கர்ணனின் இறப்பிற்கு காரணமான சாபங்கள் | The curses that caused Karna's Death | Mahabharatham Episode 9

கர்ணனின் இறப்பிற்கு காரணமான சாபங்கள்

  (The curses that caused Karna's Death

            முந்தய பாகத்தில் அர்ஜுனனை வில்வித்தையில் மிஞ்சிய ஏகலைவனைப் (Legend Ekalavya in Mahabharata) பற்றி பார்த்தோம். தற்போது சூரிய புத்திரனான கர்ணனின் திறமைகளையும் அவன் பெற்ற சாபத்தையும் பற்றி பார்க்கலாம்.


 கர்ணனின் ஆர்வம் (Karna's interest) :

            பாண்டவர்களும் கௌரவர்களும் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்ததைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது நாம் கர்ணனின் கதைக்கு வருவோம். தேரோட்டியாக கண்டெடுக்கப்பட்டு வளரும் அவன் வசுசேனன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். சிறுவயது முதலே போர்க் கலைகளை கற்பதில் மிகுந்த ஆர்வம் கொள்கிறான் கர்ணன். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் விற்பயிற்சியை துவங்குகிறான். இதுகுறித்து செய்தி பிதாமகர் பீஷ்மரின் காதுகளுக்கு செல்கிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனிடம் இதுகுறித்து கேட்கிறார் பீஷ்மர். அதோடு கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்பதால் அவன் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதை பீஷ்மர் விரும்பவில்லை. 

            ஆகையால் அத்தகைய பயிற்சியில் ஈடுபட கூடாது எனவும் அவனுக்கு தேரோட்டும் பதவியினை தாமே தருவதாகவும் அதிரதனிடம் பீஷ்மர் கூறுகிறார். அதோடு கர்ணன் அவர்களுக்கு எங்கு கிடைத்தான் போன்ற பல தகவல்களையும் அதிரதனிடம் கேட்டறிகிறார். கர்ணனின் திறமையை ஒருமுறை நேரில் கண்ட பீஷ்மர் நிச்சயம் இவன் ஒரு சத்ரியனாகத்தான் இருக்ககூடும் என்று எண்ணி அவருடைய உண்மையான தாய், தந்தையர் யார் என்ற முழு தகவல்களையும் சேகரிக்குமாறு தன்னுடைய ஒற்றர்களிடம் கூறுகிறார். இந்த நிலையில் கர்ணன் தன்னுடைய பயிற்சியை தொடர்கிறான். 

துரோணரை சந்திக்கும் கர்ணன் (Karna meets Drona):

            அதோடு அவன் துரியனிடமும் சிறுவயது முதலே நட்பு பாராட்டுகிறான். பீஷ்மர் கூறிய அனைத்தையும் கர்ணனின் வளர்ப்புத் தந்தை அவனிடம் கூறி அவனை போர்க்கலைகளை கற்க வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார். ஆனால் அவன் அதை ஏற்க மறுக்கிறான். அதோடு இனி இந்த ராஜ்ஜியத்தில் இருந்தால் அவனுக்கு சிக்கல் நேரும் என்று எண்ணி அந்த ராஜ்யத்தை துறந்து வேறு எங்காவது சென்று முறையாக போர்க் கலைகளை கற்கலாம் என்று எண்ணி அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். இந்த நிலையில்தான் அவன் துரோணரை சந்திக்கிறான். பாண்டவர்கள், கௌரவர்கள் உள்ளிட்ட பல ராஜ குமாரர்களுக்கு அவர் போர்க் கலைகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தை அடைந்த கர்ணன், கலைகளை கற்றுத் தரும்படி துரோணரிடம் வேண்டுகிறான். 

கர்ணனின் சபதம் (Karna's Vow) :

            கர்ணனின் முகத்தில் உள்ள பிரகாசத்தையும் உடல் பலத்தையும் பார்த்து அவர் நிச்சயம் ஒரு சத்ரியனாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறார் துரோணர். பிறகு அது குறித்து அவரிடம் வினவுகிறார். ஆனால் கர்ணன் தான் ஒரு தேரோட்டியின் மகன் என்று வருத்தத்துடன் கூறுகிறான். அதனால் துரோணர் அவனுக்கு கலைகளை கற்றுத் தர மறுக்கிறார். அதைக்கேட்டு கோபத்தில் பொங்கிய கர்ணன் துரோணரிடம் விவாதத்தில் ஈடுபடுகிறார். பிறகு நீங்கள் யாரிடம் இந்தக் கலைகளை பயின்றீர்களோ அவரிடமே நானும் இந்தக் கலையை பயில்வேன்!

