கர்ணனை அசிங்கப்படுத்திய திரௌபதி
(Draupadi who insulted Karna)
துரோணரைக் கொல்ல, துருபதன் பெற்ற குழந்தையைப் (The son of Drupada who came out of the fire to kill Drona ) பற்றியும், பாண்டவர்களும் அவர்களது அன்னையும் பாஞ்சால தேசம் நோக்கி விரைந்தது பற்றியும் முந்தய பதிவில் பார்த்தோம். தற்போது பாஞ்சால தேசத்தில் நடக்கும் பிரம்மாண்டமான திரௌபதியின் சுயம் வரம் நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம்.
துருபதனின் திட்டம் (Drupada's plan):
சில நாட்களில் துருபதனின் தலைநகரத்தை அடைந்த பாண்டவர்களும், குந்தியும் அங்கு அழகு பொருந்திய பல மாளிகைகளைக் கண்டு ரசித்தனர். பிறகு அங்கு ஒரு குயவன் வீட்டில் அவர்கள் தங்கினர். பாண்டவர்களையும், குந்தியையும் அங்கு யாரும் அடையாளம் காணாத அளவிற்கு அவர்கள் மாறு வேடம் பூண்டு இருந்தனர். சில காலங்களுக்கு முன்பு துரோணரின் சபதத்தை நிறைவேற்ற அர்ஜுனன் துருபதனை சிறைபிடித்ததை (The Great War Before the Mahabharata War) பற்றி நாம் முன்பே பார்த்திருந்தோம்.
அந்தப் போரில் அர்ஜுனனின் வீரத்தைக் கண்டு வியந்து போன துருபதன், திரௌபதி பிறந்த பிறகு அவளுக்கு அர்ஜுனனை மணமுடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டான். ஆனால் அவன் தன் ஆசையை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட பல கௌரவர்களும், அவர்களோடு கர்ணனும், சகுனியும், அவரது மகன்களும் மேலும் பல தேசத்து அரசர்களும் அங்கு வந்து குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் துருபதன் சிறப்பாக வரவேற்றான்.
திரௌபதியின் சுயம் வரம் (Draupadi's Marriage | Draupadi's Svayamvara) :
திரௌபதியின் சுயம்வரம் நடைபெறுவதற்காக மிகப் பெரிய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் அனைவரும் கூடினர். திரௌபதியின் சுயம்வரத்தில் பிரஜைகளும் இன்ன பிற மக்களும் பல்லாயிரக்கணக்கில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பாண்டவர்களும் அந்த அரங்கத்தில் நுழைந்து அந்தணர்ளோடு இருந்தனர். அந்த சுயம்வரத்திற்கு வரும் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் அங்கு பல ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த சுயம்வரம் நிகழ்ச்சியானது இப்படி 16 நாட்கள் நடைபெற்றது. இறுதியாக அந்த சுயம்வரம் நடைபெறும் மேடைக்கு வந்தால் திரௌபதி. தனது தங்கையான திரௌபதியின் கரத்தை பிடித்தபடி திருஷ்டத்யும்னன் அவளை அனைவரது முன்னிலையிலும் அறிமுகப்படுத்தினான். அழகில் சிறந்தவளான திரௌபதி அழகிய ஆடை மற்றும் அணிகலன்களோடு உலகம் போற்றும் அழகியாக அந்த அரங்கத்தில் வந்து நின்றாள். அவளது அழகைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
போட்டியின் விதிகளை அறிவித்த திருஷ்டத்யுமன் (Dhristadyumna announcing the rules of Svayamvara competition) :
இந்த நிலையில் சுயம் வரத்திற்கான போட்டியை அறிவித்தார் திருஷ்டத்யுமன். அதன்படி வில்லையே உயிராய் நினைக்கக் கூடிய ஒருவன் மட்டுமே நாண் ஏற்றக் கூடிய ஒரு தெய்வீக வில் இங்குள்ளது! அதே போல ஒரு செயற்கை மீனானது ஒரு இயந்திரம் மூலம் வானில் சுற்றி விடப்பட்டுள்ளது! அதன் பிம்பமானது கீழே உள்ள நீரில் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ளது!
உங்களுக்கு ஒரு கணை மட்டுமே கொடுக்கப்படும்! அதைக் கொண்டு வானில் சுற்றிக் கொண்டிருக்கும் மீனின் கண்களை அதன் பிம்பத்தை பார்த்தவாறு இந்த வில்லைக் கொண்டு துளைக்க வேண்டும்! இதுவே இந்த போட்டியின் விதி! உங்களில் சிறந்த வில்லாளன் இதை நிறைவேற்றி எனது தங்கையின் கரத்தை பற்றலாம்! என்றான் திருஷ்டத்யுமன். உண்மையில் அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இந்தப் போட்டியில் வென்று விடக் கூடாது என்பதை மனதில் கொண்டே துருபதன் இப்படி ஒரு கடுமையான போட்டியை வைத்தான்.
