பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் இடையே நடந்த திருமணம்
( Marriage between the Pandavas and Draupadi )
அர்ஜுனனிடம் போரிடும் கர்ணன் (Karna fighting with Arjuna)
திரௌபதியின் சுயம்வரத்தில் அந்தணர் வேடத்தில் இருந்த அர்ஜுனன் வென்றதால் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் யுத்தம் மூண்டதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். கர்ணன் விரைந்து வந்து அர்ஜுனனை தாக்க முற்பட்டான். அதைக் கவனித்த அர்ஜுனன் தன்னுடைய கணைகள் கொண்டு கர்ணனை தாக்கினான். இப்படியே இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கணைமழையை பொழியச் செய்தனர். ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் கணை ஒன்று கர்ணனைத் தாக்க அதனால் அவன் மயங்கி விழுந்தான். ஆனால் முன்பை காட்டிலும் அதிக சினத்தோடு மயக்கத்திலிருந்து எழுந்த கர்ணன், அர்ஜுனனோடு மீண்டும் போரிடத் தொடங்கினான். இந்தப் போரானது மிகவும் கடுமையாக இருந்தது. இந்தப் போரை கண்டவர்களுக்கு வெறும் அம்புகள் மட்டுமே தெரிந்ததே தவிர யார் அம்பை எய்கிறார்கள்? அது யாரை நோக்கி செல்கிறது? என்பதையெல்லாம் கவனிக்க இயலவில்லை.
போரில் பின்வாங்கிய கர்ணன் (Karna's Setback) :
அந்த அளவிற்கு அம்புகள் பல அதிவேகமாக இருவரையும் நோக்கி பாய்ந்து கொண்டேயிருந்தது. அர்ஜுனனின் அதீத வீரத்தையும், அம்பெய்தும் திறமையையும் கண்ட கர்ணன் ஓ வீரனே! உண்மையில் நீ யார்! இந்திரனா? அல்லது அந்தணர்களில் சிறந்தவரான பரசுராமனா? அல்லது ஒருவேளை விஷ்ணுவா? உண்மையில் நீ யார்? இந்த உலகில் என்னை எதிர்த்து இவ்வளவு வேகமாக அம்பை எய்யும் வலிமை கொண்ட மனிதன் அர்ஜுனன் ஒருவனே ஆவான்! அப்படி இருக்கையில் ஆண் வேடமிட்டு மனித உருவம் கொண்ட நீ யார்? என்றான்.
இதைக் கேட்ட அர்ஜுனன் நான் இந்திரனும் இல்லை! பரசுராமரும் இல்லை! நான் ஒரு அந்தணன்! எனது குருவின் அருளால் பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களை கற்றறிந்தவன். என்றான் அர்ஜுனன். இதைக்கேட்ட கர்ணன் உலகையே அழிக்கக்கூடிய பிரம்மாஸ்திரத்தை அறிந்த ஒரு அந்தணனோடு, இந்த இடத்தில் இந்த நிலையில் போர் செய்வது சரியானது அல்ல! என்று எண்ணி அந்தப் போரில் இருந்து பின்வாங்கினான்.
சமாதானம் செய்து வைத்த கிருஷ்ணர் (Krishna who made peace) :
இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் பீமனும், சல்லியனும் மிகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சல்லியனை தூக்கி எறிந்தான் பீமன். கர்ணன் பின்வாங்குவதையும், சல்லியன் தூக்கி எறியப்படுவதையும் கவனித்த மற்ற வீரர்கள் தங்களது நிலையில் இருந்து பின்வாங்கத் துவங்கினர். அதோடு அந்தணர் வேடத்தில் இருந்த அவர்கள் இருவரும் செய்த சாகசங்கள் அனைத்தும், அங்கிருந்தவர்களை அர்ஜுனனையும், பீமனையும் நினைவுகூற செய்தது. இந்த நிலையில் அவர்களின் சண்டையில் குறுக்கிட்ட கிருஷ்ணர், அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தினார். அதன் பிறகு அந்த பெருங்கூட்டத்தில் இருந்து அர்ஜுனனும், பீமனும் திரௌபதியோடு வெளியில் வந்தனர்.
