிடமிருந்து முறையாகப் பெற்றதாகவும், அது அதிபயங்கர சக்திவாய்ந்த அஸ்திரம் என்றும், அதைத் தாம் இப்போது அர்ஜுனனுக்கு கற்றுத் தருவதாகவும் கூறினார். அதோடு அதற்கான குருதட்சணையை அனைவரது முன்னிலையிலும் அர்ஜுனன் தமக்கு இப்போது அளிக்க வேண்டும் என்றும் கூறினார். நீங்கள் எதைக் கேட்டாலும் தருகிறேன்! என்று துரோணருக்கு அர்ஜுனன் வாக்களிக்கிறான். ஒருவேளை நீ எனக்கு எதிராக போரில் நின்று அஸ்திரத்தை ஏந்த வேண்டிய நிலை வருமாயின், தயங்காமல் நீ எனக்கு எதிராக அஸ்திரத்தை ஏந்தி போரிட வேண்டும்! அதுவே நீ எனக்குத் தரும் குருதட்சனையாகும்! என்கிறார் துரோணர். அர்ஜூனனும் அதற்கு சம்மதிக்கிறான்.
பாண்டுவின் இறப்பிற்குப் பிறகு அஸ்தினாபுரத்திற்கு பல சிற்றரசர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் அர்ஜுனனும், பீமனும் சேர்ந்து தங்களது வலிமையால் அடக்கினர். அதோடு பல தேசங்களுக்கு சென்று போரிட்டு வென்று, அதை அஸ்தினாபுர இராஜ்ஜியத்தோடு இணைத்தனர். இதனால் பாண்டவர்களின் புகழ் பல நாடுகளிலும் பரவத் துவங்கியது. தனது புத்திரர்களின் புகழ் மங்குவதையும், பாண்டவர்களின் புகழ் நாடெங்கும் ஓங்குவதையும் கண்ட திருதராஷ்டிரன், பாண்டவர்கள் மீது பெரும் பொறாமை கொள்கிறான். அதனால் அவன் வெகு நாட்களாய் கவலையில் தவித்து வரும் அவன் ஒரு கட்டத்தில் பாண்டவர்களை அழித்துவிடலாம் என்று கூட அவன் யோசிக்கிறான். ஆனால் அவன் மனசாட்சி இடம் கொடுக்காததால் அவன் மௌனம் காத்தான்.
கௌரவர்களின் சதித் திட்டம் :
இந்த நிலையில் சகுனியும், துரியோதனனும், துச்சாதனனும், கர்ணனும் இணைந்து பாண்டவர்களை எப்படி கொல்லலாம் என்று சதி திட்டம் தீட்டுகின்றனர். அதன் இறுதியாக யாருக்கும் சந்தேகம் வராதபடி பாண்டவர்களை எரித்து விடலாம் என்று முடிவு செய்கின்றனர். வாரணாவதம் என்னும் நகரத்திற்கு பாண்டவர்களை அனுப்பி, அங்கு தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஆட்களைக் கொண்டு அவர்களை எளிதில் அழிக்க முடியும் என்று அவர்கள் எண்ணினர். இந்த சதித் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் பாண்டவர்கள் முதலில் வாரணாவதம் செல்ல வேண்டும். அதற்கு திருதராஷ்டிரனின் உதவியை நாடினான் துரியன். திருதராஷ்டிரன் பாண்டவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை தனக்கு சாதகமாக்கி துரியோதனன் பாண்டவர்களை வாரணாவததிற்கு நாடு கடத்தும் படி தனது தந்தையிடம் வேண்டினான் .
ஆனால் திருதராஷ்டிரன் அதற்கு சம்மதிக்கவில்லை. நாம் அப்படி செய்தால் நாட்டுமக்கள் நம் மீது மிகுந்த அதிருப்தி கொள்வர். அதோடு பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட பல வீரர்கள் நமக்கு எதிராகத் திரும்பி நம்மை அழிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று தன் மகனிடம் சொன்னான் திருதராஷ்டிரன். அந்தக் கவலையெல்லாம் தங்களுக்கு வேண்டாம்! பீஷ்மர் எப்போதும் இந்த ராஜ்ஜியத்திற்கு எதிராக நடக்க மாட்டேன் என்று சபதம் ஏற்றவர். அதோடு துரோணரின் மகன் அஸ்வத்தாமன் எனது நண்பன். அவன் சொன்னால் இவர் கேட்பார். ஆகையால் யாராலும் நமக்கு எந்த தீங்கும் நேராது. அதோடு நாட்டு பிரஜைகளுக்கு நாம் செல்வத்தை தானமாக வழங்கினால் அவர்கள் தானாக நம் பக்கம் சாய்ந்து விடுவர் என்று கூறி தன் தந்தையின் சம்மதத்தை பெற்றான் துரியோதனன்.