சுயம்வரத்தில் பங்கு கொண்ட கிருஷ்ணரும், பலராமனும் (Krishna and Balarama who took part in Svayamvara):
சுயம்வரத்தில் போட்டியிட வந்த பலரும், திரௌபதியின் அழகில் மயங்கி அவளை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று தீர்மானித்தனர். இந்த நிலையில் அந்தப் பெரும் கூட்டத்திற்கிடையே பிரவேசித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரை தொடர்ந்து யாதவ குல மக்களும், பலராமரும் அங்கு வந்தனர். அந்தக் கூட்டத்தில் பாண்டவர்களை அடையாளம் கண்ட கிருஷ்ணர் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
பிறகு பலராமனின் காதருகே சென்று அங்கு பாண்டவர்கள் அமர்ந்திருப்பதை அவரிடம் கூறினார். பலராமனும் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். இந்த நிலையில் போட்டியானது துவங்கப்பட்டது. அங்கிருந்த மன்னர்களும், ராஜகுமாரர்களும் ஒருவர் பின் ஒருவராக தங்களது முழுமையான பலத்தையும், இதுவரை அவர்கள் பெற்ற கல்வியையும் கொண்டு அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிலர் மிகக் கடுமையாகப் போராடினர். ஆனால் அவர்களை அந்த வில் தூக்கி எறிந்தது. அதனால் அவர்களில் சிலர் மயங்கியும் விழுந்தனர்.
கர்ணனை அவமதித்த திரௌபதி (Draupadi who insulted Karna) :
துரியனும் அந்தப் போட்டியில் பங்கேற்று தோற்றுப் போனான். இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கர்ணன், அந்த வில்லின் அருகே சென்று, அதை வணங்கிவிட்டு பின் மிக எளிதாக நாணேற்றி அதில் கணைகளைப் பொருத்தி, மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மீனின் கண்களை துளைக்கத் தயாரானான். அதை கண்ட அனைவரும் நிச்சயம் கர்ணன் இந்த போட்டியில் வெல்வான் என்று நினைத்தனர். அங்கிருந்த பாண்டவர்களும் கூட அப்படியே எண்ணினர். இந்த நிலையில் கிருஷ்ணர் செய்த சில சமிக்சைகளை உணர்ந்த திரௌபதி, பெரும் கூச்சலிட்டு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தாள். தான் ஒரு தேரோட்டியின் மகனை மணக்க மாட்டேன்! என்று அவள் கத்தினாள்.
அதைக் கேட்ட கர்ணனின் முகம் சிவந்தது. திரௌபதியின் மீது கடும் சினம் கொண்ட அவன், அவளை முறைத்தவாறே அந்த வில்லைத் தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றான். கர்ணனைத் தொடர்ந்து ஜராசந்தன், சல்லியன் போன்ற பல மன்னர்கள் அந்த வில்லுக்கு நாணேற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அங்கு போட்டியிடத் தயாராக இருந்த அனைத்து அரசர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் கர்ணனைத் தவிர வேறு எவராலும் அந்த வில்லை கரங்களால் தூக்கி நாணேற்ற இயலவில்லை. இதைக் கண்ட மக்கள் அனைவரும் அங்கு கூடியிருந்த மன்னர்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினர்.
அரங்கத்தில் பிரவேசித்த அர்ஜுனன் (Arjuna enters the Svayamvara competition) :
இந்த நிலையில் அந்தணர் கூட்டத்திலிருந்து வெளியே வந்த அர்ஜுனன், அந்த வில் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான். அதை கண்டு அங்குக் கூடியிருந்த அந்தணர்கள் பலர் அர்ஜுனனுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பேசத் துவங்கினர். பெரும் பலம் பொருந்திய சத்ரியர்களாலேயே செய்ய முடியாத அரிய செயலை, இவன் எப்படிச் செய்யப் போகிறான்? இவனால் அந்தணர்கள் அனைவரும் கேலிப் பொருளாக பார்க்கப்பட போகிறோம்! என்றார்கள் சிலர்.
ஆனால் வேறு சிலர் அவன் கைகளில் உள்ள பலத்தை பார்த்தீர்களா? அவன் உறுதியான நெஞ்சத்தோடு சிம்மத்தைப் போன்று நடந்து செல்கிறான். அவனிடம் திறமை இல்லாமலா இப்படி தைரியமாக நடந்து செல்வான்? நிச்சயமாக அவன் அந்த வில்லில் நாணேற்றி இந்தப் போட்டியில் வெல்வான். இப்படி அங்கு அந்தணர்களுக்கு இடையே ஒரு பெரும் போட்டி நடக்கத் துவங்கியது. அதோடு அங்கிருந்த மன்னர்களும் அவனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
சுயம் வரம் போட்டியில் வென்ற அர்ஜுனன் (Arjunan wins the Svayamvara competition) :
இந்த நிலையில் வில் இருக்கும் மேடையை அடைந்த அர்ஜுனன் ஈசனையும், கிருஷ்ணரையும் மனதில் நினைத்தவாறே, அதனை வலம் வந்து மண்டியிட்டு வணங்கினான். பிறகு கண்ணிமைக்கும் வினாடிகளில் அந்த வில்லிற்கு நாணேற்றி அதில் கணையைத் தொடுத்து சரியான இலக்கை நோக்கி அந்த கணையை எய்தான். சில நொடிகளில் அந்த அம்பானது வானத்தில் சுற்றிக் கொண்டிருந்த அந்த இயந்திர மீனின் கண்களை கிழித்துக் கொண்டு கீழே விழுந்தது. அதைக் கண்டு அனைவரும் பெரும் ஆரவாரம் செய்தனர்.