குந்தியின் வேத வாக்கு (kunti's role in Draupadi's marriage) :
இது ஒருபுறமிருக்க பிச்சை எடுக்கச் சென்ற தனது மகன்களில் அர்ஜுனனும், பீமனும் வெகுநேரமாகியும் திரும்பி வராததால் மிகுந்த துயர் கொண்டாள் குந்தி. வெகு நேரத்திற்குப் பிறகு அர்ஜுனனும், பீமனும் திரௌபதியோடு அந்த குடிசையை வந்தடைந்தனர். அந்த சமயத்தில் குந்தி வேறு ஒரு அறையில் இருந்தாள். திரௌபதியை தான் எடுத்த பிச்சையாக எண்ணி, அர்ஜுனன் அம்மா! நாங்கள் பிச்சை கொண்டு வந்துள்ளோம்! என்றான். உடனே குந்தி அதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றாள்.
இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அறையில் இருந்து வெளியில் வந்த குந்தி, திரௌபதியைக் கண்டு, ஐயோ! நான் என்ன வார்த்தை கூறினேன்! என்று அழத் துவங்கினாள். இந்த நிலையில் பாண்டவர்கள் அனைவரும் செய்வதறியாது தவித்தனர். இறுதியாக தமது தாய் வாக்கு தெய்வத்தை விட மேலானது என்று எண்ணி ஐவரும் திரௌபதியை மணக்கும் முடிவெடுத்தனர். உண்மையில் அந்த முடிவானது இதன் காரணமாகவே எடுக்கப்பட்டது என்று கூற வேண்டும்.
பாண்டவர்களை வேவு பார்த்த திருஷ்டத்யுமன் (Dhristadyumna who spied on the Pandavas) :
அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு கிருஷ்ணர் வருகை தந்தார். அவரை கண்ட பாண்டவர்கள் அவரின் பாதம் பணிந்து வணங்கினர். தங்களை கிருஷ்ணர் அடையாளம் கண்டு கொண்டதை எண்ணி அவர்கள் பயந்தனர். அவர்களோடு உரையாடி விட்டு சில மணி நேரங்களில் கிருஷ்ணர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு தனது தங்கையை உண்மையில் கூட்டிச் சென்றது யார் என்பதை அறிய நினைத்த திருஷ்டத்யுமன் அவர்கள் இருக்கும் குடிசையை அடைந்து, அங்கேயே ஓரிடத்தில் மறைந்து கொண்டான். இரவு வந்ததும் அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க எண்ணினர். அப்போது பாண்டவர்கள் ஐவரும் போர்க் கலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அவை அனைத்தையும் திருஷ்டத்யுமன் கவனித்துக்கொண்டிருந்தான்.
அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்ட துருபதன் (Drupada who identified Arjuna) :
பொழுது விடிந்ததும் அவன் தன் அரண்மனைக்குச் சென்று நடந்த அனைத்தையும் தன் தந்தையிடம் கூறினான். அதைக்கேட்டு துருபதன் நீ கூறுவதைப் பார்த்தால் அவர் நிச்சயம் அர்ஜுனனாகத் தான் இருப்பான்! அவனைக் கண்ட உடனேயே நான் யூகித்தேன்! ஆனாலும் நாம் இதனை 100 சதவிகிதம் முழுமையாக அறிய வேண்டும்! என்று கூறி பாண்டவர்கள் இருக்கும் குடிசைக்கு ஒரு புரோகிதரை அனுப்பினான் துருபதன். பாண்டவர்களின் குடிசையை அடைந்த அந்த புரோகிதர் அஸ்தினாபுரம் பற்றியும், துருபதன் பாண்டுவுடன் கொண்டிருந்த நட்பு பற்றியும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அதோடு அர்ஜுனனை துருபதன் தனது மகளுக்கு மணமுடிக்க விரும்பியதாகவும் கூறினார். இப்படி எத்தனையோ விடயங்களை அவர் பாண்டவர்களிடம் கூறியும், அவர்கள் தாங்கள் உண்மையில் யார் என்பதை அந்த புரோகிதரிடம் கூறவில்லை. இந்த நிலையில் துருபதனிடம் இருந்து பாண்டவர்களுக்கு விருந்திற்கான அழைப்பு வந்தது. அவன் அனுப்பிய ரதத்தில் ஏறி பாண்டவர்கள், குந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் அரண்மனைக்குச் சென்றனர்.