             அதோடு நான் உங்களை மீண்டும் சந்திக்கையில், உங்கள் சீடர்களை விட நான் சிறந்து விளங்குவேன்! என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான் கர்ணன். அவன் அப்படிச் செல்கையில் தனது அம்புகள் மூலம் ஒரு மரக்கட்டையை தீ வைத்து விட்டு செல்கிறான். உடனே அர்ஜுனன் துரோணரின் அனுமதியோடு தனது அம்புகள் மூலம் நீரை வரச்செய்து அந்தத் தீயை அணைக்கிறான். அந்தக் கணத்திலிருந்து அர்ஜுனனும், கர்ணனும் எதிரிகளாக மாறுகின்றனர்.

பரசுராமரின் சீடனாகும் கர்ணன் :

            அங்கிருந்து சென்ற கர்ணன் மகேந்திர மலைகளில் வசித்து வந்த பரசுராமரை சந்தித்து, தான் ஒரு தேரோட்டியின் மகன் என்பதை மறைத்து, தான் ஒரு பிராமண குலத்தை சேர்ந்தவன் என்று அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அதன்பிறகு பரசுராமரிடம் இருந்து பல கலைகளைக் கற்கிறான்.  அதோடு அந்த மலையில் அவன் பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு நட்பாயிருந்து அவர்களிடமிருந்தும் பல கலைகளை கற்கிறான். அதன் பிறகு ஒரு சமயம் அவன் தவறுதலாக ஒரு பிராமணர் வளர்த்து வந்த பசுவின் மீது அம்பெய்து அதனைக் கொன்று விடுகிறான். 

            அதன் காரணமாக அந்த பிராமணரிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால் அந்த பிராமணரோ அவனுக்கு சாபம் ஒன்றை கொடுக்கிறார். அதன்படி நீ எவனை எதிர்க்க இதுநாள் வரை கஷ்டப்பட்டு பல கலைகளைக் கற்று வருகிறாயோ, அவனை எதிர்க்கும் சமயத்தில் உனது தேர் சக்கரமானது பூமியில் சிக்கிக்கொள்ளும்! அப்போது உன் எதிரி உன்னைக் கொல்வான்! நீ எப்படி உனது கவனக்குறைவால் பசுவைக் கொன்றாயோ, அதே போல நீ கவனக் குறைவாக இருக்கும் சமயத்தில் உன் எதிரி உன்னை அழிப்பான்! என்று சாபமிடுகிறார். இதனால் மிகுந்த துயர் கொண்ட கர்ணன் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. 

பரசுராமரின் சாபம் (The Curse of Parasurama):

            கர்ணனின் நற்பண்புகளையும், திறமையையும், குருபக்தியையும் கண்டு வியந்த பரசுராமர் அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தும் மந்திரத்தையும், அதைத் திரும்பப் பெறும் மந்திரத்தையும் போதிக்கிறார். அதன் பிறகு அவரோடு மகிழ்ச்சியாய் காலத்தை கழித்து வந்தான் கர்ணன். ஒரு சமயம் பரசுராமர், கர்ணனின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கையில் அவன் தொடையை ஒரு வண்டு கடிக்கத் துவங்குகிறது. 

            அசைந்தால் குருவின் தூக்கம் கலையும் என்பதால் அவன் அந்த வண்டின் கடியை தாங்கிக் கொண்டிருக்கிறான். அந்த வண்டானது அவனது தொடையை துளைக்க துவங்குகிறது. இதனால் அவன் தொடையில் இருந்து குருதி பெருக்கெடுக்க துவங்குகிறது. அவன் உடலிலிருந்து வழிந்த குருதி பரசுராமரின் மேல் பட்டு அவர் விழித்து விடுகிறார். அதனைக் கண்டவுடன் நீ எப்படி இவ்வளவு வலியை தாங்கிக் கொண்டிருந்தாய்? ஒரு பிராமணனால் நிச்சயம் இவ்வளவு வலியை தாங்க இயலாது! உண்மையில் நீ யார் என்று கேட்கிறார் பரசுராமர். 

            மிகவும் அச்சத்தோடும், பணிவோடும் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் இல்லை என்பதையும், தான் ஒரு தேரோட்டியின் மகன் என்பதையும் அவரிடம் கூறுகிறார். இதைக் கேட்டு கோபமுற்ற பரசுராமர் என்னிடம் பொய்யுரைத்து பிரம்மாஸ்திரத்தை கற்றாயல்லவா? அந்த பிரம்மாஸ்திரம் தக்க சமயத்தில் உனக்கு பயனளிக்காமல் உன் நினைவிலிருந்து மறைந்து போகும் என்று சாபமிடுகிறார். 

            அதோடு நீ இன்னும் ஒரு நொடி கூட இங்கு இருக்கக் கூடாது! உடனே இங்கிருந்து சென்றுவிடு என்று கூறுகிறார். கர்ணன் அவரிடமிருந்து விடைபெற்று தனது நண்பரான துரியனை தேடி வருகிறான். கர்ணன் துரியனை தேடி வந்த பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? அவனுக்கு எப்படி அரச பதவி கிடைக்கிறது? அர்ஜுனனை அவர் எப்படி எதிர்கொள்கிறான்? இப்படி பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Post a Comment

Previous Post Next Post