பூமாரி அர்ஜுனன் மீது பொழியத் துவங்கியது. அதோடு வெற்றிக்கான பாடல்களும், இசையும் முழங்கப்பட்டது. இந்த நிலையில் தங்களை யாரும் அடையாளம் கண்டு விடக்கூடாது என்று எண்ணிய தருமனும், நகுலனும், சகாதேவனும் யாரும் அறியாதவாறு அங்கிருந்து மெதுவாக சென்று, தாங்கள் தற்காலிகமாக தங்கியிருந்த அந்த குயவனின் இல்லத்தை அடைந்தனர். அர்ஜுனனுக்கு பாதுகாப்பாக பீமன் மட்டும் அங்கேயே இருந்தான். அந்தப் பெரும் சபையின் நடுவே பிரவேசித்த துருபதன், அர்ஜுனனை அடையாளம் கண்டதோடு, எனது மகளை இந்த அந்தணருக்குத் தர நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்! என்றான்.
துருபதன் மேல் கோபமடைந்த மன்னர்கள் (Kings angry over Drupada) :
அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த மன்னர்கள் அனைவரும் பெரும் கோபம் கொண்டனர். இவன் அனைத்து மன்னர்களையும் சுயம்வரத்திற்கு அழைத்து அவமதிக்கிறான்! சுயம்வரத்தில் ஒரு சத்திரியன் அல்லவா பங்கு பெற வேண்டும்! அதுதானே நியாயம்! அப்படி இருக்க துருபதன் எப்படி ஒரு அந்தணனுக்கு தன் மகளை மணமுடிக்க முடியும்? இவனை இப்போதே கொன்று விடலாம்! அதோடு அவரது மகளையும் கொன்று அந்த அந்தணனையும் பழி தீர்ப்போம்! என்று அனைவரும் தங்களது ஆயுதங்களோடு துருபதனையும், அர்ஜுனையும் தாக்க விரைந்தனர்.
இதைக் கண்ட பீமன் உடனே அங்கிருந்த ஒரு மிகப் பெரிய மரத்தைப் பிடுங்கி, அதை தன் கையில் கொண்டு வேகமாகச் சுழற்றினான். பீமனின் சாகசத்தைக் கண்டு அர்ஜுனன் கூட ஒரு நிமிடம் அசந்து போனான். அந்த அளவிற்கு அதிவிரைவாக அந்த மனிதர்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டான் பீமன். அதோடு அர்ஜுனனும் தனது கரங்களில் வில்லை ஏந்திக்கொண்டு தன்னையும், தன்னை சார்ந்தவர்களை எதிர்ப்பவர்களையும் எதிர்க்கத் தயாரானான்.
சுயம் வரம் நிகழ்ச்சியில் மூண்ட போர் (Svayamvara turned into war):
இதைக்கண்ட அந்தணர்கள் சிலர் அவனுக்கு துணையாக இருக்க விரும்பி அவர்களும் அந்த மன்னர்களை எதிர்க்க விரும்பினர். ஆனால் அர்ஜுனன் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டான். இந்த நிலையில் பெரும் மன்னர் படையொன்று கர்ணனின் தலைமையில் அர்ஜுனனை எதிர்க்கத் தயாரானது. அதோடு அர்ஜுனனுக்கு ஆதரவாக போருக்கு தயாரான அந்தணர்களையும் அவர்கள் அழிக்க நினைத்தனர்.
இந்த நிலையில் சில மன்னர்கள் அவர்களோடு போரிடத் துவங்கினர். சிலர் பீமனோடு போரிட்டனர். கர்ணன் அர்ஜுனனை நோக்கி விரைந்து வந்து அவனோடு போரிட்டான். இப்படி ஒரு கடுமையான போர் சூழல் அந்த சுயம்வர மண்டபத்தில் மூண்டது. இந்த நிலையில் அர்ஜுனனையும் பீமனையும் அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டனரா? அர்ஜுனனும் பீமனும் அங்கிருந்து எப்படி வீடு திரும்பினர்? போன்ற பல தகவல்களை அடுத்ததடுத்த பதிவில் பார்ப்போம்.