துருபதனிடம் உண்மையை எடுத்துரைத்த யுதிஷ்டன் (Yudhishthira tells the truth to Drupada):
அங்கு அவர்களுக்கு பலமான வரவேற்புடன் விருந்தும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு பார்வைக்காக பல பொருட்கள் வைத்திருந்ததை கடந்து சென்ற பாண்டவர்கள், போர்க் கருவிகளைக் கண்டு அவற்றை ஆராயத் துவங்கினார். இதை கவனித்த துருபதனும், அவரது அமைச்சர்களும் இவர்கள் நிச்சயம் அரச குலத்தைச் சார்ந்தவர்கள் தான் என்று தீர்மானித்தனர்.
அதன் பிறகு தர்மன் அருகில் வந்ததும் உண்மையில் தாங்கள் அனைவரும் யார்! அந்தணர்களா? அல்லது சத்திரியர்களா? என்று அறிந்தால் மட்டுமே அதற்கேற்ப என்னால் திருமண ஏற்பாடுகளை செய்ய இயலும்! என்றார் துருபதன். தர்ம நெறியில் வாழும் யதிஷ்டன் அவரிடம் உண்மைகள் அனைத்தையும் கூறுகிறான். நாங்கள் அனைவரும் சத்திரியர்கள், அதோடு நாங்கள் பாண்டுவின் புத்திரர்கள் ஆவோம்! என்றான். இதைக்கேட்ட துருபதன் பெருமகிழ்ச்சி கொண்டான்.
திரௌபதியின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை (Problem in Draupadi's marriage) :
அதோடு பாண்டவர்கள் எப்படி வாரணாவதத்தில் இருந்து தப்பினர்? அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது? போன்ற அனைத்து தகவல்களையும் துருபதனிடம் கூறினான். அதன் பிறகு உங்கள் தம்பி அர்ஜுனனை அழைத்து திருமணத்திற்கு தயாராக சொல்லுங்கள்! இன்றே அவருக்கும் எனது மகள் திரௌபதிக்கும் திருமணத்தை முடித்து விடலாம்! என்றான் துருபதன். உடனே தனது தாய் கூறிய வார்த்தையை பற்றி துருபதனிடம் கூறினார். அதோடு திரௌபதியை தாங்கள் ஐவரும் மணக்கப் போவதாகவும் அவர் கூறினார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி கொண்ட துருபதன், ஒரு ஆண்மகன் பல பெண்களை திருமணம் செய்து கொண்டதை நான் பார்த்துள்ளேன்! ஆனால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொண்டதை பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது!