வாரணவாதம் செல்லும் பாண்டவர்கள் :
அடுத்த சில நாட்களில் வாரணாவதத்தில் சிவன் கோவில் திருவிழா நடக்கப்போவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் திருதராஷ்டிரன். அரசவையில் தனக்கு சாதகமாக செயல்படும் சிலரை அழைத்து, வாரணாவதம் பற்றிப் பெருமையாகப் பேசும் படி கூறி வைத்தான். அதன்படி அவர்களும் வாரணாவதத்தின் புகழை யுதிஷ்டிரனின் காதில் படும்படி பேசினர். இந்திர லோகத்திற்கு இணையான ஒரு நகரம் அது என்று அவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பொய்க் கதைகளை அவிழ்த்து விட்டனர்.
அதனையடுத்து யுதிஷ்டிரனை அழைத்த திருதராஷ்டிரன் இங்குள்ளோர் அனைவரும் வாரணாவதத்தைப் பற்றி மிகவும் பெருமையாக பேசுகின்றனர். அந்த அழகிய நகரத்தில் நீயும் உன் தம்பியும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வாருங்களேன் என்கிறான். யுதிஷ்டிரனுக்கு அங்கு செல்ல ஆசை இல்லை என்றாலும் மன்னர் கூறியதற்கு மறுப்பு கூற முடியாமல் அதற்கு ஒப்புக் கொள்கிறான். அதனையடுத்து பாண்டவர்கள் மற்றும் குந்தி ஆகிய 6 பேரும் வாரணாவதத்திற்குப் புறப்படுகின்றனர்.
எரியும் மாளிகையின் அமைப்பு :
இதற்கிடையில் துரியோதனன், சகுனியின் ஆலோசனைப்படி தனது நம்பிக்கைக்குரிய அமைச்சரான புரோசனனை அழைத்து உடனடியாக வாரணாவதம் சென்று பாண்டவர்கள் அங்கு வந்து சேருவதற்கு முன்பாக எளிதாக எரியக்கூடிய ஒரு மாளிகையை அமைக்க வேண்டும் என்றான். தன் சணல், பிசின், தூய்மையான நெய், கற்பூரம், மரக்கட்டைகள், எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு அந்த மாளிகையை அமைக்க வேண்டும். அதோடு அதிக அளவிலான அரக்கை அந்த மாளிகையின் சுவரில் பூசவேண்டும். தீ வைத்த உடன் எரியக்கூடிய காய்ந்த மரங்களைக் கொண்டே அந்த வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் செய்து வைப்பாயாக!
அந்த மாளிகை எரியக் கூடியது என்ற சந்தேகம் பாண்டவர்கள் எவருக்கும் வரக்கூடாது! அந்த அளவிற்கு நேர்த்தியாக நீ இந்த வேலையை செய்து முடிக்கவேண்டும். பாண்டவர்கள் அங்கு வந்ததும் ஏதாவது ஒரு இரவில் அவர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அந்த மாளிகைக்கு தீ வைத்து விடு! வெளியுலகைப் பொருத்தவரை அது ஒரு விபத்தாகவே இருக்கும். இந்த செயலை செய்து முடித்தால் இந்த ராஜ்ஜியத்திற்கு நான் அரசனாவேன். அதன்பிறகு அளவற்ற செல்வங்களை உனக்கு அள்ளித் தருவேன் என்றான். துரியோதனனின் ஆணையை ஏற்ற புரோசனன் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தீயினால் எரியக்கூடிய ஒரு மாளிகையை உருவாக்கினான்.
விதுரரின் எச்சரிக்கை :
அறிவில் சிறந்தவனாக விதுரர் இதைப்பற்றி எப்படியோ அரைகுறையாக அறிந்து கொள்கிறார். பாண்டவர்கள் வாரணாவதம் செல்வதைக் கண்ட அஸ்தினாபுர மக்கள் பெரிதும் துயர் கொள்கின்றனர். திருதராஷ்டிரன் அவர்களை நாடு கடத்துகிறானோ என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றுகிறது. அதனால் அவர்களும் தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பாண்டவர்களோடு செல்ல முற்படுகின்றனர். ஆனால் அவர்களை தடுத்து யுதிஷ்டிரன், நீங்கள் இருக்க வேண்டியது இந்த நாட்டில்தான்! மன்னன் நமக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்! எங்களுக்கு உங்களது உதவி வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், நாங்கள் நிச்சயம் உங்களிடம் கூறுகிறோம். அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள் என்று கூறுகிறான்.
இதைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆறுதல் கொள்கின்றனர். இந்த நிலையில் அங்கு வந்து விதுரர் அறிவில் சிறந்த ஞானிகளுக்கே புரியும் வகையில் சிலவற்றை யுதிஷ்டிரனிடம் கூறிவிட்டு, அங்கிருந்து செல்கிறார். எவருக்கும் விதுரர் கூறியது புரியவில்லை. யாருக்கும் அது புரியக்கூடாது என்பதற்காகவே விதுரர் அப்படி கூறினார். சில மைல் தூரத்தை கடந்து பிறகு, அவர் என்ன கூறினார்? என்று குந்தி தேவி யுதிஷ்டிரனிடம் கேட்க, அதற்கு யுதிஷ்டிரன் நமக்காக வாரணாவதத்தில் கட்டப்பட்டுள்ள மாளிகையானது எளிதில் தீப்பற்றி எரியக் கூடியதாக இருக்கக் கூடும் என்றும், ஆகையால் அதிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார் என்று யுதிஷ்டிரன் கூறினான். இதைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் அதிர்ச்சி கொண்டனர். சில நாட்களில் அவர்கள் அனைவரும் வாரணாவதத்தை அடைந்தனர்.
யுதிஷ்டிரனின் திட்டம் :
அதன்பிறகு அவர்கள் அந்த நகரில் உள்ள ஆன்றோர்கள், சான்றோர்களிடம் ஆசிபெற்று அவர்களின் அழைப்பையேற்று வெவ்வேறு இடங்களில் தங்கினார்கள். இப்படியாக அவர்கள் பத்து இரவுகளை கழித்தனர். அதன்பிறகு துரியோதனின் விசுவாசியான புரோசனனாள் உருவாக்கப்பட்ட அந்த மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்கு தேவையான விலை உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள், பொருட்கள் என அனைத்தும் அங்கு தயாராக இருந்தது. அவன் அவர்களை சிறப்பாக வரவேற்றான். அதன் பிறகு அந்த மாளிகையை ஆராயத் துவங்கினான் யுதிஷ்டிரன். விதுரர் கூறியபடியே அந்த மாளிகை முழுவதும் எளிதாக செய்யக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டவை என்பதை அறிந்த அவன், இது குறித்து பீமனிடம் கூறினான்.
உடனே பீமன் அப்படியானால் நாம் உடனே இங்கிருந்து சென்று விடலாம் என்றான். நாம் இங்கிருந்து சென்றாலும் நிச்சயம் நம்மை துரியோதனன் கொல்லவே முயற்சிப்பான். ஆட்சியும் செல்வமும் அவனுக்குக் கீழே உள்ளது. ஆகையால் நம்மை ஏதாவது ஒரு வழியில் அவனால் கொன்றுவிட முடியும். அதனால் நாம் இங்கிருந்து இப்போது தப்பிப்பதற்கு பதிலாக, இங்கிருந்து வெளியில் செல்ல ரகசியமாக ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை செய்யலாம். ஒருவேளை இந்த மாளிகைக்கு புரோசனன் தீ வைத்தால், அந்த வழியாக நாம் தப்பித்து செல்லலாம். அப்போது எவருக்கும் நான் தப்பித்திருப்பது தெரியாது. அதன் பிறகு சிறிது காலம் வனத்தில் இருந்து விட்டு பிறகு நாடு திரும்புவோம் என்றான் யுதிஷ்டிரன். தன் தமையன் கூறியதை பீமன் ஒப்புக்கொள்கிறான்.
மாளிகைக்குள் கட்டப்படும் சுரங்கம் :
இந்த நிலையில் விதுரரின் நம்பிக்கைக்குரியவரான கனகன் என்பவர் பாண்டவர்களிடம் வந்து தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு தான் விதுரரால் அனுப்பப்பட்டவன் என்றும், தான் சுரங்கம் தோண்டுவதில் வல்லவன் என்றும் கூறுகிறார். ஆனாலும் இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ என்று பாண்டவர்கள் எண்ணுகின்றனர். அதை உணர்ந்த கனகன் தான் உண்மையில் விதுரரால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்த்த சில குறிப்புகளை அவர்களிடம் கூறுகிறான். அதன் பிறகு பாண்டவர்கள் அவனை முழுமையாக நம்புகின்றனர். அதன்பிறகு யாரும் அறியாத வண்ணம் அவன் சுரங்கம் தோண்டும் பணியை துவங்குகிறான். அந்த சுரங்கத்தின் வாயிலானது அரக்கு மாளிகையின் நடுப்பகுதியில் துவங்குகிறது.
யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வாயில் மூடப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் ஐவரும் இரவு நேரங்களில் எப்போதும் கவனமாக இருக்கின்றனர். அதேசமயம் யாருக்கும் தங்கள் மீது சந்தேகம் வராதவாறு நடந்து கொள்கின்றனர். இப்படியே அவர்கள் அங்கு ஒரு வருடம் வாழ்கின்றனர். இந்த நிலையில் அந்த மாளிகையில் இருந்து பாண்டவர்கள் எப்படி தப்பித்தனர்? பாண்டவர்களின் இறப்பை துரியோதனன் எவ்வாறு உறுதி செய்தான்? போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.