அதோடு அதுபோன்ற திருமணம் எந்தஒரு வேதத்திலும் குறிப்பிடப்படவில்லை! அப்படி இருக்கையில் தர்ம நெறியில் வாழும் நீர் எப்படி இதற்கு சம்மதம் தெரிவித்தீர்? என்றான் துருபதன். அதைக் கேட்டதும் எனது தாய் கூறியது எனக்கு வேதவாக்கு! அதோடு எனது மனதிற்கு அதுவே சரியென்று பட்டது! அதனாலேயே நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த முடிவெடுத்தோம்! என்றான் யுதிஷ்டிரன். யுதிஷ்டிரனின் வார்த்தையைக் கேட்டு செய்வதறியாது தவித்த துருபதன், நீயும் எனது புதல்வன் திருஷ்டத்யும்னும் திரௌபதியுடன் இதுகுறித்து கலந்து பேசி ஒரு பதிலைச் சொல்லுங்கள்! அதன் படி நான் நடக்கிறேன்! என்றான் துருபதன்.
திரௌபதியின் திருமணத்தில் வியாசரின் பங்கு (Vyasa's role in Draupadi's marriage) :
இந்த நிலையில் அங்கு வந்த வியாசரை சிறந்த முறையில் வரவேற்றனர். அதன்பிறகு திரௌபதியின் திருமணத்தில் உள்ள குழப்பத்தை பற்றி வியாசரிடம் கூறினார். அதைக் கேட்டறிந்த வியாசர் இது பற்றி உங்கள் அனைவரின் கருத்தையும் நான் கேட்க விரும்புகிறேன் என்றார். முதலில் துருபதன் பேசத் துவங்கினார். இதுபோன்ற ஒரு திருமணம் எனக்கு அறம் சார்ந்ததாக தெரியவில்லை! ஆகையால் இதை என் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது! என்றான்.
அவனைத் தொடர்ந்து பேசிய திருஷ்டத்யும்னனும் அதையே கூறினான். அவனைத் தொடர்ந்து பேசிய யுதிஷ்டிரன் தனது மனமானது அறத்தை தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்காது! அப்படி இருக்கையில் தனது மனமானது இதை ஏற்றுக் கொள்கிறது! அதோடு எனது தாயின் ஆணையும் இதுவே! ஆகையால் இதற்கு எனக்கு முழு சம்மதம்தான்! என்றான். அவனைத் தொடர்ந்து பேசிய குந்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். இப்படி பலதரப்பட்ட கருத்துக்கள் வியாசரிடம் கூறப்பட்டது.
பாண்டவர்களின் திருமணம் (Pandavas Marriage) :
உடனே வியாசர் துருபதனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு சென்று அவரிடம் சில தேவரகசியங்களை எடுத்துரைத்தார். அதன்படி திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பது முன்பே எழுதப்பட்ட விதி என்றும், அந்த ஐவரும் தேவர்களின் அம்சம் ஆவர் என்றும் கூறி அது சம்பந்தமான அத்தனை ரகசியங்களையும் துருபதனிடம் கூறி முடித்தார். இதைக் கேட்ட துருபதன் அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். அன்றைய தினமே ஒரு மிகச் சிறந்த நாளாக இருந்ததால் அந்த திருமணத்தை அன்றே வைத்துக் கொள்ளலாம் என்று வியாசர் கூறினார். அதன்படி யுதிர்ஸ்டனுக்கும், திரௌபதிக்கும் அன்றே திருமணம் நடந்தது.
அந்த திருமணத்தை காண அந்நாட்டு மக்கள் பலரும் வந்திருந்தனர். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் மற்ற பாண்டவர்களுடன் திரௌபதிக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஒவ்வொருவரையும் மணப்பதற்கு முன்பு, இறைவனின் அருளால் திரௌபதி தனது கன்னித்தன்மையை மீண்டும் பெற்றிருந்தாள். இந்த திருமணத்திற்கு பரிசாக ஏராளமான யானைகள், குதிரைகள், போர் கருவிகள் என பலவற்றை துருபதன் பாண்டவர்களுக்கு அளித்தான். அதன்பிறகு பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும் அங்கேயே சில காலம் தங்களது வாழ்க்கையைக் கழித்தனர். அதன் பிறகு அவர்களது வாழ்வில் எது போன்ற இன்னல்கள் எல்லாம் வந்தது? என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.